Wednesday, September 17, 2014

இவைகள் வார்த்தைகள் மட்டும் அல்ல

முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோஷலிஸ்டு சித்தாந்தம்.... , நடுவழி ஏதும் கிடையாது (ஏனென்றால் மனிதகுலம் ஒரு "மூன்றாம்" சித்தாந்தத்தைப் படைக்கவில்லை, மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத்தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே சோஷலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருளாகும். மூன்றாம் வழி கிடையாது
  என்ன செய்ய வேண்டும்? - லெனின்


தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்படவேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே -அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிரத்துப் போராடுவது, இன்றியமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின்  இன்றியமையாமைப் பற்றிய துணுபு மட்டுமே -  வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிஸத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும், சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப்பகுதினரைச் சேர்ந்தவர்கள் 
                                          - என்ன செய்ய வேண்டும் பக்கம்47 - 


பாட்டாளி வர்க்கப் புரட்சி - முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்கிறது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாக மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது.

“தன் தலைவரிடம் எல்லையற்ற அன்பையும் மரியாதையையும் கொண்டிருப்பது இயல்பான ஒன்றெனக் கருதலாம். ஆனால் தலைவரின் கட்டளைக் குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது வேறு. இரண்டாவது நிலையால் கேடான விளைவுகள் உண்டாகும். உயர்வான எதையும் மதிப்பது நல்ல பண்பாகும். அத்தன்மையில் உயர்ந்த கொள்கைகளையும் பண்பையும் கொண்டுள்ள மனி தனை மதிப்பது தேவையானதுதான். அதற்காக அவரி டம் கண்மூடித்தனமான விசுவாசியாக இருக்கக்கூடாது. தன் சுயமரியாதையை இழந்து தலைவரை வழி படுவது என்பது தன்னையே இழிவுபடுத்திக் கொள்வ தாகும். தலைவரை மதிப்பது என்பது தன் சுய அறிவு டன் சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை இழக்காத ஒன்றாக இருத்தல் வேண்டும். கண்மூடித்தனமாக வழிபடுதல் என்பது ஒருவனை முழு முட்டாளாக - அடிமையாக ஆக்கிவிடும்.”

பாபாசாகேப் அம்பேத்கர் 

தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல் அதைச் சரிவெசய்தற்குரிய வழிகளை ஆராய்தறிந்து வகுத்துக் கொள்ளுதல் - இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம், இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும், இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும் பிறகு வெகுஜனங்களுக்கும் போதமளித்துப பயிற்றுவிக்க வேண்டும். ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள "இடதுசாரிகள்" இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்கள் கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர். ......
லெனின்

எங்கெல்ஸ் கூறுகிறார்:-
இன்றைய சமுதாயத்தின் மூன்று வர்க்கங்களான நிலவுடைமைப் பிரபுக்       குலம், முதலாளி வாக்கம் மற்றும் பாட்டாளி வர்க்கம் ஒவ்வொன்றுக்கும்    அவற்றுக்கே உரிய ஒழுக்கநெறி இருப்பதை காணும் பொழுது நாம் ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடியும், கடைசியாக நோக்குமிடத்து மனிதர்கள் தமது வர்க்க நிலைமை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நடைமுறை உறவுகளிலிருந்தே - அவர்கள் உற்பத்தியையும் பரிவர்த்தனையையும் நடத்தி வரும் பொருளாதார உறவுகளிலிருந்தே - உணர்வு பூர்வமாகவோ அல்லது உணர்வுபூர்வம் இன்றியோ தமது அறநெறிக் கருத்துக்களைப் பெறுகிறார்கள்.

... ஜங்கம சொத்துக்களின் தனியார் உடைமை வளரத் தொடங்கிய தருணம் முதல் இந்தத் தனியார் உடமை நிலவிய எல்லா சமூகங்களும் இந்த ஒழுக்க நெறி ஆணையைப் பொதுவாக வைத்திருக்க வேண்டியிருந்தது, நீ திருடக்கூடாது. இதன் மூலம் இந்த ஆணை ஒரு சாசுவத ஒழுக்க நெறி        ஆணையாகி விடுமா? எவ்வழியிலும் ஆகாது. திருடுவதற்கான எல்லாச் செயல் நோக்கங்களும் அறவே ஒழிக்கப்பட்ட ஒரு சமுகத்தில் அதன் காரணமாக அதிகமாய்ப் போனால் பைத்தியக்காரர்கள் மட்டுமே எப்பொழுதாவது திருடுவார்கள் என்ற நிலையில்  நீ திருடக் கூடாது  என்ற சாசுவத உண்மையினை பயபக்தியுடன் பறைசாற்ற முயலும் ஒர் ஒழுக்கநெறிப் பிரசாரகர் எவ்வாறு சிரிப்புக்கு ஆளாவார் தெரியுமா!

எனவே, ஒழுக்க நெறி உலகத்திற்கும் அதன் நிரந்தரக் கோட்பாடுகள் உள்ளன, அவை வரலாற்றுக்கும் நாடுகளிடையான வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு நிற்பவை என்ற சாக்கில் ஒரு சாசுவதமான அறுதியான என்றென்றும் மாற்றவொண்ணா அறநெறி விதி என்ற முறையில் ஏதேனும் ஓர் ஒழுக்க நெறி சூத்திரத்தையும் எம்மீது திணிக்க  நடத்தும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கிறோம். இதற்கு மாறாக, இறுதியாக ஆய்வுசெய்து பார்க்கும் பொழுதில் இதுகாறுமுள்ளதான எல்லா ஒழுக்கநெறிக் கொள்கைகளும் அந்தந்தக் காலங்களில் நிலவிய சமூகத்தின் பொருளாதார நிலைமைகளின் விளைவே என்று நாம் மெய்ப்பித்து நிலைநிறுத்துகிறோம். சமூகம் இதுவரையில் வர்க்கப் பகைமைகளிலேயே இயங்கி வந்திருப்பதால், ஒழுக்க நெறி எப்பொழுதுமே வர்க்க ஒழுக்க நெறியாக இருந்து வந்துள்ளது, அது     ஒன்றா ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் மற்றும் நலன்களையும் நியாயப்படுத்தியுள்ளது அல்லது ஒடுக்கப்பட்ட வர்க்கம் போதியளவு வலுப்பெறத் தொடங்கியது முதல் இந்த ஆதிக்கத்திற்கு எதிரான அதன் கோபாவேசத்தின், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன்களின் சின்னமாக அமைந்துவிட்டது.                  

- டூரிங்குக்கு மறுப்பு - பக்கம்   165 - 167