Thursday, June 9, 2011

கீற்று-- சிறுகதை


கீற்று
- சிறுகதை

ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் வங்கிக் கடன் வாங்க எனக்கு ஜாமீன்தாரர் கிடைக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஒராண்டிற்கு முன்பு எனக்கு ஜாமீன்தாரராக இருந்த தொழிலாளி இறந்துவிட்டார். வேறொரு தொழிலாளி ஐ£மீன் கையெழுத்து போட்டால்தான் கடன் தருவேன் என்று கூட்டுறவு வங்கி அடம் பிடித்தது.
 அவசரத்திற்கு பணம் கிடைப்பதில்லை. கல்விக் கடன் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் ஜாமீன்தாரர் இல்லாமல் தருகிறார்கள் என்றதும், சம்பளச் சான்றிதழ் வாங்க தலைமை கணக்கு அதிகாரியிடம் சென்றேன். ஆலோசனை என்ற பெயரில் அவர் தொழிலாளி ஒருவரை எச்சரிக்கை செய்தார்.
 தெரிந்தவர்கள் நண்பர்கள் என யாருக்கும் ஜாமீன் போடாதே! சொந்தகாரனுங்களைக் கூட நம்பாதே! கடனை அவனுங்க கட்டலனா ஜாமீன்தாரர் தான் கட்டனும். நீ தான் கஷ்டபடனும். அதனால் இந்த விசயதுல தலையிடாதே
  சிட்டி பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் என்று தொழிலாளர்கள் கடன்களை வாங்கி செலவு செய்து விடுகின்றனர். நீதிமன்ற தாக்கீதுகளை அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர். சம்பளச் சான்றிதழ் தந்தால் கடனை தரும் நிதி நிறுவனங்கள். பணம் கிடைத்தால் போதும் என்று கடனை எல்லா நிறுவனங்களிடமும் தொழிலாளிகள் வாங்கி குவிக்கின்றனர். கடனை அந்த தொழிலாளி அடைக்காமல் போகும் பொழுது, ஜாமீன் போட்டவரிடம் பணம் பிடித்து தரும்படி சம்பந்தப்பட்ட பைனான்ஸ கம்பெனிகள், இப்படி நிறைய நீதிமன்ற தாக்கீதுகளை அனுப்புவதை பார்த்து பார்த்து சலித்துப் போனதால் சம்பளக்கணக்கு அதிகாரி இப்படியாக முன் எச்சரிக்கைகளை அள்ளி விட்டு கொண்டிருந்தார்.
 இதற்கு முன்பு எனக்கு ஜாமீன் போட்டவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. அவர் முகத்தைக்கூட நான் பார்க்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர்களில் ஒருவர் வந்து தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. எனது பெயரில் வங்கியில் தான் கடன் வாங்கி, எடுத்துக்கொள்வதாக கூறினான்
 நிமிடநேரம் கூட நான் தயங்கவில்லை. தலையை த்தலையை ஆட்டினேன். கடன் விண்ணப்பத்தை வாங்கி அதை நிரப்பி என்னிடம் கையெழுத்து வாங்கி, இன்னொரு பிரிவில் வேலை செய்த வேறொரு தொழிலாளியிடம் ஜாமீன் கையெழுத்து வாங்கி, வங்கியில் சேர்ந்துப் பணத்தை நண்பன் பெற்றுக் கொண்டான்
 அவன் எவ்வளவு தொகை கடனாக வாங்கினான். எனக்கு ஜாமீன் போட்டவர் யார்? அவர் எவ்வளவு கடன் வாங்கினார். இதற்கு வட்டி எவ்வளவு என்கின்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் நான் செல்லவில்லை. நண்பன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற தோழமை தான் என்னிடம் மேலோங்கி இருந்ததால், இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. நண்பனும் அந்த கடனை எந்த பிரச்சனையும் தராமல் அடைத்து விட்டான்!
 தொழிற்சாலையில் வேலைக்கு தேர்வு செய்த பொழுது நாங்கள் நூறுபேருக்கு மேல் அப்பொழுது புதியாக சேர்ந்தோம். பல இடங்களில், பலச் சமூக நிலைகளில் இருந்து வந்தவர்களைஅந்த தொழிற்சாலை தொழிலாளி என்றப் பிரிவாக சமைத்து உட்செரித்துக் கொண்டது. எப்படி பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்கள் ஒருங்கிணைந்து பயன்மிகு பண்டமாக மாறுகிறதோ அதன் வழி நாங்கள் அனைவரும் இணையும் புள்ளியாக தொழிற்சங்கம் இருந்தது. இளம் இரத்தம் தொழிற்சங்கப் பணிகளில் செயல் ஊக்கத்துடன் முனைப்போடு செயல்பட்டேன்.  புதிய உறவுகள் விரிந்தன. புதிய புதிய சிந்தனைகள், தத்துவங்கள் அறிமுகமாயின. தேடுதல்  வேட்டை தொடர்ந்தது! தொழிற்சங்கம் கம்யூனிசத்தின் பால பள்ளி என்பதை புரிந்தது. அதன் உயர் கல்வியை நோக்கி எனது கவனம் குவிந்தது. அது என்னை நச்சல்பாரி இயக்கத்துடன் இனம் காணச் செய்தது. எனது செயல்பாட்டுக் களம் விரிவடைந்து. ஆலையை தாண்டி அனைத்தும் தழுவியதாக அவை மாறியது. எனது செயலின் தீவிரம் சக நண்பர்களை, தொழிற்சங்கத்  தோழர்களை ஆச்சிரியப்பட வைத்தது.
 ஒரு நல்ல நாளில், வெள்ளிகிழமையன்று தொழிற்சாலை வாசலிலே என்னை கியூஉளவு துறையினர் மடக்கினர். ஐய்யா கூப்பிடுகிறார் என்று அன்புடன் வெள்ளை வேனில் அள்ளிப்போட்டுப் பறந்தனர்.
 நாளும் அதிகரிக்கும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க  ஆட்சியாளர்கள் பல பாதுகாப்பு வால்வுகளை வைத்துள்ளனர். மக்களை திசைத் திருப்ப பயன்படும் இந்த வால்வுகளில் ஒன்று தான்  தீவிர வாதம். இந்த வார்த்தை பயன்படுத்தி பணமும், பதக்கங்களும், புகழும், பதவிஉயர்வுகளும் பெற திணவெடுத்த காவல்துறை அதிகாரிகள் துடிப்பார்கள். தர்மபுரியில் தீவிரவாதிகள் பயிற்சிமுகாம் என்று ஊடகங்கள் பதைபதைத்து ஊகங்களை அள்ளி விட்டனர்.
  என்னை சித்ரவதை முகாமில் கொண்டு சேர்ந்தனர். போலிஸ் நிலையத்தில் பரந்த மாநாட்டு அறை பத்தடிக்கு பத்தடி தள்ளி பதினைந்து தோழர்களுக்கு மேல் சுவரைப் பார்த்த வண்ணம் குந்தி வைக்கப்பட்டு இருந்தனர். மயான அமைதி நிலவிய இடத்தில் கழுத்தைத் திருப்பினாலும், கண்விழிகளை உருட்டினாலும் லாடம் பதித்த பூட்ஸ் உதைகள் சரமாரியாக விழுந்தன. காவலுக்கு இருந்த பாய்ஸ் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். அழைத்துச் சென்றவனை உதைத்து உட்கார வைத்தனர். ஒரே பார்வையில் ஒராயிரம் விசயங்களைப் புரிந்துக் கொண்டேன். மாநிலம் எங்குமிருந்தும் தோழர்களைப் பிடித்து வந்துள்ளனர். ஒருசில நாட்களாக நடைபெறும் இந்த நடவடிக்கை எனக்கு தெரியாமல் போனது எப்படி?
  சில தோழர்கள் வலியில் முணகிக்கொண்டிருந்தனர். என்னை நான் உறுதிபடுத்திக்கொள்ள மனதளவில் தயார் செய்ய முயற்சி  செய்து கொண்டிருந்தேன். இப்படி பட்ட நேரத்தில், அசையாமல் ஒரே இடத்தில் பார்வை சுவரில் இருக்கும்படி உட்கார வைக்கும் பொழுது சிறிய காலடி சத்தம் கூட துணுக்குறச்செய்தது. ஈக்கள்    ரீங்காரமிடும் சத்தம் கூட தெளிவாக கேட்டது. இரவு மெல்ல கவிழ்ந்தது. இருள் பரவியது. ஜீப் வரும் சத்தம் கேட்டது.
 அந்த சத்தம் சிலரிடம் உடலைகளை நடுங்கச் செய்வதை என்னால் பார்க்க முடியாவிடினும், உணர முடிந்தது.
 ஒரு தோழரை அழைத்து கொண்டு பக்கத்து அறைக்கு சென்றனர்.  தொடர்ந்து . . . அடிஉதை . . . அலறல்கள். எனது உடல் வேர்வையில் நனைந்து சில்லிட்டது. அந்த தோழரிடம் விசராணை முடித்து இழுத்து வந்து போட்டனர். வலியில் முணகியபடி இருந்தார்.
 இன்னும் இருவரை அழைத்துச் செல்வதை உணர்ந்தேன். அய்யோ என்ற அலறடன் அடி உதைகள் விட்டு விட்டு கேட்டது.
 என்னையும் ஏட்டு ஒருவன் அழைத்து சென்றான். உச்சி மீது வான் இடிந்து வீழிணும் அச்சமில்லை  அச்சமில்லை அச்சம்  என்பதில்லையே...என்று அறிவு அறியுறுத் தினாலும் மனதின் பயம் அதை வென்றது. அங்கே கண்ட காட்சி ஒருகணம் என்னை திகைக்க வைத்தது!
 தோழர்களை அரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதைச் செய்து கொண்டிருந்தனர். உடல் முழுவதும் லட்டி  கொம்புகளின் தடயங்களாக இருந்தன.
டோய் நான் சொல்றத ஓழுங்கா செய்யனும். இரண்டு பேரும் இரண்டு கைகளாலும் ஒருத்தரை ஒருத்தர்  மாறி மாறி கன்னத்துல அறையனும். உண்மை சொல்ற வரைக்கும் அடிக்கனும்
  அடிஉதைகளையெல்லாம் கூட ஒருவகையாக சமாளித்த தோழர்களுக்கு இதைக் கேட்டதும் துணுக்குற்றனர். எல்லா உறவுகளுக்கும் எல்லையும், வரையரையும் உண்டு. அதைத் தாண்டும் பொழுதுஅந்த உறவுகளுக்குள் முரண்பாடுகள் தோன்றி பிணக்காக மாறும் வாய்ப்பு உண்டு. தோழமை, தோழர் என்கின்ற உறவு இதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலானது. அதை தான் அந்த அதிகாரி தனது சித்ரவதையின் கச்சாப் பொருளாக இங்கு பயன்படுத்தினான்.
ஒரே கட்சி குழுவில் இருக்கும் அவர்களின் தோழமை உணர்வு வேதனையாகி அவர்களின் கண்களின் கண்ணீரை துளிர்க்கச் செய்தன.
  ஆரம்பிங்கட்டா ... இன்னா ஒவ்வொருத்தன பார்த்திட்டு நிக்கிறீங்க .. பாயஸ் நீங்க ரெடியா
 எஸ் சார்
இந்த கூட்டுக் குரலின் சொந்தகாரர்களான பாய்ஸ் தோழர்களை சுற்றிலும் சிறிது  இடைவெளி விட்டு அரசாங்கச் செலவிலும், இலஞ்ச பணத்திலும் முறுக்கேறிய உடலை மேலும் முறுக்கேற்றி காட்டினர்
 தங்கள் எதிரிகள் தங்களை சித்ரவதை செய்வதை அவர்கள் உணர்த்து புரிந்து கொள்ள முடிந்தது. தனது தோழனை தானே அடிப்பதை அவர்களால் செரிமானம் செய்ய முடியவில்லை.
 ஒருவரை ஒருவர் மெதுவாக கன்னத்தில் அறைந்து கொண்டனர்.
  டோய் பலமாக அடியுங்கட’’
 பலமாக அடிப்பது போல மெதுவாகத்தான் அறைந்துக் கொண்டனர்.
 இன்னாங்கடா ... மாமா மச்சான் விளையாட்டா விளையாடுறீங்க .. பாய்ஸ்!
அடுத்த நொடியில் இரும்பு லாடம் பதித்த பூட்சுகள் சுற்றிலும் எங்கு உடலில் அடிவிழும் என்று தெரியாத அளவிற்கு   உடலெங்கும் மாறி மாறி உதைகள் விழுந்தன. தோழர்கள் தடுமாறி விழுந்தாலும் அவர்கள் விடவில்லை.
போதும்மடா ...  சொன்னத செய்யலன்னா மிதிச்சே  கொன்னுடுவேன்
 வேறு வழியின்றி ஒரு தோழர் முதலில் பலமாக இன்னொரு தோழரை அறைந்தார். இன்னொருவரும் பலமாக  பலமாக அறையாமல் தயங்கி தயங்கி அடித்தார்.
அந்த போலிஸ்அதிகாரி திரும்பி என்னை சித்ரவதைச் செய்ய இன்னொரு அதிகாரிக்கு ஆணையிட்டார். சரமாரியாக லட்டி கம்புகள் உடலின் அனைத்து இடங்களையும் பதம் பார்த்தன. அலறி துடித்தேன்.
 என்னிடம் அவர் விசரணையைத் துவக்கினார். பெயர் ,சாதி என்று ஆரம்பித்து எனது சுய குறிப்பை முடித்து எனது இயக்கச் செயல்பாடுகளை கேட்டனர். நான் பட்டும் படமாலும் பதில் கூறி கொண்டு இருந்தேன். தலைமறைவாகியுள்ள சில தோழர்களின் பெயரைக் கூறி அவர்களை  தெரியுமா, அவர்கள் இருப்பிடங்கள்  எவை என்று கேட்டு அவர் நோட்டம் விட்டார்.
எனக்குத் தெரியாது என்று கூறினேன், அந்த அதிகாரி மிகவும் கோபம் கொண்டார்.
இவனையும் அவனுங்க  கூட சேருங்கடா ... பாய்ய்ஸ்
 மூணு பேரும் மாறி மாறி அடிச்சிக்கனும் வட்டமாய் நின்னுக்கிட்டு அடிச்சிக்க .. எவன் சரியாக  அடிக்க வில்லையே அவனை கவனிக்க பாய்ஸ்
நாங்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்தோம். என்னை பார்த்த அந்த தோழரின் பார்வையை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அந்த கண்களின் ஒளிக் கீற்றுகள், தோழமை இன்னும் கூட பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றது. அந்த பார்வையை மறக்க முடியுமா?
அலுவலக வேலை மாற்றிலாகி போனதால் அப்பாவுடன் எங்கள் குடும்பமும் இடம் பெயர்த்தது. ஒன்றாம் வகுப்பில் புதிய பள்ளியில் இடையில் சேர்க்கப்பட்டேன். என்னை சேர்த்து விட்டு அப்பா வேலைக்கு போய் விட்டார். மதிய உணவுக்கு மணி அடித்தவுடன் மாணவர்கள் அவரவர் சாப்பாட்டு கூடையை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
அம்மா எனக்கு மதிய உணவு கொண்டு வர நேரமாகிக்  கொண்டிருந்தது. எனக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. பையன்கள் பாத்திரத்தைப் திறந்துச் சாப்பிட ஆரம்பித்தனர். எனது பசி இன்னும் அதிகமாகியது. எனக்கு   அழுகைஅழுகையாக வந்தது. அப்பொழுது ஒர் ஆதரவு கரம் என்னை தொட்டது. தனது மதிய உணவை அவன் எனக்கும் பகிர்த்தளித்தான். அம்மா பிறகு உணவு கொண்டு வந்தவுடன் அதையும் ஜோடிப் போட்டு கொண்டு சாப்பிட்டோம்.
 இப்படி ஆரம்பித்த நட்பு பள்ளி, கல்லூரி வரை நீண்டது. எங்கும் எங்கள் இருவரையும் சேர்ந்து தான் பார்க்க முடிந்தது. நான் இயக்கத்தில் சேர்ந்தவுடன் அவனையும் அதில் இணைத்தேன். ஆரம்பித்தில் சிறிது தயக்கம் காட்டிய அவன் பின் படிபடியாக புரித்து கொண்டு வேகமாக இயக்கப்பணி ஆற்றினான். முழு நேர ஊழியனாக இயக்கத் தில்  வளர்ந்தான்.
அவனை தான் இன்று இப்பொழுது இந்த சித்ரவதை முகாமில் பார்க்கிறேன். என் பலம்-பலவீனத்தை புரிந்த நண்பன்! தோழன்!!  அவன் என்னை அடிப்பானா? அல்லது நான் அவனை அடிப்பதா? தயக்கமும், வேதனையும்மேலேங்கியது. நான் சிறுவயதில் சந்தித்த அதே பார்வை! பரிவு!! தோழமைஉணர்வு!!!
சார்....சார்....இவர் புதியதாக இப்பத்தான் இயக்கத்திற்கு வந்தவர் அவருக்கு ஏதும் தெரியாது என்று தோழன் இழுத்தான்.
அந்த உளவு அதிகாரியின் முகத்தில் எக்காளச்  சிரிப்பு தாண்டவம் ஆடியது.
பாய்ஸ் இவனை ரூமுக்கு கூட்டி போய் விடுங்க. அய்யாவுக்குத்தான் எல்லாமும் தெரியும் போல, அவரை கவனிப்போம்
என்னை மாநாட்டு அறைக்கு அழைத்து சென்று சுவரை பார்த்த வண்ணம் அமரச் செய்தனர்.
சிறிது நேரத்தில் கேட்ட அந்த அலறல் ஒலி என் உடலைத் தூக்கி வாரிப்போட்டது. நடுக்கம் என் உடல் முழுவதும் சில்லிட்டுப் பரவியது. சில மணி நேரம், விட்டு விட்டு  அந்த சித்ரவதையின் அலறல் கேட்டுக் கொண்டே இருந்தது அந்த அலறல் இன்னும் கூட காதில் ஓலிப்பது மாதிரி சில நேரங்களில் கேட்கிறது.
நானும் அவனும் சமகாலத்தில் இயக்கத்தில் இணைந்தவர்கள். அவனுக்கு தெரிந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் எனக்கும் தெரியும். கொஞ்சம் கூட குறைய இருக்கும். அவ்வளவு தான்! எனக்கு ஏதுவும் தெரியாது புதியதாக இணைந்த தோழர் என்று ஏன் பெரிய பொய்யை சொன்னார். உடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே என்பதா இன்றுவரையிலும் இந்த கேள்விக்கு விடைதெரியவில்லை.
இருள் பிரியும் நேரத்தில் இரத்தக் கூளமாக அந்த தோழரை அள்ளிக் கொண்டு வந்து கிடத்தினர். நீண்ட நேரம் தெறிக்கும் வலியில் அரற்றிக்கொண்டிருந்தார். அவர் முகம் வீங்கி இரத்த காயங்களுடன் இருந்தது. அவரை பார்த்து கொண்டிருந்த எனது நெஞ்சு வெடித்து விடுவது போல் இருந்தது. கண்கள் மெதுவாக திறந்தார். அந்த இருளிலும் தோழரின் கண்கள் பிரகாசமான ஒளி கீற்றுகளை அள்ளி வீசியது. அந்த ஒளிக்கீற்றை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியவில்லை.
கடைத் தெருவில் நாலு பேருடன் சேர்ந்து குடித்து விட்டு கலாட்டா செய்ததாக வழக்குப்போட்டனர். ஜாமீனில் வெளிவந்த பின்பு அந்த நான்கு பேரையும், கடைத்தெருவையும்தேடித் தேடிப்பார்க்கின்றேன். கண்டு பிடிக்கவே முடியவில்லை. கொலம்பஸ்சைத் தான் கூப்பிட்டு கண்டுபிடிக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாய்தா ...வாய்தா..வாய்தாக்கள் என்று இந்த பொய் வழக்கில் நீதி மன்றத்தால் அலைகழிக்கப்பட்டு நாய் படாதப் பாடு பட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, எந்த சாட்சிகளும் சாட்சி சொல்லாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன்.
     அடிக்கடி உளவுத் துறையினர் தொழிற்சாலையில் வந்து சந்தித்து விட்டு சென்றனர். இந்த காலத்தில் என்னைச் சுற்றி கண்ணு, மூக்கு, காது, வாய் என்று என்னவெல்லாம் இருக்குமோ அதை எல்லாம் சேர்த்து பயங்கர தீவிரவாதி பிம்பம் எனக்கு பொதுசனம் உருவாக்கி விட்டது.
இந்த பிம்பத்துடன் இன்று வரை வாழப் பழகி விட்டேன். சிறிது காலம் இயக்கத்தில் செயல்ப்பட்ட நான் காலப்போக்கில் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் என்னை வளர்த்தெடுக்க போதாமையால் சிறிது சிறிதாக அதிலிருந்து  விலகி வந்து விட்டேன்.
 இருப்பினும் ஜாமீன் என்றதும் என்னை மேலும் கீழும் சக ஊழியர்கள்  பார்க்கின்றனர். நண்பர்களிடம் ஜாமீன் போடும்படி கேட்டேன் முதலில் போடுவதாகக்கூறி விட்டு பின்பு மறுத்து விட்டனர்.
பொதுயுடமை இயக்கத்தை விட்டு வெளியேறி வந்தாலும் தொழிற் சங்க பணிகளில் தோய்வில்லாமல் கடமை ஆற்றினேன். என்னுடைய பணி பல தொழிற்சங்கப் போராட்டங்களை கிரியா ஊக்கியாக இருந்து வெற்றிகாண வழிவகுத்தது.
தொழிற்சங்கத் தலைவர்களிடம் ஜாமீன் தரும்படிக்  கேட்டேன்.
தலைவா... ... உங்களுக்கு இல்லாததா போட்டாப் போச்சு
இந்த பேச்செல்லாம் வெறும் போச்சாகவே முடிந்து  போனது.
வேற ஒருத்தருக்கு ஜாமீன் போட்டிருக்கேன் தோழர் உங்களுக்கு ஏற்பாடு பண்றேன்
 இப்படிச் சொல்லியே ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இந்த பேச்சை ஆரம்பித்தால் மெதுவாக ஒரங்கட்ட ஆரம்பித்தனர். எனக்கும் கேட்டு கேட்டு அலுத்துபோய் விட்டது. இத்தனைக்கும் ஜாமீன் போட்டவர்கள் கதைகளை கேட்டால் சந்திச் சிரிக்கும். சம்பளக் கணக்கு அதிகாரியை கணக்கு பண்ணியும், வீட்டில் பொண்டாட்டி பிள்ளை குட்டிகளுக்கு சொகமில்லை என்றும் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாத தொழிலாளிகள் பலர் இருந்தனர். இவர்களை நம்பி ஜாமீன் போட்ட ஊழியர்கள் அடுத்த லோன் போடுவது முடியாது. ஜாமீன்தாரர்கள் கட்டாத கடனுக்கு இவர்கள் பணத்தையும் சேர்த்து பிடித்து விடுவார்கள்.
இன்னொரு சாரார், இந்த கூட்டுறவு வங்கி மட்டுமல்ல,பல தனியார் வங்கிகளிலும் சக ஊழியர்களை, நண்பர்களை நைச்சியம் பண்ணி ஜாமீன் வாங்கி விட்டு நட்டாற்றில் விட்ட கதைகள் பல வண்டி வண்டியாய் கிடக்கிறது. ஒருசிலர் பல இலட்சங்களை இவ்வாறு சுருட்டிக் கொண்டு தன்னால் பணம் கட்டமுடியாது, நீதிமன்றத்தில் கட்டுகிறேன் என்று வாய்உதார் விடுகின்றனர்களும் உண்டு. இதில் ஆண், பெண் ஊழியர்கள் என்ற பேதமில்லாமல் எல்லாரும் ஏமாற்றினர்.
இந்த சிக்கல்கள் என்னிடம் கிடையாது என்றும், நேர்மையானவன், நாணயமானவன் என்று அக்மார்க் சான்றைச் சகதொழிலாளிகள் வழங்கினாலும், எனக்கு ஜாமீன் போடமட்டும் தயங்கினர். எனக்கு ஜாமீன் போடாமல் அவர்களை தடுப்பது ஏது என்று எனக்கு விளங்கவில்லை.
இந்த நிலையில் ஜாமீன் இல்லாமல் பத்தாயிரம் கடன் கல்வி என்ற பெயரில் கூட்டுறவு வங்கி வழங்கியது. இதாவது கிடைத்ததே என்று வாங்கிக்கொண்டு மின்சார  இரயில் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தேன்.
நச்சல்பாரிகள் தேசபக்தர்கள்
நச்சல்பாரிகள் தேசபக்தர்கள்
முழக்கங்கள் வந்த திசையை கவனித்தேன். நான்கைந்து இளைஞர்கள் நமது நாடு எப்படி பன்னாட்டு கம்பெனிகளின், டாட்டா, பில்லா, அம்பானிகளின் வேட்டைகளமாக மாறி உள்ளதை விளக்கிப் போராட்ட துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர்.
நமது கட்சி என்ற பாசத்துடன் அதை வாங்கி படித்தேன். ஒரு இளைஞன் நன்கொடைக்காக உண்டியலை நீட்டினான். அந்த இளைஞனின் பார்வையை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. சட்டைப்பைக்குள் கையை விட்டேன் புதியதாய் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளாய் பத்தாயிரம் இருந்தது. அதில் ஒரு நோட்டை எடுத்து உண்டியலில் போட்டேன். அந்த இளைஞன் ஆச்சிரியத்துடன் பார்த்தான்.
பத்து, இருபது ரூபாய் போடுவர்கள் ஐந்நூறு ரூபாய் ஏன் இவர் போடுகிறார் என்று அவன் கண் புருவம் கேள்வி குறியாய் வளைந்தது.
எப்படி மறக்க முடியும் அந்த இரவை .... ... அன்று அந்த தோழன் ஜாமீன் தராமல் போயிருந்தால் அந்த சித்ரவதை முகாமில் எனது வாழ்வை நான் தொலைத்திருப்பேன். எனது பலமும் பலவீனமும் அறிந்த  நண்பன், தோழன் அல்லாவா அவன்! 
 இரயில் நின்றதும் அடுத்து பெட்டிக்கு அவர்கள் ஒடுகின்றனர். அந்த இளைஞன் என்னைத்திரும்பி திரும்பி பார்க்கிறான். மக்கள் வெள்ளத்தில் அவர்கள் நீந்தி செல்கின்றனர். அதோ அதே கண்கள் ...  பட்டு போன்ற மென்இறகைகளைக் கொண்ட குஞ்சுகளை தனது பாதுகாப்பு வளையத்திற்கு வைத்திருக்கும் தாய் கோழி பார்வை போன்று ஒளிக்கீற்றுகளை வீசும் அந்த ஜோடி கண்கள்...  அந்த தோழர் இங்கு தான் இருக்கிறரா என்று பதற்றமடைந்தேன். பிரமையாக இருக்குமா இல்லை... ஒரு கணம் அந்த கீற்று ஒளிவெள்ளமாய் அந்த மக்கள்திரள் முழுவதும் நிறைந்தது.
- கி. நடராசன்

Friday, March 11, 2011

ஆறாத ரணம் - சிறுகதை


நினைவுகள் சாக்கடைகளாய் தேங்கியும், ஒடைகளாய் வளைந்து நெளிந்தும் ஒடிக்கொண்டிருந்தது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாமல் சிறு சிறு நீர்சுழிகள் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன. சிறுசிறு சுழிகள் இணைந்து பெரிதாகி சுழலுகின்றது. நினைவுகள் சுழன்று சுழன்று ஆழமாய் உள்ளே உள்ளே தனக்குள் சென்று கொண்டே இருக்கிறது,
நேற்று அலுவலகத்தில் செய்த செயல் வெளியில் செல்வதகே வெட்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது, குடித்துவிட்டு போதையில் ஒரு பெரிய கலாட்டவை அரங்கேற்றி இருந்தேன். மொடா குடி போதையில் பத்து கிலோமீட்டர் தொலைவு தள்ளி இருந்த வீட்டிற்கு
எப்படி சேதாரம் இல்லாமல் வந்து சேர்ந்தேன் என்று நினைவில்லை. யார் செய்த புண்ணியமோ?
தொழிற்சங்கத்தின் பொதுபேரவை கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவரும். நானும் மப்பு ஏற்ற டாஸ்மார்க் சென்றோம், நான் உதவி செயலாளராக இருந்தேன். எம்,சி,ஆப் வாங்கி இருவரும் குடித்தோம் என்பது மட்டும்தான் நினைவில் சுழல்கிறது. அதற்காக மேல் நினைவுகள் செல்ல மறுக்கின்றது.
மங்கலான நினைவுகள் இன்றும் அதிகமாக குடித்தோம், எதை பற்றியோ ஆரம்பித்து யாரையோ திட்டி இருக்கிறேன். வருத்தமுடன், சங்கடமும் நெஞ்சில் நிலவின.
நண்பர் அருளிடம் சென்று தலையை சொறிந்து நிற்கின்றன.
வாங்க தலைவரே எப்படி இருக்கீங்க
கிண்டலக்கிறார்.
என்ன நடந்தது.
பண்ண கலாட்டவே  ஞாபகமில்லையா? உன்னை சமாதானம் பண்ணி விட்டிற்கு அனுப்பவதற்குள் நாங்கள் நொந்து போய்விட்டோம். உங்களுக்குதான் ஒத்து வரல்லன்னு தெரிகிறதல்ல ஏன் குடிக்கிறீங்க.
சங்கடத்தில் நெளிந்தேன்.
பேரவை நடந்து கொண்டு இருந்தது, புரமோசன் விசயமாக விவாதம் நடந்தது, பேசிய எல்லாரும் அதிகாரிகள் குற்றம சாட்டிக் கொண்டிருந்தனர். நீங்கத போதையில் நீங்க தள்ளாடிக் கொண்டே எழுந்தீங்க, மேடைக்கு வந்து மைக்கை கெட்டியாக புடிச்சிக்கிட்டிங்க,,, நானும் பேசனும்,, பேசனும் என்று திரும்ப திரும்ப உளுறினீங்க. அப்புறம் தான் அந்த கூத்தே நடத்தச்சி.
கிண்டல் பார்வை எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது,
அதிகாரிகளை சிறிது நேரம் திட்டினீங்க தொழிற்சங்கம் சரியில்லை. தீவிரமாக செயல்படவில்லை. என்று குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீங்க அப்புறம்.....
சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்.
நந்தகோபாலை பார்த்து இவண் என்னை நொண்டின்னும் சொல்லிட்டான். நொண்டி,, நொண்டின்னு திட்டறான், ,, நீங்கல்லாம் கேளுங்க ,,, கேளுங்க,,, திரும்ப திரும்ப இப்படியே சத்தம் போட்டு கத்தினீங்க.
நந்தகோபாலுக்கு முதலில் என்னவென்றே விளங்கவில்லை.
எனக்கு என்ன நடந்தது என்று பொறி தட்டியது போல புரிந்தது. போதையில் நந்தகோபாலை சத்தம் போட்டதும். அதற்கு அவர் நான் அப்படி ஏதுவும் சொல்லவில்லை என்று முகம் வெளுத்து அலறியபடி சொல்லியது நினைவில் சுழன்றது. மிண்டும் மிண்டும் நொண்டி என்று திட்டினார் என்று நான் கத்தி கலாட்டா செய்தேன், ஒப்பாரி வைத்து அழுதேன், போதையில் சோகம் தலைக்கேறி தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது, நண்பர்களுக்கு எப்படி சூழலை சமாளிப்பது என்று புரியவில்லை. ஒரு வழியாக என்னை சமாதானபடுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்துகு படாதபாடு பட்டனர்.
நந்தகோபாலிடம் மன்னிப்பு கேட்டேன்.
பராவாயில்லிங்க,,, நான் எப்பவும் உங்களை அப்படி சொல்லவில்லையே. போன வாரம்கூட ஓட்டலில் டிபன் சாப்பிட்டபோது நான் பில்லை கொடுக்கிறதா சொல்லியும் நீங்க மறுத்துவிட்டு எனக்கும் சேர்த்து பில் கொடுத்தீர்கள்.
ஆமாம்,,, ஆமாம்
 பூம் பூம் மாடு தலையை ஆட்டினேன்.
நினைவுகளின் ஆழத்தில் தூர்வாறி தூர்வாறிக் கொண்டே சென்றேன். பளீரென முளையில்  மின்னல் தாக்கிய உணர்வு! நந்தகோபாலை பார்த்து ஏன் அப்படி கத்தினேன். கலாட்டா செய்தேன்.
நொண்டி என்று என்னை யாரும் அழைப்பது இல்லை, மைய அரசு குமாஸ்தா,,, நடுத்தர வர்க்கம் இப்படியெல்லாம் அழைப்பதில்லை. நொண்டி என்று இழிவு தொனியில் அழைத்தது எனது நினைவில் வரவில்லை.
நினைவுகளின் ஆழ்மன இரத்தகசியும் மடிப்புகளின் மின்சாரம் தாக்கி நரம்பு இழுந்தது.
அந்த அழகிய வடிவான முகம் சிவந்த கன்னம் புசுபுசுவென திரண்டிருந்த ஒட்டவெட்டிய போலிஸ் திராப் முகதிடகாத்திரமான உடற்பயிற்சி செய்த தேகம்!
இரணமாகி கீழ்பிடித்து பச்சை புண்ணாய் நினைவுகளில் எப்பொழுதும் துரத்திக்த கொண்டிருக்கும் வசைச்சொல். சொதசொதப்பாய் ஆண்டுகள் பல உருண்டொடி விட்டாலும் ரணமாய் சிழாய் உருவாகி நிற்கும் இழிசொல்! மனதித்ன ஆழத்தில் தங்கி நச்நச்சென துன்புறுத்தி¢கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் வெளிப்பட்டும் உள்ளது.
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுவது கிடையாது. போலிஸ் கொட்டடி சித்தரவதைகள். அடி உதைகள் எல்லாம் காலபோக்கில் மறந்துவிட்டது. அவன் என்னைத அழைத்த தொனி.
டேய் நொண்டி தெவுடியா பய்யா
கேட்ட மரத்திரத்தில் உள்ளதில் எரிச்சலையும் நெஞ்சில் கனலையும் பற்றி எரிய செய்த சொல்!
இதை சர்வ சதாரணமாக போகின்ற போக்கில் அந்த போலிஸ் அதிகாரி அழைத்தான் பெண்மை கலந்த வட்டமான முகம், அவன் பெயர் பழனியாண்டி!! அதிகார ஆணவத்திமிர் இரத்த நாளஙகளில் இழை இழையாய் ஒடிக் கொண்டிருந்ததன்த வெளிப்பாடு இந்த சொல்லடி!
இருபது ஆண்டுகளுக்கு முன் நக்சல் வேட்டையில் சிக்கிய நபர்களில் நானும் ஒருவன்,
சட்டவிரோத தவரை முகாமில் சிக்கி ஒருவாரம் நான் பட்டபாடு! நொந்து நுலாகி போனேன்.
பல தடவைகள் பழனியாண்டி என்னை பலவாறாக விசாரித்தான், ஆனால் ஒரு முறைகூட அவன் என் பெயரை சொல்லி அழைகவில்லை.
நொண்டி
நொண்டி நாயே
நொண்டி கம்முனாட்டி
நொண்டி பயலே,,,”
ஒவ்வொரு முறையும் அவன் என்னை அழைதது! இன்னும் கூட சொல்லலாம். எனக்கும் சங்கடமாக இருககிறது.
இந்தத நொண்டி பயனுக்கு இன்னா திமிர் வாயே திறக்க மாட்டரான்,,, நல்ல கவனிங்க இந்த நொண்டி காலைணை,,,”
பழனியாண்டி மற்ற உளவு அதிகாரிகளுக்கு என்னை அறிமுகப்படுத்திய விதமே இப்படித்தான் இருந்தது...
இவனோட இன்னொரு காலையும் பெண்டாக்கிறேன் பார்
வன்மத்துடன் அவன் அடித்த அடியில் லட்டிகள் உடைந்து நொறுங்கின, உடலெல்லாம் வலி பற்றி எரிந்து கொண்டிருந்தது? அவனது இழித்தொனி சொல் என் உயிரையே பிராண்டி கொண்டிருந்தது.
பத்து நபர்களை பிடித்து வதை முகமில் வைத்து விசாரணை செய்தார்கள். பெயர்களை சொல்லியும் சில சமயம் சாதியையும் சில சமயம் ஊர் பெயரை சொல்லியும் அழைத்ததை கவனித்தேன். 
பிச்,டி,படித்து கொண்டிருந்த மாணவரை டாக்டர் என்றும் கிண்டலாக அழைத்தனர்.
என்னை மட்டும் பெற்றோர் இட்ட பெயரை சொல்லியோ. சாதியை குறிப்பிட்டோ. ஊரை குறிப்பிட்டோ அழைக்கவில்லை.
அவன் கண்களுக்கு எனது காலின் ஊனம் மட்டுசூமு தெரிந்தது!
தொழிலை சொல்லி அழைக்கவில்லை
படித்த படிப்பை சொல்லி அழைக்கவில்லை.
ஒரிருதடவை சொன்னாலும் அதில் நொண்டி  என்ற , சொல்லை வினைத்தொகையாக இணைந்தே சொன்னார்கள்.
இதற்கு மேலே இன்னொரு ஈனச் செயலையும் செய்தான்.
பத்திரிகையாளர்களை அழைத்துத என்னைப் பற்றி மிகைப்படுத்தி கூறினான். மறுநாள் செய்தித்தமாள் கொட்டை எழுததுகளில் இப்படி பதிவு செய்தன.
நொண்டிகால் நக்சலைட் கைது தப்பி ஒடி நொண்டி காலனை விரட்டி பிடித்து காவல்துறை சாகசம்
பத்திரிகை தர்மத்தை இப்படி அவர்கள் காப்பாற்றினர்.
ஒற்றைகண் சிவராசன்
வழுக்கை தலை முருகன்
பெண்டு மணி
நொண்டி நடராசன்
குற்றங்களை விட முதலில் பத்திரிகைகளுக்கு தெரிவது ஊணங்களைத்தான். 
சமுகத்தித்ன மனசாட்சியாக இயங்கும் இவர்களே இப்படியெனில் காவல் துறையை பற்றி என்ன செய்வது!.
வீங்கி போன காயங்கள் வடிந்து ஆறிப்போயின இரததம் கசிந்து புண்ணாகி சீழ்பிடித்த ரணங்கள் வற்றின.  வற்றிய பக்குகள் உதிர்ந்து வடுக்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்தன.
பல அற்புதமான நினைவுகள்! நெஞ்சை நெகிழவைத்த தோழமை உறவுகள்! அறிவு செறிந்த விவாதங்கள்! சச்சரவுகள்! சில சமயம் சண்டைகள் கூட!! மக்களுக்காக மக்களை பற்றி சிந்தித்த செயலாற்றிய, போராடிய தருணங்கள்!! நீர்க்குமிழிகளாய் அழிந்து போக கூடாதவைகள் அழிந்து போய் விட்டன.
இயக்கத்தை விட்டு வெளியேறி ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  சராசரி அரசாங்க ஊழியான குடும்பஸ்தானாக மாறிவிட்டேன்.  அந்த போலிஸ் அதிகாரி அழைத்த விதம் மட்டும் ரன் கால வெள்ளத்தில் கரைய, அடித்து செல்ல மறுக்கிறது?
நீயெல்லாம் பொழைக்க தெரியாத ஆளு என்பதை மீறி தனிமையில் இதையெல்லாம் சிந்திக்ம் தருணங்களில் அது பொற்காலம் தான்!
நெஞ்சில் நெருப்பாய் உணர்வில் நெருப்பாய் அணையாமல் எறியும் அந்த சொல்... அந்த தொனி
நொண்டி காலா
பிராண்டி பிராண்டி மனம் வலிக்கிறது.  குடிபோதையில் அவனை பல நாள்கள் திட்டி சக மனிதர்களிடம் கொட்டி விட்டேன்.    பல ஆண்டுகள் ஓடி விட்டது.  முதுமை எட்டி பார்த்து விட்டது.
நான் இப்பொழுது புலம்புதில்லை.  போதை தலைக் ஏறினால் பழனியாண்டியை திட்டி தீர்த்து விடுகிறேன்.  அப்படி திட்டுவதால் மனது ஆறுதலை தேடுகிறது.
அந்த போலீஸ் அதிகாரியின் உருவம் நந்தகோபாலுக் இருந்தது.  உருவம் ஒற்றுமைகள் படைத்த மனிதர்கள் பலபேர் இருக்கத்தானே செய்கிறார்கள்! நந்தகோபாலிடம் மன்னிப்பு கேட்டாலும் அவரிடம் இதை விளக்கினால் அவரால் புரிந்து கொள்ள முடியாது!
கைபேசி அழைத்தது.  மனைவி அழைத்தார் மாலை 5 மணிக்கு பேருந்து நிறுத்ததிற் வருவதாக கூறினாள்.  மேலதிகாரியிடம் அனுமதி பெற்று நான் புறப்பட்டேன்.  பேருந்து ஏறி போய் சேர மாலை ஐந்தரை ஆனது.
இரண்டு கைபைகளையும். மூன்று வயது குழந்தையையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளிடம் ஐஸ்கிரீம் வாங்கி தரும்படி குழந்தை தொந்தரவு செய்து கொண்டு இருந்தது.  சளி பிடித்துவிடும் என்று யோசனை செய்து தட்டி கழித்து கொண்டிருந்தார்.
நான் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன்.  கால் ஊனம் என்பதால் என் மனைவியே பைகளை சுமந்து கொண்டு நடந்தாள். 
வீடு போய் சேர ஒருமைல் நடக்க வேண்டும்.  டி.வி.எஸ் 50 வண்டி வைத்து இருக்கிறேன். அதை பழுது பார்க்க மைக்கானிக்கிடம் விட்டு இருந்ததால் இன்று நடராஜா சர்வீஸ்தான்!
ஒரு கையில் என்னை பிடித்து கொண்டும் மறுகையில் ஐஸ்கிரீம் வைத்து சுவைத்து கொண்டு குட்டி பையன் நடந்தான்.  சிறிது தூரத்திற்கு பின் கையிலிருந்த ஐஸ்கிரீம் தீர்ந்து விட்டது.  முன்னே நடந்து கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினான்.
என்னய தூக்கும்மா
தூக்கும்மா.... தூக்கும்மா
பிஞ்சு கைகளை நீட்டி தொந்தரவு செய்தான்.
நானே இரண்டு பைகளையும் தூக்கி கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறேன்.  நீ வேற.. உன்னை எப்படிடா நான் தூக்குவது
அவள் முணுமுணுத்தாள். குட்டிப்பையன் கைகால்களை உதறி கொண்டு தூக்கும்படி அடம் பிடித்தான்.
காலு வலிக்குதும்மா.. தூக்கும்மா
குட்டிபையன் கெஞ்சினான்.  அவனை தூக்கி கொண்டு நடக்கும்நிலையில் அவள் இல்லை.
டேய் போடா.. உங்கப்பாவை தூக்கு சொல்லுடா என்று பாரத்தை என்னிடம் தள்ளினாள்.
குட்டிபையன் திரும்மிப நின்று என்னை பார்த்தான்.  குட்டி குட்டி கண்களால் உற்று நோக்கினான்.  நான் அவன் அருகில் நெருங்கினேன்.
என்னை தூக்க சொல்லுவான் என்று எதிர்பார்த்தேன்.  அவன் என்னிடம் எதுவும் பேசவில்லை.  பிஞ்சு கரங்களால் என் கையை பற்றி கொண்டு நடந்தான்.   நான் விந்தி விந்தி நடப்பதை பார்த்து கொண்டே வந்தான்.
ஒரு மைல்தூரம் குட்டி பையன் நடந்தான்.  என்னிடம் ஒருமுறை கூட தன்னை தூக்கும்படி அவன் கேட்கவில்லை.  அப்பாவால் அவனை தூக்கி கொண்டு நடக்க முடியாது என்று அந்த குழந்தைக்கு தெரிந்து இருந்தது.
கால் வலிக்க அந்த குழந்தை நடந்து வந்ததே தவிர தனது அப்பாவை தூக்கி கொள்ள சொல்லகூடவில்லை.
அந்த சின்ன குழந்தைக்கு புரிந்த நாகரிகம்கூட அந்த அகாரிக்கு ஏன் தெரியவில்லை?