கீற்று
- சிறுகதை
ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் வங்கிக் கடன் வாங்க எனக்கு ஜாமீன்தாரர் கிடைக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஒராண்டிற்கு முன்பு எனக்கு ஜாமீன்தாரராக இருந்த தொழிலாளி இறந்துவிட்டார். வேறொரு தொழிலாளி ஐ£மீன் கையெழுத்து போட்டால்தான் கடன் தருவேன் என்று கூட்டுறவு வங்கி அடம் பிடித்தது.
அவசரத்திற்கு பணம் கிடைப்பதில்லை. கல்விக் கடன் என்ற பெயரில் பத்தாயிரம் ரூபாய் ஜாமீன்தாரர் இல்லாமல் தருகிறார்கள் என்றதும், சம்பளச் சான்றிதழ் வாங்க தலைமை கணக்கு அதிகாரியிடம் சென்றேன். ஆலோசனை என்ற பெயரில் அவர் தொழிலாளி ஒருவரை எச்சரிக்கை செய்தார்.
“தெரிந்தவர்கள் நண்பர்கள் என யாருக்கும் ஜாமீன் போடாதே! சொந்தகாரனுங்களைக் கூட நம்பாதே! கடனை அவனுங்க கட்டலனா ஜாமீன்தாரர் தான் கட்டனும். நீ தான் கஷ்டபடனும். அதனால் இந்த விசயதுல தலையிடாதே”
சிட்டி பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் என்று தொழிலாளர்கள் கடன்களை வாங்கி செலவு செய்து விடுகின்றனர். நீதிமன்ற தாக்கீதுகளை அலுவலகத்திற்கு அனுப்புகின்றனர். சம்பளச் சான்றிதழ் தந்தால் கடனை தரும் நிதி நிறுவனங்கள். பணம் கிடைத்தால் போதும் என்று கடனை எல்லா நிறுவனங்களிடமும் தொழிலாளிகள் வாங்கி குவிக்கின்றனர். கடனை அந்த தொழிலாளி அடைக்காமல் போகும் பொழுது, ஜாமீன் போட்டவரிடம் பணம் பிடித்து தரும்படி சம்பந்தப்பட்ட பைனான்ஸ கம்பெனிகள், இப்படி நிறைய நீதிமன்ற தாக்கீதுகளை அனுப்புவதை பார்த்து பார்த்து சலித்துப் போனதால் சம்பளக்கணக்கு அதிகாரி இப்படியாக முன் எச்சரிக்கைகளை அள்ளி விட்டு கொண்டிருந்தார்.
இதற்கு முன்பு எனக்கு ஜாமீன் போட்டவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. அவர் முகத்தைக்கூட நான் பார்க்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர்களில் ஒருவர் வந்து தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. எனது பெயரில் வங்கியில் தான் கடன் வாங்கி, எடுத்துக்கொள்வதாக கூறினான்
நிமிடநேரம் கூட நான் தயங்கவில்லை. தலையை த்தலையை ஆட்டினேன். கடன் விண்ணப்பத்தை வாங்கி அதை நிரப்பி என்னிடம் கையெழுத்து வாங்கி, இன்னொரு பிரிவில் வேலை செய்த வேறொரு தொழிலாளியிடம் ஜாமீன் கையெழுத்து வாங்கி, வங்கியில் சேர்ந்துப் பணத்தை நண்பன் பெற்றுக் கொண்டான்
அவன் எவ்வளவு தொகை கடனாக வாங்கினான். எனக்கு ஜாமீன் போட்டவர் யார்? அவர் எவ்வளவு கடன் வாங்கினார். இதற்கு வட்டி எவ்வளவு என்கின்ற ஆராய்ச்சிக்கு எல்லாம் நான் செல்லவில்லை. நண்பன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற தோழமை தான் என்னிடம் மேலோங்கி இருந்ததால், இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. நண்பனும் அந்த கடனை எந்த பிரச்சனையும் தராமல் அடைத்து விட்டான்!
தொழிற்சாலையில் வேலைக்கு தேர்வு செய்த பொழுது நாங்கள் நூறுபேருக்கு மேல் அப்பொழுது புதியாக சேர்ந்தோம். பல இடங்களில், பலச் சமூக நிலைகளில் இருந்து வந்தவர்களைஅந்த தொழிற்சாலை “தொழிலாளி” என்றப் பிரிவாக சமைத்து உட்செரித்துக் கொண்டது. எப்படி பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்கள் ஒருங்கிணைந்து பயன்மிகு பண்டமாக மாறுகிறதோ அதன் வழி நாங்கள் அனைவரும் இணையும் புள்ளியாக தொழிற்சங்கம் இருந்தது. இளம் இரத்தம் தொழிற்சங்கப் பணிகளில் செயல் ஊக்கத்துடன் முனைப்போடு செயல்பட்டேன். புதிய உறவுகள் விரிந்தன. புதிய புதிய சிந்தனைகள், தத்துவங்கள் அறிமுகமாயின. தேடுதல் வேட்டை தொடர்ந்தது! தொழிற்சங்கம் கம்யூனிசத்தின் பால பள்ளி என்பதை புரிந்தது. அதன் உயர் கல்வியை நோக்கி எனது கவனம் குவிந்தது. அது என்னை நச்சல்பாரி இயக்கத்துடன் இனம் காணச் செய்தது. எனது செயல்பாட்டுக் களம் விரிவடைந்து. ஆலையை தாண்டி அனைத்தும் தழுவியதாக அவை மாறியது. எனது செயலின் தீவிரம் சக நண்பர்களை, தொழிற்சங்கத் தோழர்களை ஆச்சிரியப்பட வைத்தது.
ஒரு நல்ல நாளில், வெள்ளிகிழமையன்று தொழிற்சாலை வாசலிலே என்னை கியூஉளவு துறையினர் மடக்கினர். “ஐய்யா கூப்பிடுகிறார்” என்று அன்புடன் வெள்ளை வேனில் அள்ளிப்போட்டுப் பறந்தனர்.
நாளும் அதிகரிக்கும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க ஆட்சியாளர்கள் பல பாதுகாப்பு வால்வுகளை வைத்துள்ளனர். மக்களை திசைத் திருப்ப பயன்படும் இந்த வால்வுகளில் ஒன்று தான் “தீவிர வாதம்”. இந்த வார்த்தை பயன்படுத்தி பணமும், பதக்கங்களும், புகழும், பதவிஉயர்வுகளும் பெற திணவெடுத்த காவல்துறை அதிகாரிகள் துடிப்பார்கள். தர்மபுரியில் தீவிரவாதிகள் பயிற்சிமுகாம் என்று ஊடகங்கள் பதைபதைத்து ஊகங்களை அள்ளி விட்டனர்.
என்னை சித்ரவதை முகாமில் கொண்டு சேர்ந்தனர். போலிஸ் நிலையத்தில் பரந்த மாநாட்டு அறை பத்தடிக்கு பத்தடி தள்ளி பதினைந்து தோழர்களுக்கு மேல் சுவரைப் பார்த்த வண்ணம் குந்தி வைக்கப்பட்டு இருந்தனர். மயான அமைதி நிலவிய இடத்தில் கழுத்தைத் திருப்பினாலும், கண்விழிகளை உருட்டினாலும் லாடம் பதித்த பூட்ஸ் உதைகள் சரமாரியாக விழுந்தன. காவலுக்கு இருந்த “பாய்ஸ்” கண்கொத்திப் பாம்பாக “கவனித்துக்” கொண்டிருந்தனர். அழைத்துச் சென்றவனை உதைத்து உட்கார வைத்தனர். ஒரே பார்வையில் ஒராயிரம் விசயங்களைப் புரிந்துக் கொண்டேன். மாநிலம் எங்குமிருந்தும் தோழர்களைப் பிடித்து வந்துள்ளனர். ஒருசில நாட்களாக நடைபெறும் இந்த நடவடிக்கை எனக்கு தெரியாமல் போனது எப்படி?
சில தோழர்கள் வலியில் முணகிக்கொண்டிருந்தனர். என்னை நான் உறுதிபடுத்திக்கொள்ள மனதளவில் தயார் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன். இப்படி பட்ட நேரத்தில், அசையாமல் ஒரே இடத்தில் பார்வை சுவரில் இருக்கும்படி உட்கார வைக்கும் பொழுது சிறிய காலடி சத்தம் கூட துணுக்குறச்செய்தது. ஈக்கள் ரீங்காரமிடும் சத்தம் கூட தெளிவாக கேட்டது. இரவு மெல்ல கவிழ்ந்தது. இருள் பரவியது. ஜீப் வரும் சத்தம் கேட்டது.
அந்த சத்தம் சிலரிடம் உடலைகளை நடுங்கச் செய்வதை என்னால் பார்க்க முடியாவிடினும், உணர முடிந்தது.
ஒரு தோழரை அழைத்து கொண்டு பக்கத்து அறைக்கு சென்றனர். தொடர்ந்து . . . அடிஉதை . . . அலறல்கள். எனது உடல் வேர்வையில் நனைந்து சில்லிட்டது. அந்த தோழரிடம் விசராணை முடித்து இழுத்து வந்து போட்டனர். வலியில் முணகியபடி இருந்தார்.
இன்னும் இருவரை அழைத்துச் செல்வதை உணர்ந்தேன். அய்யோ என்ற அலறடன் அடி உதைகள் விட்டு விட்டு கேட்டது.
என்னையும் ஏட்டு ஒருவன் அழைத்து சென்றான். “உச்சி மீது வான் இடிந்து வீழிணும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே...” என்று அறிவு அறியுறுத் தினாலும் மனதின் பயம் அதை வென்றது. அங்கே கண்ட காட்சி ஒருகணம் என்னை திகைக்க வைத்தது!
தோழர்களை அரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதைச் செய்து கொண்டிருந்தனர். உடல் முழுவதும் லட்டி கொம்புகளின் தடயங்களாக இருந்தன.
“டோய் நான் சொல்றத ஓழுங்கா செய்யனும். இரண்டு பேரும் இரண்டு கைகளாலும் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி கன்னத்துல அறையனும். உண்மை சொல்ற வரைக்கும் அடிக்கனும்”
அடிஉதைகளையெல்லாம் கூட ஒருவகையாக சமாளித்த தோழர்களுக்கு இதைக் கேட்டதும் துணுக்குற்றனர். எல்லா உறவுகளுக்கும் எல்லையும், வரையரையும் உண்டு. அதைத் தாண்டும் பொழுதுஅந்த உறவுகளுக்குள் முரண்பாடுகள் தோன்றி பிணக்காக மாறும் வாய்ப்பு உண்டு. தோழமை, தோழர் என்கின்ற உறவு இதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலானது. அதை தான் அந்த அதிகாரி தனது சித்ரவதையின் கச்சாப் பொருளாக இங்கு பயன்படுத்தினான்.
ஒரே கட்சி குழுவில் இருக்கும் அவர்களின் தோழமை உணர்வு வேதனையாகி அவர்களின் கண்களின் கண்ணீரை துளிர்க்கச் செய்தன.
“ஆரம்பிங்கட்டா ... இன்னா ஒவ்வொருத்தன பார்த்திட்டு நிக்கிறீங்க .. பாயஸ் நீங்க ரெடியா”
“எஸ் சார்”
“இந்த கூட்டுக் குரலின் சொந்தகாரர்களான பாய்ஸ் தோழர்களை சுற்றிலும் சிறிது இடைவெளி விட்டு அரசாங்கச் செலவிலும், இலஞ்ச பணத்திலும் முறுக்கேறிய உடலை மேலும் முறுக்கேற்றி காட்டினர்”
தங்கள் எதிரிகள் தங்களை சித்ரவதை செய்வதை அவர்கள் உணர்த்து புரிந்து கொள்ள முடிந்தது. தனது தோழனை தானே அடிப்பதை அவர்களால் செரிமானம் செய்ய முடியவில்லை.
ஒருவரை ஒருவர் மெதுவாக கன்னத்தில் அறைந்து கொண்டனர்.
“டோய் பலமாக அடியுங்கட’’
பலமாக அடிப்பது போல மெதுவாகத்தான் அறைந்துக் கொண்டனர்.
“இன்னாங்கடா ... மாமா மச்சான் விளையாட்டா விளையாடுறீங்க .. பாய்ஸ்!”
அடுத்த நொடியில் இரும்பு லாடம் பதித்த பூட்சுகள் சுற்றிலும் எங்கு உடலில் அடிவிழும் என்று தெரியாத அளவிற்கு உடலெங்கும் மாறி மாறி உதைகள் விழுந்தன. தோழர்கள் தடுமாறி விழுந்தாலும் அவர்கள் விடவில்லை.
“போதும்மடா ... சொன்னத செய்யலன்னா மிதிச்சே கொன்னுடுவேன்”
வேறு வழியின்றி ஒரு தோழர் முதலில் பலமாக இன்னொரு தோழரை அறைந்தார். இன்னொருவரும் பலமாக பலமாக அறையாமல் தயங்கி தயங்கி அடித்தார்.
அந்த போலிஸ்அதிகாரி திரும்பி என்னை சித்ரவதைச் செய்ய இன்னொரு அதிகாரிக்கு ஆணையிட்டார். சரமாரியாக லட்டி கம்புகள் உடலின் அனைத்து இடங்களையும் பதம் பார்த்தன. அலறி துடித்தேன்.
என்னிடம் அவர் விசரணையைத் துவக்கினார். பெயர் ,சாதி என்று ஆரம்பித்து எனது சுய குறிப்பை முடித்து எனது இயக்கச் செயல்பாடுகளை கேட்டனர். நான் பட்டும் படமாலும் பதில் கூறி கொண்டு இருந்தேன். தலைமறைவாகியுள்ள சில தோழர்களின் பெயரைக் கூறி அவர்களை தெரியுமா, அவர்கள் இருப்பிடங்கள் எவை என்று கேட்டு அவர் நோட்டம் விட்டார்.
எனக்குத் தெரியாது என்று கூறினேன், அந்த அதிகாரி மிகவும் கோபம் கொண்டார்.
“இவனையும் அவனுங்க கூட சேருங்கடா ... பாய்ய்ஸ்”
“மூணு பேரும் மாறி மாறி அடிச்சிக்கனும் வட்டமாய் நின்னுக்கிட்டு அடிச்சிக்க .. எவன் சரியாக அடிக்க வில்லையே அவனை கவனிக்க பாய்ஸ்”
நாங்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்தோம். என்னை பார்த்த அந்த தோழரின் “பார்வையை” இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அந்த கண்களின் ஒளிக் கீற்றுகள், தோழமை இன்னும் கூட பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றது. அந்த பார்வையை மறக்க முடியுமா?
அலுவலக வேலை மாற்றிலாகி போனதால் அப்பாவுடன் எங்கள் குடும்பமும் இடம் பெயர்த்தது. ஒன்றாம் வகுப்பில் புதிய பள்ளியில் இடையில் சேர்க்கப்பட்டேன். என்னை சேர்த்து விட்டு அப்பா வேலைக்கு போய் விட்டார். மதிய உணவுக்கு மணி அடித்தவுடன் மாணவர்கள் அவரவர் சாப்பாட்டு கூடையை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
அம்மா எனக்கு மதிய உணவு கொண்டு வர நேரமாகிக் கொண்டிருந்தது. எனக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. பையன்கள் பாத்திரத்தைப் திறந்துச் சாப்பிட ஆரம்பித்தனர். எனது பசி இன்னும் அதிகமாகியது. எனக்கு அழுகைஅழுகையாக வந்தது. அப்பொழுது ஒர் ஆதரவு கரம் என்னை தொட்டது. தனது மதிய உணவை அவன் எனக்கும் பகிர்த்தளித்தான். அம்மா பிறகு உணவு கொண்டு வந்தவுடன் அதையும் ஜோடிப் போட்டு கொண்டு சாப்பிட்டோம்.
இப்படி ஆரம்பித்த நட்பு பள்ளி, கல்லூரி வரை நீண்டது. எங்கும் எங்கள் இருவரையும் சேர்ந்து தான் பார்க்க முடிந்தது. நான் இயக்கத்தில் சேர்ந்தவுடன் அவனையும் அதில் இணைத்தேன். ஆரம்பித்தில் சிறிது தயக்கம் காட்டிய அவன் பின் படிபடியாக புரித்து கொண்டு வேகமாக இயக்கப்பணி ஆற்றினான். முழு நேர ஊழியனாக இயக்கத் தில் வளர்ந்தான்.
அவனை தான் இன்று இப்பொழுது இந்த சித்ரவதை முகாமில் பார்க்கிறேன். என் பலம்-பலவீனத்தை புரிந்த நண்பன்! தோழன்!! அவன் என்னை அடிப்பானா? அல்லது நான் அவனை அடிப்பதா? தயக்கமும், வேதனையும்மேலேங்கியது. நான் சிறுவயதில் சந்தித்த அதே பார்வை! பரிவு!! தோழமைஉணர்வு!!!
“சார்....சார்....இவர் புதியதாக இப்பத்தான் இயக்கத்திற்கு வந்தவர் அவருக்கு ஏதும் தெரியாது” என்று தோழன் இழுத்தான்.
அந்த உளவு அதிகாரியின் முகத்தில் எக்காளச் சிரிப்பு தாண்டவம் ஆடியது.
“பாய்ஸ் இவனை ரூமுக்கு கூட்டி போய் விடுங்க. அய்யாவுக்குத்தான் எல்லாமும் தெரியும் போல, அவரை கவனிப்போம்”
என்னை மாநாட்டு அறைக்கு அழைத்து சென்று சுவரை பார்த்த வண்ணம் அமரச் செய்தனர்.
சிறிது நேரத்தில் கேட்ட அந்த அலறல் ஒலி என் உடலைத் தூக்கி வாரிப்போட்டது. நடுக்கம் என் உடல் முழுவதும் சில்லிட்டுப் பரவியது. சில மணி நேரம், விட்டு விட்டு அந்த சித்ரவதையின் அலறல் கேட்டுக் கொண்டே இருந்தது அந்த அலறல் இன்னும் கூட காதில் ஓலிப்பது மாதிரி சில நேரங்களில் கேட்கிறது.
நானும் அவனும் சமகாலத்தில் இயக்கத்தில் இணைந்தவர்கள். அவனுக்கு தெரிந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் எனக்கும் தெரியும். கொஞ்சம் கூட குறைய இருக்கும். அவ்வளவு தான்! எனக்கு ஏதுவும் தெரியாது புதியதாக இணைந்த தோழர் என்று ஏன் பெரிய பொய்யை சொன்னார். உடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே என்பதா இன்றுவரையிலும் இந்த கேள்விக்கு விடைதெரியவில்லை.
இருள் பிரியும் நேரத்தில் இரத்தக் கூளமாக அந்த தோழரை அள்ளிக் கொண்டு வந்து கிடத்தினர். நீண்ட நேரம் தெறிக்கும் வலியில் அரற்றிக்கொண்டிருந்தார். அவர் முகம் வீங்கி இரத்த காயங்களுடன் இருந்தது. அவரை பார்த்து கொண்டிருந்த எனது நெஞ்சு வெடித்து விடுவது போல் இருந்தது. கண்கள் மெதுவாக திறந்தார். அந்த இருளிலும் தோழரின் கண்கள் பிரகாசமான ஒளி கீற்றுகளை அள்ளி வீசியது. அந்த ஒளிக்கீற்றை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியவில்லை.
கடைத் தெருவில் நாலு பேருடன் சேர்ந்து குடித்து விட்டு கலாட்டா செய்ததாக வழக்குப்போட்டனர். ஜாமீனில் வெளிவந்த பின்பு அந்த நான்கு பேரையும், கடைத்தெருவையும்தேடித் தேடிப்பார்க்கின்றேன். கண்டு பிடிக்கவே முடியவில்லை. கொலம்பஸ்சைத் தான் கூப்பிட்டு கண்டுபிடிக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாய்தா ...வாய்தா..வாய்தாக்கள் என்று இந்த பொய் வழக்கில் நீதி மன்றத்தால் அலைகழிக்கப்பட்டு நாய் படாதப் பாடு பட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, எந்த சாட்சிகளும் சாட்சி சொல்லாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன்.
அடிக்கடி உளவுத் துறையினர் தொழிற்சாலையில் வந்து சந்தித்து விட்டு சென்றனர். இந்த காலத்தில் என்னைச் சுற்றி கண்ணு, மூக்கு, காது, வாய் என்று என்னவெல்லாம் இருக்குமோ அதை எல்லாம் சேர்த்து பயங்கர தீவிரவாதி பிம்பம் எனக்கு பொதுசனம் உருவாக்கி விட்டது.
இந்த பிம்பத்துடன் இன்று வரை வாழப் பழகி விட்டேன். சிறிது காலம் இயக்கத்தில் செயல்ப்பட்ட நான் காலப்போக்கில் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் என்னை வளர்த்தெடுக்க போதாமையால் சிறிது சிறிதாக அதிலிருந்து விலகி வந்து விட்டேன்.
இருப்பினும் ஜாமீன் என்றதும் என்னை மேலும் கீழும் சக ஊழியர்கள் பார்க்கின்றனர். நண்பர்களிடம் ஜாமீன் போடும்படி கேட்டேன் முதலில் போடுவதாகக்கூறி விட்டு பின்பு மறுத்து விட்டனர்.
பொதுயுடமை இயக்கத்தை விட்டு வெளியேறி வந்தாலும் தொழிற் சங்க பணிகளில் தோய்வில்லாமல் கடமை ஆற்றினேன். என்னுடைய பணி பல தொழிற்சங்கப் போராட்டங்களை கிரியா ஊக்கியாக இருந்து வெற்றிகாண வழிவகுத்தது.
தொழிற்சங்கத் தலைவர்களிடம் ஜாமீன் தரும்படிக் கேட்டேன்.
“தலைவா... ... உங்களுக்கு இல்லாததா போட்டாப் போச்சு”
இந்த பேச்செல்லாம் வெறும் போச்சாகவே முடிந்து போனது.
“வேற ஒருத்தருக்கு ஜாமீன் போட்டிருக்கேன் தோழர் உங்களுக்கு ஏற்பாடு பண்றேன்”
இப்படிச் சொல்லியே ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இந்த பேச்சை ஆரம்பித்தால் மெதுவாக ஒரங்கட்ட ஆரம்பித்தனர். எனக்கும் கேட்டு கேட்டு அலுத்துபோய் விட்டது. இத்தனைக்கும் ஜாமீன் போட்டவர்கள் கதைகளை கேட்டால் சந்திச் சிரிக்கும். சம்பளக் கணக்கு அதிகாரியை கணக்கு பண்ணியும், வீட்டில் பொண்டாட்டி பிள்ளை குட்டிகளுக்கு சொகமில்லை என்றும் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனைச் செலுத்தாத தொழிலாளிகள் பலர் இருந்தனர். இவர்களை நம்பி ஜாமீன் போட்ட ஊழியர்கள் அடுத்த லோன் போடுவது முடியாது. ஜாமீன்தாரர்கள் கட்டாத கடனுக்கு இவர்கள் பணத்தையும் சேர்த்து பிடித்து விடுவார்கள்.
இன்னொரு சாரார், இந்த கூட்டுறவு வங்கி மட்டுமல்ல,பல தனியார் வங்கிகளிலும் சக ஊழியர்களை, நண்பர்களை நைச்சியம் பண்ணி ஜாமீன் வாங்கி விட்டு நட்டாற்றில் விட்ட கதைகள் பல வண்டி வண்டியாய் கிடக்கிறது. ஒருசிலர் பல இலட்சங்களை இவ்வாறு சுருட்டிக் கொண்டு தன்னால் பணம் கட்டமுடியாது, நீதிமன்றத்தில் கட்டுகிறேன் என்று வாய்உதார் விடுகின்றனர்களும் உண்டு. இதில் ஆண், பெண் ஊழியர்கள் என்ற பேதமில்லாமல் எல்லாரும் ஏமாற்றினர்.
இந்த சிக்கல்கள் என்னிடம் கிடையாது என்றும், நேர்மையானவன், நாணயமானவன் என்று அக்மார்க் சான்றைச் சகதொழிலாளிகள் வழங்கினாலும், எனக்கு ஜாமீன் போடமட்டும் தயங்கினர். எனக்கு ஜாமீன் போடாமல் அவர்களை தடுப்பது ஏது என்று எனக்கு விளங்கவில்லை.
இந்த நிலையில் ஜாமீன் இல்லாமல் பத்தாயிரம் கடன் கல்வி என்ற பெயரில் கூட்டுறவு வங்கி வழங்கியது. இதாவது கிடைத்ததே என்று வாங்கிக்கொண்டு மின்சார இரயில் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தேன்.
“நச்சல்பாரிகள் தேசபக்தர்கள்”
“நச்சல்பாரிகள் தேசபக்தர்கள்”
முழக்கங்கள் வந்த திசையை கவனித்தேன். நான்கைந்து இளைஞர்கள் நமது நாடு எப்படி பன்னாட்டு கம்பெனிகளின், டாட்டா, பில்லா, அம்பானிகளின் வேட்டைகளமாக மாறி உள்ளதை விளக்கிப் போராட்ட துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர்.
நமது கட்சி என்ற பாசத்துடன் அதை வாங்கி படித்தேன். ஒரு இளைஞன் நன்கொடைக்காக உண்டியலை நீட்டினான். அந்த இளைஞனின் பார்வையை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. சட்டைப்பைக்குள் கையை விட்டேன் புதியதாய் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளாய் பத்தாயிரம் இருந்தது. அதில் ஒரு நோட்டை எடுத்து உண்டியலில் போட்டேன். அந்த இளைஞன் ஆச்சிரியத்துடன் பார்த்தான்.
பத்து, இருபது ரூபாய் போடுவர்கள் ஐந்நூறு ரூபாய் ஏன் இவர் போடுகிறார் என்று அவன் கண் புருவம் கேள்வி குறியாய் வளைந்தது.
எப்படி மறக்க முடியும் அந்த இரவை .... ... அன்று அந்த தோழன் ஜாமீன் தராமல் போயிருந்தால் அந்த சித்ரவதை முகாமில் எனது வாழ்வை நான் தொலைத்திருப்பேன். எனது பலமும் பலவீனமும் அறிந்த நண்பன், தோழன் அல்லாவா அவன்!
இரயில் நின்றதும் அடுத்து பெட்டிக்கு அவர்கள் ஒடுகின்றனர். அந்த இளைஞன் என்னைத்திரும்பி திரும்பி பார்க்கிறான். மக்கள் வெள்ளத்தில் அவர்கள் நீந்தி செல்கின்றனர். அதோ அதே கண்கள் ... பட்டு போன்ற மென்இறகைகளைக் கொண்ட குஞ்சுகளை தனது பாதுகாப்பு வளையத்திற்கு வைத்திருக்கும் தாய் கோழி பார்வை போன்று ஒளிக்கீற்றுகளை வீசும் அந்த ஜோடி கண்கள்... அந்த தோழர் இங்கு தான் இருக்கிறரா என்று பதற்றமடைந்தேன். பிரமையாக இருக்குமா இல்லை... ஒரு கணம் அந்த கீற்று ஒளிவெள்ளமாய் அந்த மக்கள்திரள் முழுவதும் நிறைந்தது.
- கி. நடராசன்