Monday, April 15, 2013

பாடலில் வரிகள் அதன் இயல்பான அர்த்தத்தை விட வாழ்க்கையில் அதிக அடர்த்தியாய் மாறிவிடுகிறது

      பலரையும் போலவே நல்ல பாடல்களையும், இனிமையான இசையையும் நானும் ரசிப்பேன். அதையும் தாண்டி அதற்குள் செல்லும் வழக்கம் கிடையாது. ஒரு பாடல் இதை மாற்றி அமைத்தது. “மயக்கமா ….கலக்கமா… வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்…. உனக்கும் .கீழே உள்ளவர் கோடி நினைத்தும் பார்த்து நிம்மதி நாடு…” பி.பி. சீனிவாசன்  இனிய குரலில் ஒலித்தப் பாடல் அது:  முதல் காதல் போல் முதல் சிறை அனுபவம், முதல் போலிஸ் சித்ரவதையும் முக்கியமானது… முதல் காதல் போல் இதையும் அனுபவித்தால்தான் தெரியும்..அவை எல்லாருக்கும் ஒரே விதத்தை, அனுபவத்தை தராது..தர முடியாது…  மனம் நொறுக்கி சிதைந்த நேரம் அது.....

     இந்த பாடலை இருள் கணத்தச் சிறையில் இருக்கும் பொழுது பாடி தேற்றுவர் ஒர் ஈழத்தமிழர்! 

     இளைஞனாக  இருக்கும் பொழுது கம்யூனித்தை விரும்பாதவர்களை இருந்தால்... அது அதியசயம்தான்! இயல்பாகவே கம்யூனிசத்தை நேசித்தேன் அதற்காக பணிகள் செய்ய நினைத்தேன். அந்த  எனது பணிகளை ஒர் அளவோடு நிறுத்தி கொள்ளவும் முடிவு செய்தேன்… உண்மையில் அதை தாண்டுவதற்கான மன துணிச்சல் இல்லை என்பதே உண்மை. போலிஸ் சித்ரவதை, கிரிமினல் வழக்கு, சிறைச்சாலை …. இதற்கெல்லாம் தப்பி தவறியும் கூட போகக் கூடாது என்று நினைக்கும் அரசு ஊழியனாகவே இருந்தேன்.. அரசும், காவல்துறையும் அதிகாரிகளும் தனக்கு எதிரான முணகலை கூட நசுக்கும் கயமையை கொண்டிருந்தன. அந்த கயமைக்குள் சிக்க வைக்கப் பட்டேன். வங்கி கொள்ளை வழக்கில் ஏ.கே.47 தூப்பாக்கி வைத்திருந்தாக பொய்யான குற்றச்சாட்டில் 1988யில் கைதாகி மதுரைசிறையில் இருந்ததேன்.

     LTTE, EPRLF, EROS.. என பல ஈழப் போராளி அமைப்புகளில் இருந்த கம்யூனிசத்தை நேசித்த ஈழப்போராளிகள் வெளியேறி புதியதோர் அமைப்பைகட்டி  அமைக்க முயற்சித்தார்கள். மேயர் முத்து மகன் நல்லதம்பி…,  ஈழத்போராளிகள், நக்சல்பாரி  என பலரும்  கூட்டணியாய்  இந்த வழக்கில் சிறையில் இருந்தனர். தினம் ஒரிருவர் சித்ரவதை செய்யப்பட்டு சிறைக்கு இழுத்து வந்து  போடப் பட்டுக் கொண்டிருந்தனர். எனது நடுத்தர வர்க்கக் கனவுக்கும் இலட்சிய வேகத்திற்கும் இடையில்  நடுத்தர வர்க்கக் கனவு சிதைந்து நெறுக்கி  விட்டது. அப்பொழுது எதோ ஒன்று நம்மை கைதூக்கி விட வேண்டி உள்ளது..இல்லையெனில் அதிலிருந்த சிலரை போலவே எனது பொது வாழ்க்கையும் செத்துப் போயிருக்கும். அப்பொழுது தான் இந்த பாடலை “தமிழன்” என்று நாங்கள் செல்லமாக அழைக்கும்  ஒர் ஈழப்போராளி எனக்காகவே இந்த பாடல் பாடி தேற்றுவார்..
“நம்மளவது பரவயில்லை… நடராசா…பக்கத்து பிளாக்கில் இருக்கின்றவர்களை பாருங்கோ” என்றார். பி.பி. சீனிவாசன் போலவே... ஆனால் கொஞ்சம் ஈழத்தமிழ்ச் உச்சரிப்பில் பாடுவார்.

     அந்த பக்கத்துச் சிறை ப்ளாக்கில் கை கால்களை இழந்து கண்கள் சிதைந்து என்ற பல வகையிலும் ஈழ்ப்போரில் காயமடைந்த விடுதலைப் புலிகளை கைது செய்து செய்யப்பட்ட அதில் அடக்கப்பட்டு இருந்தனர்.  19, 20 வயதுதான்  அவர்களுக்கு இருக்கும்.. வாழ்க்கை வசந்தத்தின் ஆரம்பத்தில் இருப்பவர்கள்…இன்று தங்கள் இலட்சியதிற்க்காக உடல் உறுப்புகள் சிதைந்து வேற்று மண்ணில் மருத்துவம் பார்க்க வந்து அங்கும் மனிதாபிமானம் இல்லாம சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.  சித்தாந்தம்…. . கோட்பாடு… நடைமுறைஎன்று படித்து, விவாதித்து  எனக்கதாவது மண்டை வீங்கி கிடந்த காலம் அது. இவை ஏதும் இல்லாமல் “தமிழரின் தாகம் தமிழீழம்” என்ற ஒற்றை முழக்கத்திற்காக போரில் உடல் சிதைக்கப்பட்டவர்கள்  மகிழ்ச்சியாக இருந்தனர்.. பாடல்களை பாடினர. பாடல்களை கேட்டு ரசித்து கொண்டிருந்தனர். நானோ சோகமாய் இருந்தேன். அதைத்தான் அந்த “தமிழன்” எனக்கு இந்த பாடல் மூலமாக எனக்கு உணர்த்தினான்..

     பாடலில் வரிகள் அதன் இயல்பான அர்த்தத்தை விட சில சமயங்களில் நமது வாழ்க்கையில் அதிகமான கனத்தை, அடர்த்தியை தந்து விடுவதை அந்த கணத்தில் நான் உணர்ந்தேன். நடுத்தர வர்க்க கனவுகளை விட முடியாவிடினும் அதனை குணாம்சங்களைப் புரிந்து கொண்டு எனது பயணத்தை தொடரமுடிந்தது. எங்கு எந்த சூழலில் இந்த பாடல் ஒலித்தாலும் ஒருகணம் அந்த சிறைசாலை சூழலும்.  போரில் உறுப்புகள் சிதைந்த விடுதலைப்புலிகளும் நினைவுக்கு வரும்… அந்த பாடலை கேட்ட பிறகு தான் அந்த இடத்தை விட்டு நகர்வேன்.

     அந்த  பாடல் வரிகளை  பாடிய மறைந்த கலைருனுக்கு இந்த சிறு குறிப்பையே எனது அஞ்சலியாக்கு கின்றேன்.