Tuesday, June 26, 2012

தத்தனேரி சுடுகாடு


தத்தனேரி சுடுகாடு

நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென ஊர்ந்து சென்று மூளையைப் பிராண்டியது. திடுமென்று பாண்டி விழித்து கொண்டான் கடிகாரத்தைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரெட்டை முட்கள் காட்டின. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருக்க அலாரம் வைத்து படுத்தவன் அகாலத்தில் எழுந்து விட்டான்.

புரண்டு புரண்டு படுத்து மீண்டும் தூங்குவதற்கு பகீரத முயற்சி செய்தான். தூக்கம்தான் வந்தபாடில்லை. சட்டையைப் போட்டு கொண்டு வெளியே போவதற்கு கதவைத் திறந்தான்.


“நடு ராத்திரியில் அப்படி என்னத்தான் வேலையோ …..பேய் மாதிரி அலையறீங்க” என்று அம்மா உரக்க முணுமுணுத்தவாறு கதவை மூடியது அவனுக்கு கேட்டது.

தூங்கா மாநகர் மதுரையில் தூங்கி வழிந்து கிடந்த செல்லுர் சாலையை கடந்து தத்தனேரி சுடுகாட்டை பாண்டி அடைந்தான். பத்து ஏக்கர்கள் கொண்ட பரந்த இடம் அது. அங்கு சுற்று வட்டாரத்தில் இறக்கும் மனிதர்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் மீளாத்துயில் கொண்டிருந்தார்கள்.

அவன் சுடுகாட்டிற்குள் நுழைவதை மின்சார கம்பிகளில் இருந்த ஆந்தைகள் உற்று கவனித்து கொண்டிருந்தன. மின்கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த மெர்குரி விளக்கு அழுது வடிந்து கொண்டு வெளிச்சத்தைப் பரப்பியது. மெர்குரி விளக்கை மூடிக்கொண்டிருந்த பிளாஸ்டிக் கண்ணாடியில் ஆயிரக்கணக்கான உயிர்கள் சமாதி அடைந்து இருந்தன.

ஆழ்ந்த அந்தரங்க அமைதியை இரவு சுடுகாட்டிற்கு ஏற்படுத்தி இருந்தது. நுழைவாயிலை கடந்ததும் மூன்று தகன மேடைகள் உயரமான இடத்தில் மேற் கூரைகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது தெரிந்தன. நடுவில் உயரமாக இருந்த பெரிய தகன மேடையில் ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. வலது பக்க தகன மேடையில் இன்னெரு பிணம் எரிந்து நீருபூத்து கிடந்தது இடதுபக்கம் தகன மேடை தனக்கு எரிக்க யாரும், எந்த பிணமும் கிடைக்காத ஏக்கத்தில் காலியாக வாய் பிளந்துக் கிடந்தது.

பாண்டிக்கு வயிறு முட்டியதால் சிறுநீர் கழிக்க தெரு ஓரமாய் அமர்ந்தான். வைரம் பாய்ந்து நெடுநெடுவென வளர்ந்து கிடந்த தூங்கு மூஞ்சி மரத்தின் கிளைகளில் இருந்து வவ்வால்கள் சட்டென அச்சமூட்டும் சப்தத்தை எழுப்பி பறந்தன. ஆந்தைகள் அலறி துடித்து பறந்து இடுகாட்டிற்குள் மறைந்தன. ஓரத்தில் படுத்து கிடந்த தெருநாய் வீறிட்டு குறைந்தவாறு ஒடியது. அது பயத்தில் சிறுநீர் கழித்து விட்டது. என்னமோ……… ஏதோ என்று பாண்டி திரும்பினார். அவன் இதயம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தி விட்டது.
சிதையில் எரிந்து கொண்டிருந்த பிணம் எரிந்தவாறு எழுந்து உட்கார்ந்து இருந்தது. காற்றில் அது ஆடிகொண்டே எரிந்த்தது. அதன் சதைகளில் தேங்கிக் கிடந்த கொழுப்பு உருகி தீச்சுவாலையாய் கொழுந்து விட்டு எரிந்தது. ஆலிவுட் பேய் திரைப்படங்கள் தத்ரூபமாய் நினைவூட்டின. நள்ளிரவில் இந்த காட்சியை காணும் எவரும் பயத்தில் பீதியாகி அங்கேயே கழித்து விட்டு இருப்பர்.

பாண்டியின் உடலில் மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. இருப்பினும் சில நொடிகளில் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டான். அவன் உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்த பொருள் முதல் இயக்கவியல் தத்துவம் அதற்குத் துணை புரிந்தது.

முழு குடி போதையில் இருந்த வெட்டியான் தள்ளாடியவாறு உட்கார்ந்த நிலையில் எரியும் பிணத்தின் அருகில் தட்டு தடுமாறிச் சென்றார். ஊர் பெரிய மனிசன் சாவு என்பதால் தாரளமாய் குடி ஊற்றி விட்டு சென்று இருந்தனர். தடியை பிணத்தின் மீது வீசி அதை படுக்க வைக்க முயன்றார். குறி தவறியது. காற்றில் பிணத்தை எரிக்கும் நெருப்பு பொறிகள் மின்மினிபூச்சிகளாய் பரவின.
பாண்டி அருகில் சென்று தடியை பிடிங்கினான். உட்கார்ந்து எரிந்து பயமுறுத்திக்கொண்டுருந்த அந்த பிணத்தின் மீது நாலு போடு போட்டான். நின்று கொழுத்துக் கிடந்த அந்த தடித்தப்ப் பிணம் கீழே முறிந்து விழுந்தது தீச்சுவாலைகளை, தீப்பொறிகளை, புகை மண்டலங்களை காற்றில் கக்கிய படி அந்த பிணம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. கார்த்திகை திருவிழாவில் சின்ன பையன்கள் ஆனங்காய் மாவளி சுற்றுவது போல் அது இருந்தது.

சிறிது நிதானத்திற்கு வந்த வெட்டியான், “இன்னாங்க தம்பி… நடுராத்திரியில் சுடுகாடு பக்கம்” என்று வாய் குழறியபடி கேட்டார்.

“ஒன்னுமில்லைங்க… தோழர்கள் போஸ்டர் ஒட்ட அதிகாலையில் வர சொன்னாங்க… நா.. கொஞ்சம் முன்னாடி வந்துட்டேன்”
அதற்குள் வெட்டியான் மகன் அங்கு வந்து விட்டார்.. அவர்கள் இருவரும் எரியும் பிணத்திலிருந்து சிறிது தள்ளி குத்து காலிட்டு அமர்ந்து கொண்டனர். சூட்டினால் நரம்புகள் இழுக்கப்பட்டு மீண்டும் சென்று உட்கார்ந்து விடுமா என்ற கேள்வியுடன் அதை கவனித்து கொண்டு இருந்தனர்.

இந்த தகன மேடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதி தொகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட காலம் என்று ஒன்று இருந்தது. வெள்ளளாளர், பார்ப்பனர் போன்ற சாதிகள் மட்டும் உயரமான தகன மேடையில் ஏறிக்கப்பட்டனர். எரியும் பொழுது கூட சாதி பார்த்து, இடம் ஒதுக்கி எரித்த சமூகம் இது. காலபோக்கில் மக்கள்திரள் கிளர்ந்து போராடியதால் அவைகள் வீரியம் குறைந்து போய் உள்ளது. நீருபூந்த நெருப்பாய் அணைக்கப்படாமல் உள்ளுக்குள் தீச்சுவாலைகளைக் கக்கிக் கொண்டு இருக்கின்றது. இன்னும் சாதிநெருப்பு இந்தச் சாம்பல் மேடுகளுக்குள் தகதகவென்று கனன்று தான் கிடக்கிறது.

இளஞர் அணி தோழர்கள் அடிக்கடி கருக்கலில் சுவரொட்டிகள் ஒட்டும் பழக்கம் இருந்தது. அதனால், பாண்டி இந்த அகால வேளையில் வந்தது வெட்டியானுக்கு பெரியதாய் ஒன்றும் தோன்றவில்லை. அங்கிருந்துபாண்டி கல்லறைகள் ஊடாக சென்றார். விதவிதமான சமாதிகள்அங்கு கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டும், பராமரிக்கப்படாமலும் இருந்தன. ஏழை-பணக்காரன், உயர்ந்த சாதிகள்-இடைசாதிகள்-தீண்டத்தகாதச்சாதிகள், முதலாளி-தொழிலாளி, ஆண்-பெண், பண்ணை-அடிமை என்று சமூகத்தின் அனைத்து வகைப்பிரிவுகளிலும் அங்கு கல்லறைகள், மண்மேடுகள் இருந்தன, அவரவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு தகுந்தவாறு அந்த சமாதிகள் கவனிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன.

பாண்டி அவைகளை வியப்புடன் பார்த்து கொண்டு சென்றான். இதுவே இவர்கள் உயிரோடு இருந்தால் இந்த இடத்தை வெட்டு குத்து ரணகளமாக்கி இருப்பார்கள். இன்று தங்கள் பாட்டிற்கு இருளின் மடியில் அமைதியாய் துயில் கொண்டு இருக்கிறார்கள்.

சீட்டுகட்டு ஆடுவதற்கும், சாராயம், கஞ்சா போதைப்பொருள்கள் விற்பதற்குமான இடமாக சில காலங்களுக்கு முன் இந்த சுடுகாடு இருந்தது பொது மக்களுக்க்கு குறிப்பாகப்ப் பெண்களுக்கு மிகவும் தொந்தரவாக இவர்கள் இருந்தனர். அவசர ஆத்திரத்திற்கு உபாதைகளை கழிக்க ஒதுக்குவது பிரச்சனையானது. எவ்வளவு எதிர்த்தும் இந்த கும்பல்களை அகற்ற முடியவில்லை.

இளைஞர் அணியினர் முயற்சியால் அந்த கும்பல் படிப்படியாய் வேறு இடம் பெயர்ந்து விட்டனர். அதிலிருந்து தோழர்கள் அடிக்கடி இங்கு வந்து சென்றனர். தத்தனேரி சுடுகாட்டை சுற்றியுள்ள இடங்களில் இந்த குழு தோழர்கள் இருந்ததால் அவசர அரைமணி கூடுகைகளுக்கு சுடுகாடு சமாதி வசதியாக இருந்தது. மக்களும் இயல்பாக இதை பழகி இருந்தனர். தோழர்கள் மக்களிடம் இருந்து பிரிக்க முடியாமல் அய்க்கமாகி இருந்தனர்.

தோழர்கள் வழக்கமாக கூடும் கல்லறையை பாண்டி அடைந்தான். பெரிய முதலாளியின் சமாதியாக அது இருக்கக்கூடும். மேற்கூரையுடன் சிறிய மணிமண்டபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. பெரிய வேப்பமரமும், மரமல்லிமரமும் அந்த கல்லறையைக் குடைவிரித்து மூடி இருந்தன. தூய காற்றும், சுகந்த நறுமணமும் வஞ்சனையின்றி வீசிக் கொண்டிருந்தது .எத்தனை தொழிலாளிகளின் உழைப்பை உறிஞ்சி அந்த முதலாளி சுரண்டி கொழுத்தான் என்று தெரியாது. இன்று பாட்டாளி வர்க்க அரசை அமைக்க சிறிய இடமும், நிழலும் தோழர்களுக்குத் தந்து உதவிக் கொண்டிருந்தான். மரமல்லிகை மணமும் வேப்பம்பூ வாசமும் பாண்டியை கிறக்கத்தில் ஆழ்ந்த முயன்றது.

தூரத்தில் ஒரு கல்லறையின் மீது வாயில் கொள்ளிக்கட்டையுடன் ஒர் உருவம் புரண்டு கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டான். சில்லொன்று காற்று வீசினாலும் அவன் உடல் குப்பென்று வியர்த்தது. கண்ணை அகலத்திறந்து உற்று நோக்கினான்.

“அட நம்ம மரியதாஸ்……தோழர்……..”
சிவலோக பெரும் பதவி அடைந்த ஆச்சாரம் அனுஷ்டானமிக்க பார்ப்பனரின் சமாதியில் சம்மனமிட்டு தாஸ் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்

.அவர் வாயிலிருந்த சுருட்டு கண கணவென்று தீக்கங்காய் இருளில் மின்னின. பாண்டி கலகலவென்று சிரித்தார்.

“என்ன… தோழர் இப்படி சிரிக்கீறீங்க…….யாரவது கேட்டா பேய்கள் நடுநிசியில் சுடுகாட்டில் கும்மாளம் போடுதுன்னு கதைய கட்டி விடப்போறாங்க”

“ஆச்சார அனுஷ்டாங்கன்னு இந்த ஐயர் உயிரோடு இருக்கும் பொழுது மற்றவங்களை கிட்ட விடமாட்டான்…… பத்தடி தள்ளிதான் வைத்திருப்பான்…… இன்னிக்கு அவன் மடியில் உட்கார்ந்து சுருட்டை வேறு குடிக்கிகீறீங்க.. வரலாறு திரும்புதா தோழா..” என்று கண்சிமிட்டி விட்டு,
“பீடியை விட்டுட்டு சுருட்டுக்கு எப்ப மாறினீங்க…”

“நீங்க வேற பீடி வாங்க மறந்திட்டேன்.. அரிச்சந்திரன் கல்லிடம் இரண்டு சுருட்டுகள் கிடந்தது அவசரத்திற்கு தப்பில்லன்னு உதவுன்னு கும்பிடு போட்டுட்டு எடுத்துக்கினேன்”

“எ நண்பன் செகண்ட ஷோ சினிமா கூப்பிட்டான்னு போனேன் தோழர்… வூட்டுக்கு போய் படுத்த எங்கே காலையில் வராமல் தூங்கிடுவென்னு அவனை அனுப்பிட்டு நான் நேரா இங்கே வந்துட்டேன். அந்த சமாதியில் தான் படுத்தேன். மல்லி வாசமும் , வேப்பமரம் பேய்ஆட்டமும் பயத்தை தந்தது. அதான் நம்ம அய்யர் சமாதியில் படுத்திட்டேன்” என்று தாஸ் சிரித்தார்.
நிலா ஒளியில் அங்கிருந்த வேப்ப மரங்களின் கிளைகள் சிலிப்பிகொண்டு ஆடுவது கும்பலாக பேய்கள் ஆடுவது மாதிரியே இருந்தது.

கட்டிடப் பெரியாள் வேலைக்கு தாஸ் செல்வது வழக்கம். அந்த வேலை கிடைக்காமல் போனால், கிடைக்கும் எந்த உதிரி வேலைகளையும் செய்வார்.
பன்னாட்டு தொழிற்சாலைக்குத் அவசியமான சிறிய நெட்டு-போல்டு தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையில் பாண்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேலை செய்தான். ஐ.டி.ஐ முடித்து பயிற்சி தெரழிலாளியாய், அப்ரண்டிசாய் ஒப்பந்த தெரழிலாளியாய் அந்த தொழிற்சாலையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தான். பெயருக்கு ஒரிரு தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளியாக வைத்துக் கொண்டு மற்றவர்களை ஒப்பந்த தொழிலாளிகளாக, குறைந்தகூலி கொடுத்து கடுமையாக அந்த முதலாளி வேலை வாங்கினான். இந்தியாவில் புதிய தொழில் கொள்ளைக்கு, ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு மதுரையை தப்பவில்லை. தொழிலாளர்களிடம் முணகலாய் அதிருப்தி தோன்றியது. போராட்டமாய் வெடித்தது.

இந்த முதலாளி விவகாரமானன். நொடிந்த தொழிற்சாலை என்று லாக்அவுட் செய்து தொழிற்சாலையை மூடி விட்டான். வழக்கு தொழிற்தகராறு நீதிமன்றத்திற்கு சென்றது. சட்டம் எல்லாருக்கும் பொதுவானதாக சொன்னாலும் இறுதில் முதலாளிக்கே சேவகம் புரிந்தது. ஜவ்வாய் இழு இழு இழு இழு என்று இழுத்து கொண்டு இருக்கிறது. முதலாளி வேறு பெயரில் வேறு இடத்தில் தொழிற்சாலை தொடங்கி வேறு தொழிலாளிகளை வைத்து விட்டான். அவன் கொடுக்கும் கூலியை வாங்கி கொண்டு தொழிலாளிகள் மூடிக் கொண்டுவேலை செய்ய வேண்டும் அவர்கள் முணு முணுப்பைக் கூட அவன் விரும்புவதில்லை. தொழிற்சங்கம் அமைத்தால் லாக் அவுட்தான்!
இந்த போராட்டம் பாண்டிக்கு பலவற்றைக் கற்றுத் தந்தன. அவன் தனக்கான, அதன் வழியாக ஒட்டுமொத்த மனித குல விடுதலைக்கான வழியை, தத்துவத்தை, அமைப்பை கண்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இன்று இளைஞர் அணியின் முக்கிய செயல்வீரன்.

மகா கணம் பொருந்திய சீறீ சீறீ சீறீ சீறீ ஆச்சாரிய ……………. சிவலோக பதவி பேறு பெற்றவருடன் மரியதாசும், வைகுண்ட பதவி பேறு அடைந்தவருடன் பாண்டியும் படுத்து தூங்கி போனார்கள். நிலவின் வெண்ணொளி கிரணங்கள் இலைகளின், மரக்கிளைகளின் ஊடாக பயணித்து ஒளியும்-நிழலும் பிணைந்த படுக்கையை, போர்வையை அவனுக்கு தந்தன.

பாண்டியின் கன்னத்தில் பளார் பளார் என்று யாரோ அறைந்தனர். தாஸின் தலைமுடியை கொத்தாக யாரோ பிடித்து இழுத்து ஆட்டினர். வலியில் துடித்து அவர்கள் எழுந்தனர். அதிர்ச்சியில் அவர்கள் தூக்கம் பறந்து போனது யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியவில்லை.

ஆவிகள் . . . பேய்கள் . . . அடித்து இருக்குமா என்று அவர்கள் உள்மன ஒட்டங்கள் ஒடின. பேய்கள் இல்லை என அறிவுணர்வு அறிவுறுத்தியது. திருதிருவென முழிந்தவாறு சுற்றும் முற்றும் தேடினர்.

விரட்டி அடிக்கப்பட்ட அந்த போதை கும்பல்களில் யாராவது கலாட்டா செய்கிறார்கள் என்று பாண்டி யோசித்தார். அதற்குள் இதற்கு மேல் கண்ணாமூச்சி காட்டினால் நன்றாக இருக்காது என்று குமாரும், சேகரும் மெல்ல சமாதிகளின் பின்புறங்களில் இருந்து தலைகளை நீட்டி எட்டி பார்த்து சிரித்தனர்.

பொய் கோபத்தில் இவர்கள் அவர்களை அடிக்க துரத்தினர். அந்த இரவில் சமாதிகளைச் சுற்றி சுற்றி வந்து தோழர்கள் ஒடியாடினர். உள்ளிருக்கும் ஆன்மாகள் இதை ரசித்து மகிழ்ந்தன.

அதற்குள் சிதம்பரம் வந்து விட்டார். அவர் வந்தால் மணி சரியாக அதிகாலை 3 மணி என குறித்து.வைத்து கொள்ளலாம். அந்த அளவிற்கு நேரத்தை சரியாக சிதம்பரம் கடைபிடித்து ஒழுகுவார்.

“உங்க விளையாட்ட நிறுத்திட்டு… வந்த வேலையை கவனிங்க” என்று கூறினார். ஆணையாக வந்ததா? கடமையாக வந்ததா? அந்த கட்டளை என்பது அறிய இயலாது. அவர் கையில் சுவாராட்டிகள் கட்டுகளும், இரண்டு வாளிகளும் இருந்தன.

மேதின சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக இவர்கள் இங்கு கூடி உள்ளனர் சிராவூதீன் மட்டும் இன்னும் வரவில்லை. இயல்பாக அவர் கொஞ்சம் தாமதமாக வருவார். பெற்றோர்களுக்கு ஏதாவது சாக்கு சொல்லி விட்டு வர வேண்டும் அல்லவா.?

பாண்டியும் சேகரும் வாளிகளையும், மைதாமாவு பொட்டலத்தையும் எடுத்துச் சென்றனர். தாஸ் காலை கடனை கழிக்க வேண்டுமென சுடுகாட்டின் உட்புறமாகச் சென்றான். அந்த சுடுகாட்டின் ஒரு பகுதி அந்த மக்களின் காலைக் கடன்கள் கழிக்கும் கழிப்பிடமாக இருந்தது.

“குமார்……. சுத்தமாய் வைக்கப்பட்டு இருக்கிற சமாதிகிட்ட அசிங்கம் பண்ணாதீங்க. ஒதுக்கு புறமா போங்க”ம் என்று சிதம்பரம் அறிவுறுத்தினார் அதன் அர்த்தம் குமாருக்கு புரிந்து தலையை ஆட்டினர்.

அடி பம்பில் லொடக் லொடக் என்று அடித்து வாளியில் பாதி நீரை நிரப்பினர். மைதாவை அதில் கொட்டினர். மைதா தண்ணீருடன் சேர்ந்து கட்டி கட்டியாய் மிதந்தது. சேகர் வாளியில் கையை விட்டுகட்டிகள் இல்லாமல் கரைசலாய் கரைத்து எடுத்தார்.

எழுந்து ஆட்டம் போட்ட பிணம் பின்னர் சமத்தாக படுத்து சாம்பலாகி நீருபூத்து கிடந்தது. பாண்டி சாம்பலை லேசாய் தட்டி சாம்பலை அகற்றினார். தொடை எலும்புகள் கனல் கக்குகளால் சிவந்து சுடர்விட்டு கொண்டிருந்தது. அந்த கக்குகளை பரப்பி அலுமினிய வாளியை அதன் மீது வைத்தார்.
சிறிது நேரத்தில் பாத்திரம் சூடேறி மைதா கரைசல் கூழாக்கி பொலக் பொலகெனக் கொதித்தது. ஒட்டுவதற்கான பக்குவம் வந்ததும் அதை இறக்கினார்

“யாராடா அது… பிணம் எரிகிற இடத்தில்..” என்று சத்தம் போட்டார் வெட்டியான்

அதற்குள் சிதம்பரம், தாஸ் தோழர்கள் வந்து சேர்ந்தனர்
.
“அண்ணே…… நாங்ங்க தான்.. கொஞ்சம் பசையை காச்சிட்டு போயிக்கிறோம்”
“சரி சரி யாரவது பாக்கிறதுக்குள்ள வேலையை முடிச்சிக்கிட்டு கிளம்புங்க”
இந்த உரையாடல் ஒவ்வொரு மாதமும் நடக்கின்ற நிகழ்வு தான்.
பசையின் சூடு ஆறினதும் நீரை சேர்ந்து சுவரொட்டியில் தடவும் பதத்திற்கு கொண்டு வந்தனர். இரு வாளிகளிலும் பசையை நிரப்பிக் கொண்டனர். இரு குழுக்களாய் பிரிந்து கொண்டனர்.

பாண்டி, தாஸ், சேகர் ஆகிய மூவரும் தத்தனேரி, செல்லுர், ஐம்புராபுரம் மார்கெட், தேவர்சிலை பகுதிகளுக்கு சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக புறப்பட்டனர்.

பாண்டி பசை வாளியை, சுவரொட்டிகளை சுமந்து சென்றார். அதிகாலையில் வைகை ஆற்றிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று மனதில் புத்துணர்ச்சியை சிலிர்ப்பித்தது. சுவரில் லேசாய் இரு ஒரங்களில் பசையை குறிப்பிட்ட இடைவெளியில் சேகர் தடவினர் . சுவரொட்டியை தலைகீழரக அந்த பகை ஆணிகளில் மாட்டி தொங்க விட்டார். கச்சிதமாய் சுவரில் ஆணி அடித்தாற் போல் அது தொங்கியது. சுவரொட்டி முழுவதும் அங்காங்கே பசை பரவுமாறு லாவகமாய் கையிலிருந்து பசையால் ஒட்டினார். பின் வேகமாக சுவரொட்டியை திருப்பி சுவரில் ஒட்டினரர்.

அதில் மேதின சூளுரை முழக்கங்கள் செழுமையான சிவப்பு வண்ணத்தில் பளிச்சிட்டன. பன்னாட்டு கார்ப்ரேட்டுகளுக்கும், அதன் அடி வருடிகளான இந்திய பெரு முதலாளிகளுக்கும் நமது நாடு அடிமையாக்கப்படுவதை எதிர்த்தும், நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தவும், தொழிலாளர் தலைமையில் இந்த சுரண்டல் அரசை பலக்காரமாக தூக்கி ஏறிவதையும் மையமாக கொண்டு முழக்கங்கள் அதில் இருந்தன.

தாஸ் சிறிது தூரத்தில் இவர்களை கண்காணித்தபடி விலகியும் விலகாமலும் கூடவே வந்து கொண்டு இருந்தார். இந்த நாட்டில் முதலாளிகள் உரிமைகளையும், அதற்கான சட்டம் ஒழுங்கையும், சனநாயகத்தையும் காப்பதற்கு காவல்துறை கடமையாற்றுவதிலும், அதற்கும் மேலாக புரட்சி வராமல் முளையிலேயே கிள்ளி எறிவதந்கு இயல்பாகவே காவல்துறையினர் பழகி இருந்தனர். காவல்துறையின் தொந்தரவுகள் இல்லாமல் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு வேறுவழியின்றி அதிகாலையை தோழர்கள் தேர்ந்தெடுத்து இருந்தனர். காவலர்கள் ‘நைட்டுயூட்டி’ பார்த்து கலைத்து போய் இருப்பார்கள் அல்லவா? தாஸ் கண்காணிப்பும் இந்த கொசுத் தொல்லைகளைத் தவிப்பதற்குத்தான்!

பாண்டி திடீரென்று சிரிக்க ஆரம்பித்தார். சிரிப்பு கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்தது. விழுந்து விழுந்து சிரித்தார். வெண்மணல் விரிந்த வைகையின் கரைகளில் சிரிப்பு மோதி எதிரொலித்து அந்த கருங்கலில் வித்தியாசமாய் தென்பட்டது.

“என்ன ஆச்சு…….. இப்புடி ….. “என்று தாஸ் அதட்டினர். சேகர் முறைத்தார். ஆனாலும் அவர் சிரிப்பதை நிறுத்தவில்லை. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு வந்தது. வயிற்றை பிடித்து கொண்டு நடுச்சாலையில் அமர்ந்தப் பின்புதான் அந்தச் சிரிப்பு நின்றது. சிறிது அமைதி… இடைவெளிக்கு பிறகு

“மீண்டும் யுரோகா…… மீண்டும் யுரோகா…” என்று பலமாய் சொன்னார்.

“முதலாளியம் தனக்கு தான் சவகுழியை வெட்டுமென்று மார்க்ஸ் போன நூற்றாண்டில் எழுதியதன் அர்த்தம் எனக்கு இருப்பதான புரிந்தது! என்னுடைய பழைய முதலாளி பார்.. தனக்கு எதிராய் போஸ்டர் ஒட்ட தன்னையே எரித்து தந்துள்ளார் பாருங்கள்” என்று கையை நீட்டினார். அங்கு தொழிலதிபர் அகால மரணம்-அஞ்சலி என்று அந்த குண்டுபூசணிக்காய் முதலாளியின் புகைப்படம் முழுவதுமாய் பரவிய கிடந்த சுவரொட்டிகள் வரிசையாய் ஒட்டப்பட்டு கிடந்தன. அதற்கு பக்கத்தில் மேதின சூளுறைப் சுவரொட்டிகளும் அதற்கு முரணாய் ஒட்டப்பட்டுக் கிடந்தன. ……

தோழர்கள் அனைவரும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர். கட்டுகடங்காமல் ஏன் இவர்கள் சிரிக்கிறார்கள் என வைகை நதி திரும்பி பார்த்தது.

Friday, June 8, 2012

தோழனுமாகிய காதலி


தோழனுமாகிய காதலி

அவனெல்லாம் மனுசனா...... மிருகமா....... எட்டு வருசத்தில் எட்டு பிரசவம்.... நாலுப் புள்ளங்க  நாலு அபாசன்கள்.... பொம்பள எப்படித் தாங்குவா?..... மனுசனா பொறந்தா கொஞ்சமாவது அறிவிருக்கவானா... அறுவை பண்ணிக்க... இல்ல லூப்பாவது போடுன்னு சொன்னேன்... கேட்க மாட்டிற... போய் உம் புருசன கூப்பிட்டு வா
அரசு குடும்ப நல மருத்துவமனையின் பெண் டாக்டர் யாரையோ காட்டுக் கூச்சலாகத் திட்டி கொண்டிருந்தார்.
டாக்டர் அவரு வர மாட்டேங்கிறாரு... வேலை இருக்காம்மெல்லிய சன்னமான பெண்ணின் குரல் தயக்கத்துடன் பதில் சொல்லிற்று
டாக்டரின் குரல் இன்னும் சூடாகி வெடித்தது.
இன்னா நெனச்சிருக்காங்க பொம்பளங்க இன்னா ஆம்பிளங்களுக்கு சுகம் தரும் மிஷினா-... அட் லீஸ்ட் நீரோத்தாவது பயன்படுத்துங்கன்னு கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி அனுப்பினேனே.....
அவருக்கு நிரேத் போடுரது பிடிக்க மாட்டேங்குது. டாக்டர்....என்ன கெஞ்சினாலும் கேட்க மாட்டுராரு
துயரமும், இயலாமையும் ஆழமாய் தோய்ந்து அந்த பெண்ணின் குரலில் ஒலிந்தது. அது அந்த பெண்ணின் குரல் மட்டும் அல்ல என்பது தனது பல ஆண்டுகள் தொழில் அனுபவத்திலும், தனிப்பட்ட சொந்த அனுபவத்திலும் இதை அந்த பெண் டாக்டர் நன்றாகவே உணர்ந்து இருந்தார். வேறு வழியின்றி அந்த பெண் டாக்டர் சுருதி கொஞ்சம் தேய்ந்து ஒலித்தது.
ய்ந்து மாத கைக்குழந்தை வைச்சிருக்கம்மா... ஆண் வாரிசு வேணும்ன்னு வரிசையா நாலு குழந்தைங்கல பெத்திட்டம்மா இடை இடையே நாலு அபாசனும் நடந்திருச்சு... உடம்பில் ஒன்னுமில்லை. இப்ப உன் உடம்பு இருக்கிற நிலையில் இன்னொரு கருகலைப்பு ப்ரேசன் பண்ணவோ, புள்ளைய பொத்துக்கிறதோ முடியாதும்மா... இந்தா இந்த மாத்திரைகளையாவது ஒழுங்கா வேலா வேளைக்கு சாப்பிடு....என்று டாக்டர் அலுத்துக் கொண்டு சொன்னார்.
டாக்டர் அறையில் நுழைவாயிலில் இருந்த மனோன்மணிக்கு டாக்டரின் கோபத்தின் ஆழம் நன்றாகப் புரிந்து இருந்தது. அடுத்தாக டாக்டரை சந்தித்தால் தன்னிடமும் இவ்வாறு எரிந்து விழுவாரா என்று தயங்கி தயங்கிக் கொண்டிருந்தாள்.
            அவள் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் கைக்குழந்தை வீல் என்று அலறி அழுதது. அந்த குழந்தையால் நோயின் வாதை தாங்க முடியவில்லை போலும். குழந்தைகள் தங்களால் இயன்ற அளவிற்கு நோயினை தாங்கி விளையாடி கொண்டும்,  சிரித்துக் கொண்டும் இருக்கும். முடியாத பொழுது மட்டுமே இப்படி வீறிட்டு அழும் ஆர்ப்பாட்டம் செய்யும் என்று மனோன் மணிக்கு அனுபவத்தில் தெரிந்து இருந்தது. அந்த கைக்குழந்தையின் தாய் கண்களால் கெஞ்சினாள். அவளை டாக்டரிடம் முதலில் போகச் சொல்லி விட்டு மனோ அடுத்த முறைக்காக காத்திருந்தாள்.
இயல்பாவே டாக்டர் மனோவை விசாரித்தார். அந்த பெண்ணிடம் காண்பித்த எரிச்சலை அவர் இவளிடம் காண்பிக்கவில்லை. ஏற்கனவே அந்த டாக்டர் மனோவிற்கு அறிமுகம் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனோமணியும், உதயகுமாரும் இந்த டாக்டரிடம் ஆலோசனைக்காக வந்திருந்தனர்.
மனோவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி எங்க காதல் திருமணம் நடந்துள்ளது.  எங்களுக்கு இடையே ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதல் வளரனும்.... எங்கள் இருவரில் யாருக்காவது நிரந்தர வேலை கிடைக்கனும் அதுவரையில் குழந்தை பிறக்கிறத தள்ளி போடனும்.  அதற்குதான் உங்களிடம் வந்திருக்ககோம் என்று உதயகுமார் ன்றைய சந்த்திப்பில் கூறியதை டாக்டர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.
கல்யாணம் நடந்த அடுத்த பத்தாவது மாதத்தில் குழந்தை பெற்றால் தான் ஆண்மை என்று நினைக்கும் ஆண்கள் உலகத்தில் உதயகுமார் சற்று வித்தியாசமானவராக அந்த டாக்டருக்கு தெரிந்தார். இயற்கையான வழிகளிலும், செயற்கையான முறைகளிலும் குடும்பம் கட்டுபாடுகள் பற்றிய பல செய்திகளை அப்பொழுது டாக்டர் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அதன் பிறகு பல நேரங்கள் மனோன்மணி அந்த டாக்டரிடம் சென்றுள்ளார். அவளின் பிரவசத்தை அவர்தான் கவனித்தார். மனோவிற்கு நல்ல படியாக சுகப்பிரவசம் நடந்ததில் அந்த டாக்டரின் பங்கு முக்கியமானது.
தற்பொழுது வேறு பிரச்சனையில் டாக்டர் ஆலோசனைக்காக வந்து இருந்தார்.
 ஆறு ஏழு மாத கைக்குழந்தை இருக்கையில் கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்பதை அறியவே மனோ டாக்டரிடம் வந்து இருந்தாள். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ப்ரியட் ரேகுலராய் ஆகாத பொதும் சில சமயங்களில் கர்ப்பமாக வாய்ப்புள்ளதாக அந்த பெண் டாக்டரும் கூறினார். அப்படி கர்ப்பமாவதும், குழந்தை பெறுவதும் குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது அல்ல. இருவரின் உடலும் மனமும் பாதிக்கும் என்றார் டாக்டர்.
ரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இடைவெளி இருப்பது அவசியம் என்று வானொலி விளம்பரம் போல் சொல்லி விட்டு அவர் சிரித்தார்.
பின்பு அவள் கணவர் உதயகுமாரை பற்றி டாக்டர் விசாரித்தார். அவர் மனோன்மணியிடம் விரிவாக பேசிக் கொண்டிருந்தார். இதற்கு முன்னர் தான் சத்தம் போட்டு திட்டிய பெண்களின் நிலைமையை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார்.
மனோவிடம் கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்யும் படி சீட்டு எழுதி தந்தார்.
மறுநாள் பரிசோதனையில் முடிவு கர்ப்பத்தை உறுதி செய்து விட்டிருந்ததை விளக்கினார். மேலும்,
கருகலைப்பு நா செய்யரது இல்லம்மா.. நா அந்த பாவத்தை செய்வதில்லை.. எனக்கு தெரிந்த டாக்டரிடருக்கு சீட்டு தருகிறேன் என்றார். கருகலைப்பதற்கு சில மாத்திரைகளையும் எழுதி தந்தார்.
ஆனால், அவைகள் எந்த பயனும் அளிக்கவில்லை. கருகலைப்பு ஸ்பெஷஸ்டிடம் மனோ சென்றாள்.
இயற்கையின் தேர்வுகள் சில சமயங்களில் பாராபட்சமாகயும் ஆச்சியமானதாகவும் உள்ளது. மனித இனத்தின் மறுஉற்பத்தியில் ஆண் பெண் பாலர் இருவருக்கும் சம பங்கு என்பது இல்லை. பெண்களுக்குதான் கூடுதல் சுமையும் பொறுப்பும் வலியும் அதிகமாகும். எந்த பெண்ணிற்கும் பிரசவமும், கருகலைப்பும் உயிர் போய் உயிர் பிழைக்கின்ற துன்பியல் நிகழ்வுதான்.
பிரசவத்தின் விளைவா தாய்மையின் உள்ளக் கிளர்ச்சியும், மறு உற்பத்தியில் தங்களது பிரதியைப் போன்ற புதிய உயிரினை படைக்கிற ஆற்றலும், அதிசயமும் அத்துன்பத்தினை, வலியினை மறக்கடிக்கின்றன! கருக்கலைப்பு பெண்ணின் உயிரினுள் மெல்ல மெல்ல முகிழ்ந்து  பல நாட்களாய் உருக் கொண்ட உயிரை ஒரு நாளில் சிறிது சிறிதாக சிதைத்து எடுப்பது என்பது அவளின் மன அழுத்தத்தை, வலியை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றது. மனோமணியை உச்சம் தலை மயிர்கால்களிலிருந்து உள்ளங்கால் ரேகைகள் வரை உயிர்வதையின் வலி மின்னலாய் கிழித்தெரிந்தது. அவள் முழுவதுமாய் துவண்டு நிலைகுலைந்து போனாள்.
ஆப்ரேசன் முடிந்து ஒருமணி நேரம் கழிந்து நர்ஸ் மெதுவாக மனோவைத் தாங்கலாய் அழைந்து வந்தாள். உதயகுமர் அவளைத் தாங்கி பிடிக்க வந்தார். அப்பொழுது அவள் பார்த்த பார்வை எரித்து விடுவதாக இருந்தது. நீயும் நானும் சேர்ந்து செய்த செயலுக்கு தான் மட்டும் கொடும் வலியை அனுபவிப்பதாக அவளின் பார்வை குற்றம் சாட்டியது. குமட்டி, குமட்டி காறி துப்பினாள். அது இயல்பாதா அல்லது தன்னை நோக்கியா என்று அவரால் முடிவு செய்ய முடியவில்லை. அவரும் வாடி வதங்கி பேனானர்.
கைத்தாங்கலாக ஆட்டோவில் அமர வைத்தார் ஒருகளித்து வாந்தி எடுத்தாள். உதயகுமாரின் சட்டை முழுவதும் வாந்தியானது. சட்டையை கழட்டி ஒரு ஒரமாக மடக்கி வைத்தார். கடையில் சோடாவை வாங்கி மெதுவாக அவளுக்கு குடிக்க கொடுத்தார்.
சாரி...இனிமேல்......தொடவே வேண்டாம் என்று கையைத் தொட்டார்.
சீ ஆம்பளவர்க்கமே இப்படிதான்
           அவனின் கையைத் தட்டி விட்டாள். அவளின் உடலின் உயிரினவாதை அந்த அளவிற்கு இருந்தது.
சாரி......சாரி…மன்னிச்சிடு…. மன்னிச்சிடு
இந்த சொற்களை எத்தனை தடவை பரிதாபமாய், கெஞ்சலாய் எவ்வாறு எல்லாம் சொல்லி இருப்பார் என்பது உதயகுமாருக்கு தெரியாது. வலியில் அவள் அரற்றி கொண்டு இருந்தாள்.
அடுத்த இரு வாரங்கள் வேலைக்கு விடுமுறை எடுத்து கூடவே இருந்து அவளையும், குழந்தையும் கவனித்து பாராமரித்தார். அவளுக்கு விரைவில் உடல் நலம் தேறினாள். வலியின் நினைவுகள் படிபடியாய் கரைந்து போனது. அவளின் மனக்காயமும், அவரின் மனக்காயமும் ஆறமால் கிடந்தன. நாட்களும், வாரங்களும் கடந்தும் அது மறையவில்லை;
இருவரும் இணைந்து செய்த செயலுக்கு ஒருவரை பொறுப்பாக்கும் இயற்கையின் தேர்வை தான் குறையாக்க வேண்டியிருக்குமே தவிர உதயகுமாரை எப்படி பொறுப்பாக முடியும் என்று  அவள் நினைத்தாலும், அந்த கருகலைப்பின் பொழுது இரத்தக் கவுச்சி வாடை அவளை விட்டு அகல மறுத்தது. அடிக்கடி தனிமையில் இருக்கையில் உதயகுமாரை சந்தித்து முதல் நிகழ்ந்த நினைவுகளை அசைப் போட்டாள். காதலித்து மகிழ்ந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடின!  இப்பொழுது நடந்தது போல் அவைகள் உள்ளது.
சிலரை சிலருக்கு பார்த்த மாத்திரம் பிடித்து போய் விடுகிறது. இதற்கும் இயற்கையின் தேர்வு காரணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இருவருக்கும் இடையில் கெமிஸ்டிரி இணைக்கின்றது எனலாம். பள்ளி, கல்லூரி, அலுவலகம் நட்புகளிலிருந்து காதல் வரைக்கும் இந்த கெமிஸ்டிரி இயங்குகிறது.
முதல் பார்வையிலேயே அவளுக்கு அவரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது. கல்லூரி விடுதி வாழ்க்கை மனோன்மணிக்கு பல தோழிகளை அறிமுகப்படுத்தி இருந்தது. தோழிகளின் மூலமாக சமூகம் பற்றிய சிந்தனைக்கான இலக்கியமும், நட்பு வட்டமும் அவளுக்கு அறிமுகமாயின. அந்த வட்டத்தில் உதயகுமாரும் இருந்தார். கல்லூரியில் நடந்த போராட்டங்களில், சமூக பிரச்சனைகளில் அவரின் ஆர்வமும் மனோ அவர்பால் நெருங்க காரணங்களாய் அமைந்தன. நட்பாக, தோழமையாகவே முதலில் அந்த உறவு இருந்தது. கல்லூரி இறுதியில் இந்த உறவு அந்த எல்லையுடன் இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
அவள் கண்ணில் தெரிந்த காதலை, அவள் பார்வையில் பொதிந்திருந்த காதலை அவர்கள் இருவரும் உணர்ந்து இருந்தாலும் வெளிப்படுத்தாமல் பிரிந்துனர்.
அவள் வீட்டில் எப்படியும் அவளின் திருமணத்தை முடிக்கும் போக்கில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கினர். கல்யாண சந்தையில் தானொரு பொம்மைதான் என்பதை உணர்ந்த பொழுதில் மனோன்மணிக்கு எழுந்த சங்கடங்கள் சொல்லி மாளாது!
இதிலிருந்து தப்பிக்க முதுகலைப் பட்டப்படிப்பில் அவள் சேர்ந்தாள். உதயகுமாரும் அந்த நகரில்  உள்ள கல்லூரியில் படித்தார். போராட்டங்களில், பொது கூட்டங்களில் சந்திப்புகள் தொடர்ந்தன. அவரிடம் தனது காதலை உறுதிபடுத்திக் கொள்ள அவள் முனைந்தாள். அவன் முதலில் பிடிகொடுக்கவில்லை.
 மிகுந்த தயக்கத்திற்கும் பிறகே அவளின் காதலானகினான். பிற்பட்ட சாதியை சேர்ந்த அவளின் பெற்றோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த அவனுக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்கள் என்பது அவன் தயக்கத்தின் அடிப்படை! தனிப்பட்ட தனது காதல் உணர்வுக்காக நல்ல நண்பனை, தோழனை சிக்கலுக்குள் இழுத்து விடக் கூடாது என்பதாக உதயகுமாரின் சிந்தனை இருந்தது. ஆனாலும் கூட  காதல் தான் வென்றது.
சமூக சிந்தனையும், அதில் ஊற்றி நின்ற தோழனும் அவளின் வாழ்க்கைப் பயணத்தில் அவசியமாகி இருந்தது. அந்த காதலில் திளைத்து ஊற்றி நின்றாள்.
 பெற்றோரிடம் சாடைமாடையாக பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கும் பாவனையில் தனது காதலை விளக்கி சம்மதிக்க வைக்க முடியுமா என்று பார்த்தாள். அப்பாவின் கருத்தை சொந்த சாதிக்குள் காதலித்தாள் பரவாயில்லை என்கின்ற அளவிற்குதான் அவளால் நகர்த்தி தள்ளிக் கொண்டு போக முடிந்தது. வேறு வழியின்றி அவள் அவனுடன்  ஒடி போய் விட்டாள்.
காதலர்கள் இணையர்களாக பேராசிரியர் தலைமையில் தோழர்கள் முன்னிலையில் இணைந்தனர்.  அவளின் தந்தை ஆள் அம்புகளுடன் படை எடுத்து வந்தார். சாதி கோத்திரத்தின் ஒரு கிளை முறிவதை சாதிக்காரர்கள் தடுக்க விரும்பினர். மனோன்மணியின் உறுதி அவளின் தந்தையை, சாதிகாரர்களை நிலைகுலைய வைத்தது. நடுத்தெரு புழுதியில் புரண்டு புரண்டு ஒப்பாரி வைத்து அவர் அழுதார். அவ்வளவு பெரிய பாரிய உடம்பு மண்ணில் கிடந்தது பரிதாபமாக இருந்தது. ஒருகணம் உதயகுமார் தனது காதலை விட்டு விடுலாமா என்று கலக்கத்துடன் சிந்தித்தார். அவள் அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.  இறுதியில் காதலின் கடைக் கண்ணில் தெரிந்த காதல் தான் வென்றது.
காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அவர் வெற்றி கொண்டார்கள். அந்த வெற்றியின் அடையாளமாக சில ஆண்டுகளில் அவள் பெற்றோர்களிடம் உறவை புதுப்பிக்க அவர்களால் முடிந்தது. உதயகுமாரின் அணுகுமுறை இதில் முக்கியமாக இருந்தது.
காதலின் பரிசாக ஐந்தாம் ஆண்டில் மகள் பிறந்தாள். இந்த மகிழ்ச்சியில் அவர்கள் நெருக்கம் இன்னும் அதிகமாகியது. அது இயல்பானதாக இருப்பினும் அதில் ஏற்பட்ட வலிகள் அவர்களிடம் தற்போது மனக்கசப்புகளை விதைத்திருந்தன. சிறியதொரு விரிசலையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த மனக்கசப்பை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று அவள் சிந்தித்து கொண்டிருந்தாள். அப்பொழுது டாக்டர் தோழரிடம் இருந்து அலைபேசி அழைத்தது.
உங்க வீட்டுக்காரர் எனது ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளார் என்று கூறி விட்டு வைத்து விட்டார்.
மனோன்மணி பயந்து போனாள். குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறி என்னமோ ஏதோ…” என்று பதறி அடித்து சென்றாள்.
வாங்க வாங்க எப்படி இருக்கீங்க....நலமா?” என்று சிரிப்புடன் டாக்டர் விருந்துக்கு அழைப்பது போன்று அவளை வரவேற்றார்.
அந்த டாக்டர் ரொம்ப கிண்டல் பேர்வழி என்று அவளுக்கு தெரியும். அவளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. கொஞ்ச நேரத்தில் பதற்றத்தை ஏறிபடுத்தினாரே என்று கோபப்பட்டாள்.
இன்னா....தோழர் விளையாடுரீங்களா!.... என்று கடுகடுவுடன் கேட்டாள்.
நா ஏம்மா விளையாரேன் உங்க தோழர்தான் ரொம்ப விளையாடிட்டோன்று நினைச்சு கிட்டு வாரிச்சு இல்லாத இருக்க அறுவை பண்ணிக்ட்டாரு.
இவரெல்லாம் எப்படிம்மா புரட்சி பண்ணுவாரு  வாக்கிடாமி  என்பது மைனர் ஆப்ரேசன்தான்.. மயக்க மருந்து கொடுக்கல்லண்ணா என்ன வலிய வலின்னு   கத்தராரு...இவரு போலிஸ் சித்ரவதைய எப்படி தான் தாங்குவாரோ....எப்படிதான் புரட்சி நடக்கப் போதோ..” என்று அரை மயக்கத்தில் தான் அறுவை செய்த பொழுது உதயகுமார் வலியில் துடித்ததை நக்கல் பண்ணிச் சொல்லிக் கொண்டு சென்றார்.
அவரின் கிண்டலை ரசிக்கும் நிலையில் அவள் இல்லை. கதவை தள்ளி கொண்டு அந்த சிறிய அறைக்குள் நுழைந்தாள். உதயகுமார் புன்னகையுடன் வரவேற்றார். அந்த வலிக்கு இந்த வலி சரியாக போச்சு என்பதாக அவர் பார்வை அர்த்தம் சொல்லிற்று.
இந்த ஆறு லூசா என்ன என்று அவளுக்கு தோன்றியது.
“நமக்கு ஒரு குழந்தையே போதும்..... அதற்கு துணைக்கு வேண்டுமானால் போரில்.... சுனாமியில் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்றை தத்து எடுத்துக்கலாம் என்ன?”என்றார்.
அவர் அருகில் அவள் அமர்ந்தாள், அவள் கையை எடுத்து தனது கைக்குள் உதயகுமார் வைத்து மெல்ல இறுக்கமாய் பரிவுடன் பற்றினார்.
சக தோழனான உனது வலியை, கண்ணீரை புரிந்த கொள்ளவில்லையானால் நா மனுசனே இல்ல…. இன்னும் ஒரு மணியில் வீட்டிற்குப் போய்விடலாம் என்று அவர் சொன்ன பொழுது வெளிப்பட்ட அன்பில் அவள் நெழிந்து போனாள்.
காதலனாகிய தோழனை இறுக அணைத்து முத்தமிட்டாள். அவன் காதலாகி கசிந்து உருகையில் மெய் மறந்து உச்சரிக்கும் அந்த ரோசா லக்சம்பர்க்கின் இரு கவின் வார்த்தைகளை அவள் மெல்ல அவன் காதில் முணுமுணுத்தாள்.
          காம்ரேட் ……லவ்..வர்
அந்த நெருக்கம்... அது தந்த வலி... அவனும் செல்லமாய்ச் சிணுங்கினான்.
“அன்பு.. தோழா…..  ஆசை…காதலியே..”