வந்தே
மாதரம்
ஓ!
எனதருமைத் தாய் நாடே!
அன்னையும் நீயன்றோ,
அப்பனும் நீயன்றோ
தேடி வரம் கொடுக்கும்
தெய்வமும் .நீயன்றோ
சமுதாய விரோதிகளின்
சயன அறைதேடிச்
சல்லாபம் புரிகின்ற
கற்பன்றோ உன் கற்பு
உறுப்புக்கள் அத்தனையும்
உலகத்தின் சந்தையிலே
அடமானம் வைத்துவிட்ட
அழகன்றோ உன் அழகு
சீமான்கள் அரவணைப்பில்
சிந்தை பறிகொடுத்து
இன்துயிலில் ஆழ்ந்துவிட்ட
இளமையன்றோ உன் இளமை
கண்டவர்கள் உன்முகத்தில்
காரி உமிழ்ந்தாலும்
கலக்கமோ கொள்ளாத
போதையன்றோ உன்போதை
கோடானு கோடியிங்கு
கூழின்றிச் செத்தாலும்
பசுமையே மாறாத
நாடன்றோ உன்நாடு
பொன்வினையும் பூமிதனைப்
புல்லர்களின் கூட்டமிங்கு
வயலெலியாய்த் தோண்டி
வளத்தை உறிஞ்சுகையில்
அஞ்சிப் பதுங்கி
அன்பின் திருஉருவே
நீயன்றோ பாரதத்தாய்
பாரதத்தாய் வாழ்க!
பாரதத்தாய் வாழ்க!!
உன்மானம் காத்திருந்த
ஒற்றைத் துணி கூட
கொடிகளாய் மாறியதால்
கோமகளே கிராமமெலாம்
அம்மணமாய் அலைகின்ற
வீரமன்றோ உன் வீரம்
கடன்வாங்கிக் கட்டிவிட்ட
மாளிகையில் காலெரிந்த
பூனைபோல் அஞ்சி,
அஞ்சி நடைபோட்டு
பதுங்கிச் செல்கின்ற
பரிதாபம் உனதன்றோ
பசியாலே துடிதுடித்துப்
பதறும் குழந்தைகட்கு
பால்சுரக்க மாட்டாத
பாலையன்றோ உன்மார்பு
இரவல் நகைபூண்டு
இரவினிலே தெருவோரம்
பரத்தையாய் அலைகின்ற
மினுக்கன்றோ உன்மினுக்கு
ஓ பாரத மாதாவே!
உன் பயணத்மின்
இலட்சியம் தான் என்ன?
பாரதத்தாய் வாழ்க
பாரதத்தாய் வாழ்க
புரட்சி கவி செரபண்டராஜீ (சூன் 1968)