Thursday, November 15, 2018

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம் –ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில்..

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம் –ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில்..
*****************************************************************************************
பரியேறும் பெருமாள் திரைப்படத்தினை தலித் கண்ணோட்டம், பார்ப்பனீய கண்ணோட்டம், யதார்த்தவியல் கண்ணோட்டம், ஆதிக்க சாதி கண்ணோட்டம், தூய கலை கண்ணோட்டம், வணிக சினிமா கண்ணோட்டம் என பல நிலைகளில் விமர்சிக்கலாம். இந்த படம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகும் சிறு முயற்சி.
தமிழ் சினிமாவில் பொதுவாக “ஒற்றை வரி கதை” என்பது போயாய் பிடித்து ஆட்டி கொண்டிருக்கிறது. சர்க்கார் பட ஒற்றை வரி கதை திருட்டு பற்றிய ஊடகங்கள் கோலாகலமாக விமர்சங்கள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த ஒற்றை வரியை மக்கள்திரள் பிரச்சனையில் இருந்து உருவி எடுக்கப்படுகின்றன. ஊழல், குடிநீர், இயற்கை அழிப்பு, காதல், சாதி ஒடுக்குமுறை, சாதி பெருமை, அரசியல்வாதிகள்-அதிகாரிகள் அதிகார மீறல்கள் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த ஒற்றை வரி கதை சமூக வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களுக்குள் எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை காட்சி மொழியில் சித்தரிப்பதுதான் சினிமா. ஆனால் தமிழ் சினிமாக்கள், பெரும்பான்மை இந்திய சினிமாக்கள் இந்த ஒற்றை வரி கதையை ஊதிபெருக்கப்பட்ட கதாநாயக பிம்பம், நான்கு இரத்த களரி சண்டைகள், நான்கு பாடல்கள் ( ஒரு குத்து பாட்டு, நாயகி அரைகுறை ஆடையுடன் ஒரு கனவு பாட்டு) பஞ்ச் டயலாக், கதையுடன் இணைந்து போகாத சிரிப்பு காட்சிகள் இறுதியில் சுபம் என்பதாக கெட்டிதட்டியதாக, இறுக்கப்பட்டதாக தான் உள்ளன. மேலும், இருமைக்குள் உழலும் கதை களமாக்கப்பட்டு சமூகத்தின் பன்மை முரண்களை, வாழ்வியலை தூரமாக வீசி எறிந்து விடுகிறது
இதிலிருந்து மாறுபட்டதாக சமீபத்தில் வந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையும், பரியேறும் பெருமாள் திரைப்படங்கள் இருக்கின்றன.
சாதி மறுப்பு காதலின் பிரச்சனை அல்லது தலித் இளைஞன் - கல்லூரி மாணவனுக்கு கல்லூரி சூழலில் ஆதிக்க சாதி பெண்ணுடனா நட்பு-காதல் அதன் பிரச்சனைகள்தான் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஒற்றை வரி கதையாக சுருக்க முடியும். ஆனால் இந்த  ஒற்றை வரி கதை மதுரை வீரன் படத்தில் இருந்து பலமுறை பல திரைப்படங்களாக மீண்டும் மீண்டும் வந்துள்ளன.. இனியும் வரும் பரியேறும் பெருமாள் அந்த பல படங்களுள் ஒன்றாக இல்லை என்பதுதான் இங்கு விவாதிக்கப்பட மையம்!
தலித் கல்லூரி மாணவனுக்கு கல்லூரி சூழலில் ஆதிக்க சாதி பெண்ணுடனா நட்பு –காதல் எப்படி இன்றைய சமூக, அரசியல், பண்பாட்டு, பொருளாதார பருண்மைகளுடன் இணைந்துள்ளன… காட்சி மொழியாக சித்தரிக்கப்படுகின்றன என்பதுதான் இப்படம் பெருமான்மையோர் கொண்டாட காரணமாகும்
அது என்ன சமூக சூழல்.. சிறிது விரிவாக பார்ப்போம்!
இன்றைய தமிழ் சமூகத்தின் அரசியல், சமூக, பொருளியல் நிகழ்வுகளை கவனித்து வரும் யாருக்கும் தெரிந்த விசயம் தான் இது: லவ் ஜீகாத் என்ற இந்துத்துவா சக்திகளின் முன்னெடுப்பை நாடக காதல் என்று  டாக்டர் ராமதாஸ் & அன்புமணி கம்பெனியும், முக்குலத்தோர்-கொங்கு கவுண்டர் சில சாதிவெறி தலைவர்களும் கடந்த சில ஆண்டுகளாக சமூக தளத்தில், அரசியல் களத்தில் முன்னெடுத்து வருகின்றனர். இளவரசன்–திவ்யா, கவுசல்யா-சங்கர், கோகுல்ராஜ்-ஸ்வாதி காதல் வாழ்விலும்….இன்னும் பல சாதி மறுப்பு காதல் இணையர்களின் சாதிவெறி படுகொலைகளுக்கு இந்த சுயசாதிவெறி அரசியல் காரணங்களாக உள்ளன என்பன யாருக்கும் தெரிந்த விசயம்.
அதே போல் தமிழ்நாடு பொருளாதாரம் முதலாளிய பொருளாதாரமாக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல், ஆரம்ப கல்வி, உயர் கல்வி  வளர்ச்சி புள்ளிவிவரங்கள் நமக்கு இதை தெளிவாக விளக்கும். இது சமூக வாழ்விலும், தனிமனித வாழ்விலும் பிரதிபலிக்கின்றன. அதன்விளைவாக சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் இயல்பான நடந்து சாதி இறுக்கம் தளர்ந்து கொண்டிருப்பது கண்கூடாக தெரிகின்றன.  இந்த தளர்விற்கு எதிரானதுதான ஓட்டு பொறுக்கி அரசியல், வாக்கு வங்கி அரசியல், சாதி வெறி அரசியல்கள் பின்னணியில் நாடக காதல், லவ் ஜீகாதி, ஜீன்ஸ்- கூலிங்கிளாஸ் இளவட்டங்கள்-மைனர்கள்  போன்ற உரையாடல்கள் பரப்பப்பட்டு விவாதங்களாக கடந்து வருகின்றன. ஆனால் இதற்கு எதிரான தமிழ் சமூகம் திரண்டு ஒற்று சேர்ந்து எழுவது யாதார்த்தமாகி வருகின்றது. மெரினா பேரெழுச்சி, காவிரி நீருக்கான பெரும் மக்கள் போராட்டங்கள், 2015 சென்னை பேரிடர் மானுட பேரன்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, ஈழப்படுகொலை எதிரான தொடர் எழுச்சிகள், டாஸ்மார்க் எதிர்ப்பு பெண்கள் போராட்டம், கூடம்குளம் தொடர் போராட்டம், நெடுவாசல் ஹட்ரோ கார்பன் எதிர்ப்பு,  ஒக்கி புயல் போராட்டங்கள் என்று தமிழ்நாட்டில் தொடரும் அனைத்து போராட்டங்களும், சமூக ஒருங்கிணைப்புகளும் எதற்கு கட்டியம் கூறுகிறது.  இந்துத்துவா லவ் ஜிகாத் சாதி வெறி அரசியல்  & டாக்டர் ராமதாஸ் & அன்புமணி கம்பெனியும், முக்குலத்தோர்-கொங்கு கவுண்டர் சாதிகளின் சில சாதிவெறி தலைவர்கள் அரசியல் அனைத்தும் இங்கு ஒட்டுமொத்த சமூக எதார்த்த மனநிலைக்கு ஒப்பீட்டு அளவில் எதிராக உள்ளது. சாதியை மீறிய மக்களின் ஒற்றுமையை இந்த போராட்டங்கள் கோருகின்றன. இந்த போராட்டங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்பின் கீழும் நடைபெறவில்லை என்பது இப்போராட்டங்களின் பலமும் பலவீனமாகவும் உள்ளன.
இந்த பின்னணி சமூக யதார்த்ததை கொண்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்தை விமர்ச்சிக்க வேண்டும்.

பரியேறும் பெருமாள் கதை தலித் வாழ்வியலை, ஒடுக்குமுறையை காட்சி படுத்துவதில் முதலில் ஆழமாக கருப்பி படுகொலையின் மூலம் பதிய வைக்கிறது.  அடுத்த நகர்புற கல்லூரி வாழ்வுக்கு தாவி விடுகிறது.  தலித்துகள் மீதான ஒடுக்குமுறையை, வன்முறை படம் முழுவதும் நுணுக்கமாக காட்சிப்படுத்துகிறது. அதோடு மட்டும் நின்று விடவில்லை. மாறி வரும் சமூக சூழலையும் சொல்லி சாதிவெறியர்களின் நாடக காதல் அரசியலை தோலுரிக்கிறது.  பெருமான்மை தமிழர்களின் மனநிலையை பிரதிபலிப்பதுதான் இக்கதை அந்த படம் பெரும்பான்மையினரால் வரவேற்க காரணம். கவுசல்யா, திவ்யா, அம்ருதா வின் ஆரம்பகால போட்டிகளை கவனத்தால் பரியேறும் பெருமாள் நாயகி ஜோ பிரதிபலிப்பதாகவே அவதானிக்க முடியும். பரியன் சித்தரிக்கப்படும் பிம்பம் நாடக காதல் என்னும் அரசியல்-சமூக கருத்தாடலை சுக்குநூறாக உடைத்து விடுகிறது. இரண்டு சாதி எதிர்நிலை மனநிலை மாந்தர்கள் மட்டும் அல்ல.. இடைநிலையில் உள்ள பரியன் நண்பன், பேராசிரியையான பரியனின் இன்னொரு தேவதை, ஊசலாடும் அல்லது மாறும் ஜோவின் அப்பா… காட்சி சித்தரிப்புகள்தான் இன்றைய மாறி கொண்டிருக்கும் சமூக பெருமான்மை.
பரியன் ஆளுமை சித்தரிப்பு உண்மையின் இன்றைய சமூக, அரசியல் யாதார்த்தை உட்செறிந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.. இத்தகைய இளம் தலைமுறையினர் இன்று இயல்பாக சமூகத்தில் உள்ளனர். உடுமலை சங்கர், இளவரசன், அம்ருதாவின் இணையர்  பிரனாய்  பற்றிய அவர்களின் காதலிகள், நண்பர்கள் சித்தரிப்புகளுடன் பரியன் ஒத்து போவதை புரிந்து கொள்ள முடியும்.
தலித் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக கருப்பி, மேஸ்திரி காட்சிகள் என்றால் மாறி வரும் சமூக மாற்றத்தின் குறி ஈடுகளாக இந்த பாத்திரங்கள், காட்சிகள், எதிர்ப்புகள் உள்ளன,
அதனால், இன்றைய  அரசியல்-சமூக யதார்த்தங்களை காட்சிபூர்வ அழகியலாக மட்டுமல்ல… இனி  வருங்காலம் பரியன்களாகதான் மாறும். ஜோ களும், பரியனின் நண்பர்களும், பேராசிரியைகளும், மாறும் ஜோவின் அப்பா இந்த பரியன்களுடன் இணைந்து கொண்டு தமிழ் தேசிய ஒர்மை புத்துயிர்ப்பு பெறும். தலித்துகளும் பெருமான்மை பிற சாதி மக்களின் கூட்டு சமூக மனநிலைக்குள் இந்த படம் இயங்குவது என்பதுதான் இந்த படத்தின் வெற்றியும், செய்தியுமாகும்.
முட்டையில் முழு வளர்ச்சி அடைந்துவிட்ட கருவுக்கு முட்டை ஓடு தடையாக இருக்கிறது புதிய வரவு அதை தகர்த்தெறிந்துமுன்னேறுவதைப்போல இந்த பிற்ப்போக்கு சாதி மத வெறி அரசியல் மக்கள் போராட்டங்களின் மூலம் தமிழக தகர்த்து எறிவார்கள் அதற்குபரியேறும் பெருமாள் திரைப்படம் கட்டியம் கூறுவதை நாம் காண முடியும்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் சிறந்த அரசியல்-சமூக யதார்த்த அழகியல் சினிமாவாக மிளிர்கிறது. தமிழக மக்கள் அனைவரிடம் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களை கொண்டு சேர்ப்பதுதான் நம் அனைவரின் கடமையாகும்