Friday, October 21, 2011

சிறுகதை - மாற்றப்பட்ட பயோடேட்டா


        மாற்றப்பட்ட பயோடேட்டா
                                   

எந்த மனிதனின்  வாழ்க்கையையும் இரண்டு விதமான டைரிக் குறிப்புகளாக எழுத முடியும். சுரண்டுபவன் நோக்கில் இருந்தும், சுரண்டப்படுபவன்  நோக்கில் இருந்தும் எழுதலாம். அவரவர்க்கான நியாயங்களை அதில் அவரவர்கள் கற்ப்பிக்கலாம். உண்மை என்பதோ ஒன்றுதான்.  அந்த உண்மையை புரிந்து கொள்ள எனது இந்த பயடேட்டா பயன்படலாம்.


முதல் ஆண்டு கல்லூரி சேர்ந்தது முதல் பல பயோடேட்டாகளை பல வேலைகளுகாக, படிப்புகளுக்காக நான் தயாரித்து இருக்கிறேன். இது எல்லாவற்றிலும் வேறுப்பட்டது.  இப்படிம் ஒரு பயோடேட்டாவை நானும் அவர்களும் சேர்ந்து  கூட்டாகத் தயாரிப்போம் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

காவல்காரர் அனுமதி அளித்ததும், பதற்றத்துடன் அறைக்குள் நுழைந்தேன். அடுத்து என்ன நிகழும் என்று என் மனதில் தோன்றிய அச்சம் உடல் முழுவதும் நாடி நரம்பெல்லாம் பரவி நிறைந்தது.
விசலாமான அறை….. அந்த அறையின் தோற்றம் அதன் அசாதாரண அமைதிமின்விசிறி சுழலும் சப்தம்.. மொழுக்மொழுக் என்று மூன்று அதிகாரிகள் உட்காந்து இருந்தார்கள். கோட்டும் சூட்டும் அணிந்து வாட்டம் சாட்டமாக அமர்ந்திருந்தனர். மேசையின் அருகில் போய் நின்றேன். நாற்காலி போடப்பட்டு இருந்தது. உட்காரலாமா வேண்டாமா என்று விவாதம், சிந்தனை  ஒடிக்கொண்டிருந்தது

நான் என்ன யோசிக்கிறேன்.. எப்படிப்பட்டவன்.. எனது திறமை.. தகுதிகள்.. மனதிடம் எல்லாவற்றையும் எடைப் போட அந்த ஆறு கண்களும் முயன்று கொண்டிருந்தன. கரகரப்பான தடித்த குரல்

 உட்கார்

 பெயரென்ன

  சண்முகம்”

 அப்பா பேரு

 கிருட்டிணன்

  அம்மா பேரு

  விசாலாட்சி

 வயது

முப்பது”

எந்த ஊர்

 செம்பரம்பாக்கம்

அப்பாவுக்கு என்ன தொழில்

உழவு தொழில்”

எத்தனை ஏக்கர்”

ஐந்து

கூட பொறந்தவங்க

நாலுபேர். இரண்டு பையன் இரண்டு பெண்ணு

அவங்க இன்னவேலை பண்றாங்க

ஒரு அண்ணன் விவசாயம் பார்க்கிறான்

இன்னொரு அண்ணன் டபுல் எஸ் கம்பெனியில் வேலை. இரண்டு பெண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது
இரண்டாவது அதிகாரி அதிகாரத் தொனியுடன் ஆரம்பித்தார்.

என்ன படிப்பு

பி. எஸ். சி கணிதம்

என்ன வேலை பார்க்கிற

கம்பெனியில் அக்கெளண்டண்டு”

என்ன சம்பளம்

முவாயிரம்

இந்த சம்பளம் போதுமா

ம் போதாது

வேற வேலை டிரைப்பண்ணலியா

நாலைந்து சர்வீஸ் கமிஷன் எழுதுனென். வேலை தான் கிடைக்கல

மூன்றாமவர் ஆரம்பித்தார்.

பொழுது போக்கு என்ன?”

கால்பந்து விளையாடுவது.. புத்தகம் படிப்பது

என்ன புத்தகம்  படிப்ப

சிறுகதை கவிதைகள்

யாருடையதை படிப்ப”

புதுமைபித்தன்,  சூரியதீபன், பூமணி, காசிஆனந்தன், மார்க்சிம்கார்க்கி,  இன்குலாப் ...சேரன்………….”

அவர் மற்ற அதிகாரிகளை ஏதோ புதியதாக தெரிந்து கொண்டது போல் பார்த்தார்புன்னகைத்தார். மெதுவாக எழுந்து என்னருகில் வந்தார். வன்மத்துடன் நாராசமாய் வெடித்தன சொற்கள்….

தெவுடியா பையா.. உக்......பொரம்போக்கு....பிடுங்கி.. இப்படி ஆரம்பித்து தமிழன்.பேச்சு வழக்கில் புழங்கும் ஒருவரை கோவபடுத்த, அசிங்கபடுத்த, அவமானபடுத்த உள்ள வசைவுகள் சரளமா மடைதிறந்த சாக்கடை அருவியாக கொட்டின..

அவமானத்தாலும் அசிங்கத்தாலும் எனது மனசு துடித்தது. பந்து நிமிடங்கள் மாற்றி மாற்றி போலிஸ் அதிகாரிகள் சாக்கடை சொற்களை அர்ச்சனைச் செய்து கொண்டிருந்தனர். எனது தாய், தங்கை, அக்கா, அண்ணி, ஆயா….  என்று எனது உறவுகள் யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சகட்டுமேனிக்கு சரளமாக படித்த இவர்கள் இப்படி கெட்ட கெட்ட வார்த்தைகளை திட்ட முடிகின்றது என்று நான் நொந்து நூலாகி போனேன். குழாயடி சண்டையில் ஈடுபடும் பெண்கள் கூட ஒரிரண்டு வார்த்தைகள் மேல் கோபத்தில் பேச மாட்டார்கள். படித்த கோட்டு சூட்டும் போட்ட கொழுகொழு ஆசாமிகள் இப்படி  என்று கூனி குறுகி போனேன்.

எங்கடா உங்க தோழர்கள்
உங்க தலைவன் யாருடா?”

இப்ப தான் எனக்கு ஏதோ புரிகிற மாதிரி இருந்தது.

அதற்குள் மடார் மடார் என்று கன்னத்தில் இடிபோல் அறைகள் இறங்கின.

கையை இழுத்த தொலைச்சிடுவேன் . பெரிய லட்டியை மேசைக்கு அடியிலிருந்து உருவிய இன்னொரு போலிஸ் அதிகாரி விரல் மணிகட்டுகளில் கண் இமைக்கும் நேரத்தில் மாட்டை அடிப்பது போல மடார் மடார் விலாசி தள்ளினார்..
வலியால் உயிர் போய் உயிர் வந்தது  கைவிரல்களில்  புசு புசுவென வீங்கி தொங்கின.

தனி நாடா வேணும்  இந்தாடா
ஈழமா வேணும் இந்தாடா நான் தரேன்.
மாவோஸ்டை சப்போட்டா செய்யற….”

பளிச்சென மின்னல் வெட்டியது போல் எல்லாம் புரிந்தது. ஈழததமிழர்களை கொன்று குவிந்து, விடுதலை புலிகளை ஓழித்து கட்டிய ராஜபக்சேயை பாராட்டி தாம்பரம் விமானப்படை மைதானத்தில் பெரும் பாராட்டு விழாவை மைய-மாநில அரசுகள் செவில் ஏற்பாடு செய்யப்பட்டது இருந்தது. மத்திய உள்துறை அமைச்சரும், தமிழக தலைமை அமைச்சரும், முப்படை தளபதிகளும் கலந்து கொள்ள இருந்தனர்.  வெந்த புண்ணில் வேல் பாய்வதை போன்ற இந்த செயல். தமிழகம் எங்கும் கொந்தளிப்பையே ஏற்படுத்தன.  

இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் இணைந்த ஒருங்கணைப்பு குழு  சார்பில் போராட ஏற்பாடுகள்  நடந்தன.

ஈழத்தமிழரை கொத்து கொத்தாய் கொலைகள் செய்தது எனக்குள் கோபத்தையும் நியாய உணர்வை தூண்டியது. சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாகக்கண்டு மனம் இறங்காதவன் மனிதனா என்று  நினைத்தேன்.  பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை கொடுத்தவர்களிடம் ஆதரவாக சில நாட்கள் பேசி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் முகவரி கேட்டனர். கம்பெனி முகவரியையும் எனது அலைபேசி எண்ணையும் தந்தேன்.

இந்தியா முழுக்க கலவரம் ஏற்படுத்திருங்களாடா. விடுதலை புலியாடா நீ.., மாவோஸ்டா ஆபிசை மூடிட்டு எங்கடா ஒடி ஒளிச்சிங்க..”
 காக்கிச்சட்டை ஆபிசின் பூட்டை உடைத்து தேடிய பொழுது கிடைத்த முகவரியில் எனதும் ஒன்று என்று எனது மண்டைக்குள்  பளிரென எறியது.

முகவரி கொடுத்தற்கே இவ்வளவு சிக்கலா என்று மலைத்தேன். மணிகட்டுகளில் வின் வின் என்று தெறித்தன.

எனக்கான பயோடேட்டாவை அவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர்!

கவிதை எழுதியிருக்கிறாயா....

ஆமாம்வலியில் முனகினேன்.

டேய் நாயே... கத்தி சொல்லுடா எதை பத்தி எழுதியிருக்க

காதல் ...நட்பு...வேலையின்மை......

புத்தகம் போட்டிறகியா

இல்லை

ஒரு கவிதயை சொல்லுடா”

மூளையை கசக்கினேன். பதட்டத்தில் கவிதை வர மறுத்தது

”நான் நின்ற நிலம் நழுவிப் போக வேண்டும்
நான் எரிமலை வாயினுள் தீய்ந்து கருகனும்
எனக்கு உச்சபட்ச தண்டனைக் கோருகிறேன்
என்னை நீங்கள் மன்னிக்கவே கூடாது
நான் என்றால் நான் அல்ல

ஊருக்கே சோறுபோட்ட தாயை பிச்சைக்காரியாய்
திருவோடு ஏந்த வைத்தவன் எவன் அவன்

தங்கைகளின் உடல்கள் சிதைக்கப்பட்டு
மார்பகங்கள் கூறுபோட்டு விற்ற பொழுது
தோலுக்கு மயிருக்கும் நோகாமல்  போராடியவன் எவன்

சுற்றமும் நட்பும் மரண வளையத்தில்
கூக்குரலிட்டு அலறி ஆற்றிய போதினில்
கும்மாளமிட்டு தேர்தல் திருவிழாவை நடத்தியவன் எவன்

பத்து இருபது லட்சம் எம்மக்கள் பிணங்களை
ஒன்று இரண்டு மூன்று சீட்டு பேரங்களில் மறைத்து
நாற்காலிக்கு நாயாய் அலைந்தவன் எவன் அவன்

பாரதமாதாவிற்கு பசிக்கும் பொழுதெல்லாம்
பாலும் தெளிதேனும் தின்னத் தந்ததொடு
மனித ரத்தமும்,  மக்களின் தசையையும்
மலைமலையாய் தந்து களித்தவன் எவன் அவன்

மவுனம் சம்மதமென போதித்த மடையர்களின் தேசத்தில்
எனது மவுனத்தில் தங்கைகளின் தாலியறுத்தவன் எவன்

என்னை நீங்கள் ஒருபொழுதும் மன்னிக்க கூடாது
நான் என்றால்  நான் அல்ல அல்ல.”

மன்னிக்க மாட்டேன் என்று கிண்டல் பண்ணிக் கொண்டே கைவிரல்களை பிடித்து பின்பக்கமாக ஒரு போலிஸ்காரன் மடக்கினான். விரல்கள் மளக் என்று ஒடைந்தது. வலியில் அலறி துடித்தேன்
.
”களித்தவன்  எவன்”
  
நக்கலடித்தான் அந்த  போலிஸ்காரன்.

எங்காடா உங்க தோழர்கள்.....தொப்புள் கொடி உறவுகள்..”

நான் யாரை சொல்வது என்று புரியவில்லைமௌமாய் இருந்தேன்.

உன் கம்பெனி முதலாளிக்கு சொல்லியாச்சு. இனி அடுத்த வேலைக்கு நாயாய் அலைய வேண்டியுது தான் நீ”

இந்த கம்பெனியில் கொஞ்சம் நல்ல சம்பளம். எனவே நிரந்தரமாகி விடும் என்று நினைத்தேன். அந்த நினைப்பில் மண்ணைவாரி  போலிஸ்அதிகாரி போட்டான். நட்புகள், படித்த கல்லூரி, உறவினர்கள் என்று  எனது பயோடேட்டாவை மிக மிக விரிவாக விசாரித்து  பதிவு செய்தனர். கடைசியாக என்னை வித விதமாக போஸில் போட்டோ எடுத்து தள்ளினர்.

 பயோடேட்டாவில் ஒட்ட வேண்டும். அதற்குத்தான் என்று நான் புன்னைகை பூத்ததை கண்டு நாயை அடிப்பது போல் அடித்தனர் சட்டத்தின் காவலர்கள்.

இழுத்து கொண்டு போய் இன்னொரு அறையில் தள்ளினர். அங்கே சிறு கூட்டமே  இருந்து, என்னை வரவேற்றனர்.
.
வாங்க தோழர்ர்…”

தோழமையுடன் புன் முறுவல் பூத்தனர்.   துன்பம் வரும் போது சிரிக்கனும் என்று முப்பாட்டன் சொன்னது இதற்குதான் போல.  எனக்காவது கொஞ்சமாகத்தான் அடி.ங்கு சிலபேர் இருக்கும் நிலைமையைப் பார்க்கும் போது நாம்ம நிலைமை  எவ்வளவோ தேவலாம் போல இருந்தது. நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.

அந்த தோழமை உறவுக் கூட்டத்தில் சிறிது சிறிதாக இணைய மனசு தயராகி கொண்டிருந்தது.

சில மணி நேரம் கழித்து......

ஏட்டய்யாக் கூடப்பிடராறு
என்னை இழத்து அழைத்து சென்றனர்.  நீண்ட விரிவான  பயோடேட்டாயை  அவர்கள் தயார் பண்ணிவிட்டார்கள்

தேச துரோகி…. 124 செக்சன்..”

எனது அடையாளத்தை மாற்றி எழுதினர்.
எனக்கு புதிய பெயரைச் சூட்டினர்.
எனக்கு புதிய பட்டம் கொடுத்தனர்.
தலைஎழுத்தையே புதியதாக கிறுக்கினர்.

 அதில் கையொழுத்திடப் பணித்தனர். பேனாவை தேடினேன்.

ஏட்டு எனது கையை பிடித்து இழுத்து கட்டை விரலை கறுப்பு மையில் தோய்த்து அந்த பயோடேட்டாவின் அழுத்தி பதிய வைத்தார்.

 அவர் அழுத்திய அழுத்தில் வீங்கி காயப்பட்டிருந்த விரலில் இருந்து இரத்தம்  சிவப்பாய் துளித்துளியாய் அந்த வெள்ளை தாளில் புதிய பயோடேட்டாவில் தெறித்தது.
                                            **************

4 comments:

  1. பயோடேட்டாவை படித்த பின் யாரவது பின்னூட்டம் இடுவார்களா?

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு பின் வரும் word verification ஐ நீக்குங்களேன்.

    ReplyDelete
  3. கதை நன்றாக வந்திருக்கிறது தோழர்...
    இன்னும் கொஞ்சம் நுட்பமான மனவுணர்வுகளைச் சேர்க்க முடியுமா என்று பாருங்கள்...

    ReplyDelete