Thursday, March 22, 2012


புரட்சிப்பாதையில் எரிமலைகள் மட்டுமல்ல...
அழகிய மலர்களும் பூத்துக் குலுங்கி மணம் வீசிக் கொண்டிருக்கின்றன



தோழர் ரத்னா அவர்கள் முதுபெரும் தோழர் கோவை ஈஸ்வரனின் இணையர்இ.க.க (மா.லெ) (லிபரேசன்) கட்சி. தலைமையை சேர்ந்த தோழர்  பி.வி. சீனிவாசனின் தங்கை.. இப்படி மட்டும் குறிப்பிடுவது தவறு. அவரின் ஒயாத உழைப்பை, பணியை, சமூக பிரக்ஞையை குறைத்து மதிப்பிடுவதாகும்.

நமது நாட்டின் நிலவுடைமை-சாதிய குடும்ப அமைப்பு இறுகிய சுயநலம் சார்ந்ததாக அமைக்கப்பட்டு உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அது சார்ந்துள்ள கோந்திரத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் சேவை செய்யுமாறு கட்டப்பட்டு உள்ளது. இத்தகைய கட்டமைப்பில் இருந்து கொண்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒயாது வரும் தோழர்களுக்கு அன்னையாக அன்புடன் மலர்ச்சியுடன் உபசரித்தது மகத்தானது. நோயினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் அவர் உபசரிப்பை தொடர்ந்து தவத்தை போன்று செய்தார் என்பது முக்கியமாகும்.

தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக தோழர் ரத்னா அவர்கள், தமிழக காவல்துறையின் குண்டிற்கு பலியான தியாகி தோழர் இரவீந்தின் நினைவஞ்சலி கூட்டத்தில் தான் பாடிய தியாகிகளுக்கான பாடல் நிகழ்வுதான் என்று ரத்னா ஒருமுறை நினைவு கூர்ந்ததாக சுடுகாட்டில் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் தோழர் ஒருவர் குறிப்பிட்டார். அவர்கள் அளித்த தேநீரிலும், உணவிலும் மேற்க்குறிப்பிட்ட தோழமை உணர்வும், அர்ப்பணிப்பும் கலந்து பரிமாறப்பட்டன என்று புரிந்து கொண்டால் மட்டுமே அவரின் உபசரிப்பின் உண்மையான அர்த்தத்தை நாம் விளங்கி கொள்ள முடியும். நெருக்கடி நிலை 1975யில் அறிவிக்கப்பட்ட நாளில்  மனித உரிமை போராளி மேயர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவை ஈஸ்வரன்-ரத்னா அவர்களின் திருமணம் நடைபெற்றது..  இந்த தினத்திலிருந்து இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க போலிஸ் குவிக்கப்பட்ட நாள் வரை தோழர் ரத்னாவின் இந்த பணி நடைபெற்றது.



வசந்தத்தின் இடிமுழக்கமாய் உதித்தெழுந்த  நக்சல்பாரி இயக்கம் தமிழகத்தின் கிராமங்களில் கால் ஊன்றி வேர் விட்டு பரப்ப முயன்ற பொழுதெல்லாம் அதை முளையிலேயே ஒடுக்க அரசு இயந்திரம் முயன்றது. பாதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்த தோழர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட பாலமாக இருந்த, நம்பிக்கையைத் தந்த  தோழர் குடும்பங்களில் கோவை ஈஸ்வரன்-ரத்னா தம்பதியர் வீடு முக்கியமானதாகும்.

பல்வேறு நக்சல்பாரி இயக்கங்களில் அறிவிக்கப்படாத தலைமை அலுவலமாக, தமிழ்தேச இயக்கங்கள், தலித் இயக்கங்கள், ஈழவிடுதலை இயக்கங்களின் வேடந்தாங்கலாக கோவை ஈஸ்வரன் வீடு திகழ்ந்தது. இப்படி பல தோழர்கள் தினமும் அங்கு வந்து சென்றனர். மாறுபட்ட கருத்தடையவர்கள் மட்டுமல்ல….. எதிர்தரப்பு கருத்துடையவர்களும் விவாதிக்கும் சனநாயக களமாக அவர் வீடு இருந்தது. தோழர் ரத்னாவை பொறுத்தவரையில் இப்படி வருகின்ற அனைவரும் தோழர்கள் என்ற ஒற்றை பரிமாணமப் புரிதலுடன் ஒரு தவத்தைப் போன்று அவர்களுக்கு உபசரிக்கும் பணியை ஒயாமல் செய்தவர். இந்த வேடந்தாங்கலின் செயல் அலுவலர் ரத்னா தனது பணியை, மூச்சை 19/3/2012 யுடன் நிறுத்திக் கொண்டார்.

மானுடத்தை, மனித உறவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்து கொண்டிருக்கும் சென்னை மாநகரில் மழையில் நனைந்து குளிருடனும், வெயிலில் அலைந்து களைப்பு மேலோங்க  வருகின்ற மக்கள் விடுதலையை நேசிக்கும் ஒருவனுக்கு அவர் கேட்காமலேயே தோழர் ரத்னா முகமலர்ச்சியுடன் சுட சுட அளிக்கும் தேநீரின் சுவையின் அருமை அதை ஆத்மார்ந்தமாக அனுபவத்தவர்களுக்கு மட்டுமே புரியும்! இத்தகைய தோழர் ரத்னாவின் இறுதி உர்வலம் தமிழக பண்பாட்டு  வரலாற்றில் குறிப்பிட தக்கதாகும்.

சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்கள் சமூகத்தின் எந்த விழாக்களிலும் இரண்டாந்தர குடிமக்களாகவே தள்ளி வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கு சவ ஊர்வலமும், இறுதி சடங்குகளும் விதி விலக்கல்ல! தோழர் ரத்னாவின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக பல்வேறு இயக்கக் தோழர்கள்-குறிப்பாக பெண் தோழர்கள் செய்த நிகழ்வு பாராட்டத்தக்கது!!  தோழர்கள் தனம், செல்வி, தமயந்தி,ரமணி, அகராதி, கீதா என்று பத்துக்கு மேலாக பெண்கள் தோழர் ரத்னாவை இறுதி பாடையில் வைத்து தி. நகர் வீதிகளில் செங்கொடி போர்த்தி ஊர்வலமாய் முழக்கங்கள் அதிர கண்ணம்மா சுடுகாட்டை நோக்கி பீடு நடை போட்டதை கண்ட கண்களின் விழிகள் இமைக்க வில்லை. புருவங்கள் வியப்பில் வளைந்தன. பெண் தோழர்கள் ஊர்வலமாய் சுமந்து சென்று இறுதி அஞ்சலியை அவர்களே தலைமைத் தாங்கி நடத்தியது இறுக்கமான சாதீய பண்பாட்டுக்கு எதிரான கலகமாக, மீறலாக வரலாற்றில் நிச்சயமாக இந்த பண்பாட்டு நிகழ்வு பதியப்படும்
.
இடுகாட்டில் நடந்த இறுதி அஞ்சலி கூட்டத்தில்:

*கோவை ஈஸ்வரன் என்ற பொதுவுடைமையாளரின் இயக்கம், ஆளுமை வளர்ச்சியில் தோழர் ரத்னாவின் பங்களிப்பு முக்கியமானது.

*உடல், மனரீதியா நோய்களுக்கும் இடையில் அவரது அயராத கடின உழைப்பு  போற்றத்தக்கது.

*ஆண் ஆதிக்க சமூகத்தில் வரலாற்றில், சமூக வளர்ச்சியில், இயக்கங்களில் போராடிய பெண்களின் பங்கு வெளிச்சத்திற்கு வரவில்லை.

*வறுமையிலும், குடும்ப சிக்கல்களுக்கு இடையில் மனந்தளராமல் தோழர்களை வரவேற்று, அன்னையாக, சகோதரியாக, தாய்மை உணர்வுடன் தோழர்களுக்கு தேநீரும், உணவும் அளித்த அர்ப்பணிப்பும்தோழமையும்

*அடக்கு முறை காலங்களில் சிறைத்தோழர்களுக்கு உதவி செய்த ரத்னாவின் உறுதி.

*உபரியற்ற குடும்ப உழைப்பில் இருந்து பெண்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். பொது சமையல் கூடமும், பொது சலைவைக் கூடமும் இதற்காக அமைக்கப்பட வேண்டும்.

*சாதி ஒழிந்த சனநாயக குடும்பமாக தனது குடும்பத்தை மாற்றியத்தில் அவரின் பங்களிப்பு.

*மாறுபட்ட கருத்துடையவர்களையும் உபசரிக்கும் சனநாயக பண்பு.

 என்று பல கருத்துக்களை தோழர்கள் எடுத்துக்கூறி உரையாற்றினர்.

வீசும் சூறாவளி
கொந்தளிக்கும் கடல்
சீறும் எரிமலை
புரட்சி பாதையின்
யதார்த்தமாக இருக்கலாம்
இதனமான தென்றல்
தெளிந்த நீரோடை
வாசம் கமிழும் மலர்
இனிய சுனைகள்
அங்காங்கே அதில்
இருக்கத்தான் செய்கின்றன.

தோழர் ரத்னாவின் நினைவை இப்படிதான் போற்றத் தோன்றுகிறது!

1 comment: