இன்று முதல் பிரிவு வகுப்பு கல்லூரி முதல்வருடையது. அவர் நன்றாக.
பாடம் நடத்துவார் என்பதையும் தாட்டி கட்டணச் சலுகை, நடத்தை. சான்றிதழ்… இன்ன பல விசயங்களுக்கு
அவரிடம்தான் போக வேண்டும் என்ற பயம் அதனினும்
முக்கியமானது. ஒரு சில மாணவர்கள் தவிர, இறுதி ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்
கல்லூரியின் குற்றவியல் பிரிவு வகுப்பின் மாணவர்கள்
அனைவரும் வகுப்பில் இருந்தனர்.
காலை வகுப்புகள் அமைதியாகத்தான் நடக்கும். சுற்றுலும் உள்ள படர்ந்து விரிந்த. மஞ்சள் கொன்றை மரங்கள், தூங்குமூஞ்சி
மரங்களின் பசுமை போர்த்திய இலைகள் குளுமையான நிழலில் பறவைகள் தங்கள் இன்னிசை கச்சேரியை நடத்திக் கொண்டு இருந்தன. ஆங்கிலேயர்
பாணியில் கட்டப்பட்ட கல்லூரியின் இந்த வகுப்பறையில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும்
அமைதி அங்கு நிலவியது. நீரோடை போன்ற சலசலக்கும்
ஒலிகள் அந்த அமைதியை கலைத்தன. அவை மாணவர் முழக்கங்களாய் மாறி மெல்ல மெல்ல நெருங்கியது..உயர்ந்த
கட்டடிங்களின் முகடுகளை தொட்டு எதிரொலித்த அந்த முழக்கங்கள் சீறின.
“அமைதி படையா…… அரக்கர் படையா…?”
“கொலைகார இந்திய படையே.. ஈழமக்களை கொல்லாதே… கொல்லாதே”
“ஈழத்தமிழர் சிந்திய இரத்தம் எங்கள் இரத்தம்.. எங்கள் இரத்தம்.”
வகுப்பில் கல்லூரி முதல்வரை
பார்த்ததும் அந்த மாணவர் கூட்டம் ஒரடி பின் வாங்கி சிறிது அமைதியானது. நாங்கள் அனைவரும்
வகுப்பு புறக்கணிப்பில் கலந்து கொள்ள தயாராக இருந்தோம். சிவபெருமான் நெற்றி கண்ணைத்
திறந்து சுட்டெரிப்பது போல எங்களை முதல்வர் பார்த்தார். வெளியே போகத் தயாராக புத்தங்களை
கையில் எடுத்த நாங்கள் அதை மேசை மேல் வைத்துவிட்டோம் முதல்வரின் சந்தனப் கீற்றிற்கு
இடையில் உள்ள சிவந்த குங்குமப் பொட்டு அடுத்ததாக போராடும் மாணவர்களைச் சுட்டெரிக்க
தயாரானது.
அந்த சில வினாடிகள் மிக முக்கியமானதாகும். எங்கள் நெஞ்சு கூடுகளின்
படபடப்பு ஒலிகள் எங்களுக்கு தெளிவாக கேட்டது!
தலையில் அடிப்பட்ட பெரிய காயத்திற்கு கட்டு போட்டிருந்த மாணவன்
அந்த போராடும் மாணவர்களிடம் இருந்து வந்தான். சராசரிக்கும் குறைவான உருவமைப்புக் கொண்டதாக
தோன்றும் அந்த மாணவன் என்னுடைய வகுப்புத் தோழன்தான். எங்கள் வகுப்பு மாணவர்கள் நான்கு
நட்பு வட்டங்களும், சில உதிரிகளும் சேர்ந்தக் கலவையாகும்.. முதல் பெஞ்சு. நடு பெஞ்சு., கடைசி பெஞ்சு. மற்றும் மரத்தடி பெஞ்சு. என்றும் இதை பிரிக்க்கலாம்.
அந்த மாணவன் நடு பெஞ்சுக்காரன். அது அரட்டை அடிக்கும் பொழுது வகுப்பை கலகலப்பாகும்.
படிப்பு என்று வந்தால் அதிலும் சில நேரங்களில் அந்த பெஞ்சு. முன்னணியில் இருக்க்கும்.. இந்த மாணவன் நடு
பெஞ்சுக்காரன்.. இவன் எப்படி, எப்பொழுது மாணவர்
தலைவனான் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.
தீர்க்கமான நான்கு அடிகளை உறுதியாக முன்கால் எடுத்து வைத்த அவன்
நெஞ்சுப் படபடப்பை இன்னும் அதிகமாக்கினான். சிறிது உயரமான இடத்தில் நின்றிருந்த முதல்வரை
கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அப்பொழுது தான் அந்த கண்களை நான் கவனித்தேன்..
“சார்… இந்திய அமைதி படை தமிழர்களை கொல்வதை எதிர்த்து ஊர்வலம் போன அனைத்துக் கல்லூரி மாணவர்களை போலிஸ்க்காரர்கள்
கடுமையாக தாக்கி மண்டைகளை பிளந்து விட்டனர். அதை கண்டித்து நம்ம கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்ககணிக்க
போகிறோம்..” என்ற தீர்க்கமான வரிகள் தெளிவான என் காதில் விழுந்தன. நேற்று நடந்த ஊர்வலத்தில்
சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
“மாணவர்களுக்கு புறக்கணிக்க விருப்பம் இல்ல… நீங்க அராஜகம் செய்து
பயமுறுத்துரீங்க..” என்று கோபப்பட்டார் முதல்வர்
“இல்ல …. நாங்கள் எங்க கோரிக்கைகளை சொல்றோம்.. மாணவர்கள் மீதான
அடக்குமுறைக்கு சக மாணவர்கள் குரல் கொடுப்பது
தார்மீக கடமை.. எல்லாரும் விரும்பிதான் போராடுகிறார்கள்..”
என்றான் அந்த மாணவன்.
“நீங்க பேசுங்க… அவங்களுக்கு விரும்ப இருந்தால் வெளியே போகட்டும்… ஆனா..அவங்களை பயமுறுத்தி கலைக்க கூடாது
…” என்று முதல்வர் செக் பாயிண்ட் வைத்து விட்டு, வகுப்பில் மாணவர்களை சுட்டு விடுகின்ற
மாதிரி நெற்றி கண்ணால் பார்த்தார். அவர் கண்பார்வை
மிரட்டலுக்கு மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது அவர் நம்பிக்கை. அது அடுத்த விநாடியே
தகர்ந்து போனது. அவர் திரும்பி பார்கையில் அந்த மாணவன் அங்கு இல்லை. மாறாக முதல்வரின்
விரிவுரை மேசைக்கு அருகில் வந்து நின்றான்! முதல்வர் ஆச்சிரியத்துடன் பார்த்து கொண்டிருந்தர்!
எல்லாம் அவர் கைமீறிப் போய்கொண்டிருந்தது.
மேடையிலிருந்து கையை ஆட்டி ஆவேசமாய், அழுத்தமாய், மழையாய் அவன்
பொழிந்தான். ஒரே சமயத்தில் அவன் கண்கள் அங்கிருத்தவர்கள் அனைவரையும் ஊடுருவி சென்றது..
சத்தியத்தின் ஆவேசம் அந்த கண்களில் சுடர் விட்டு பிரகாசித்தன. அவர்களைத் தன் வயப்படுத்தியது.
“நண்பர்களே…சொந்த சகோதரர்கள்… துன்பத்தில் வாடக் கண்டு சிந்தனை
இறங்காத சடங்களா நாம்…
ஈழத்தில் நமது சகோதரிகளும், தாய்மார்களும் கற்பழிக்கப் படுகிறார்கள்..தமிழர்கள்
காக்காய் குருவி போல சுட்டு கொல்லபடுகிறாங்க.. அமைதி படைக்கு எதிராகவும், மாணவர்களுக்கு
மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவோம்…. “ என்று சீற்றமிகுச் சொற்களின்
உண்மை அனைவரையும் சுட்டது. அவன் அவேசம் அவன் போட்டிருந்த
“கொலைவாளினை எடடா….. மிகு கொடியோர் செயல் அறவே..” என்று முழங்கி
கொண்டே அவன் இறங்கி நடந்தான். ஒருத்தர்..இருவர்..நான்கு..ஒட்டுமொத்தமாய் அனைத்து மாணவர்களும்
எழுந்து அவன் பின் சென்றனர்…வகுப்புகளை புறக்கணித்தனர்.
“மாணவர் போராட்டம் வெல்க…. மாணவர் ஒற்றுமை ஒங்குக..”
என்று மாணவர்கள் முழக்கமிட்டபடியே ஒவ்வொரு வகுப்பறையாய் ஊர்வலமாகச்
சென்றனர். ஒரு வகுப்பு.. இரண்டு வகுப்புகள்…..
… எல்லா வகுப்பு மாணவர்களும் திரள் திரளாக முழக்கமிட்டவாறு வெளியேறினர். அந்த மாணவன்
பின்னர் சென்ற முதல்வர் செய்வதறியாது தனது நம்பிக்கை பொய்யானது ஏன் பொய்யானது என்று
புரியாமல் அந்த மாணவர் திரளுடன் சிறிது தூரம்
சென்றப் பின் திகைப்புடன் சிலையாய் சமைந்தார்.
அதன் பிறகு அவன்..அவர்களானார்கள்.. அவர்கள் மாணவர்
திரள்களானார்கள். அந்த மாணவர் குழாமின் (Student Struggle Committee For Tamil
Eelam) தலைமையில் பாரிமுனையை மாணவர்கள் அடுத்த சில மணி நேரங்கள் ஸ்தம்பிக்க வைத்தனர்.
வட்டம்.. வட்டங்களாய் கைகோர்த்து குறளகம்-உயர்நீதிமன்றம்-பிராட்வே
சாலைகள் கூடும் முச்சந்தில் அமர்ந்தனர். காட்டாற்று
வெள்ளமென போராட்டத்திற்க்காக திரண்ட . மாணவர்களை சுழலும் கண்பார்வைகளிலும், அதிரவைக்கும்
முழக்கங்களாலும் தலைமையேற்ற மாணவர்கள் திறம்பட நெறிப்படுத்தினர்.
அந்த நேரங்களில் நான் அவர்கள் கண்களை மட்டுமே பார்த்தகொண்டிருந்தேன்.
ஏன் நான் அவர்கள்…அவன்
கண்களை கவனித்து கொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை என் வகுப்பு தோழன் என்பதால் இரண்டு
மூண்றாண்டுகளாய் அவனை நன்றாகத் தெரியும். வகுப்பில் இயல்பான சராசரியான மாணவன்தான் அவன்.
அப்படித்தான் மாணவர்களுக்கிடையில் அவன் வலம் வந்தான். இன்று அவனை எது இப்படி மாற்றியது.
அதன் பின்னனி இரகசியம் என்ன என்ற சிந்தனை என்னை முழுமையாக ஆரம்பித்துகொண்டது.
அன்று மாலை நீண்ட நேரமானப் பிறகு தான் வீடு போய் சேர முடிந்தது.
அங்கு எனக்கு ஒர் ஆச்சிரியம் காத்திருந்தது. திருப்பத்தூர் சரக சப்-இன்ஸ்பெக்டர் மாமாவின்
மனைவி தனது குட்டிப் பையனுடள் வீட்டில் இருந்தார்.
“என்ன தீடீர் விஜயம்……”
“உங்க மாமாவிற்கு… மாணவர் போராட்டத்திற்காக சென்னையில் ஸ்பெஷல்
டூட்டி போட்டு விட்டாங்க…அவர் கிளம்பினார்..
நானும் அவர் கூடவே தொத்திக் கொண்டு வந்து விட்டேன்
“மாமா எங்கே-?”
“டூட்டிக்கு போயிட்டார்…..”
மாமாவின் குட்டி பையனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த மாணவன்
கண்களின் இரகசியம் இப்பொழுது நினைவில் வந்து
எனக்கு உரைத்தது
அது போலிஸ் மாமா சொன்ன கதை… ஆனால் கதையல்ல… போலிஸ் மாமா பெருமாள் ஏ.ஐ.ஆர் டியூட்டியில்
இருந்து விடுவிக்கப்பட்டு கான்ஸ்டேபிளாக டி எஸ் பி அலுவலகத்தில் பணி அமர்ந்தப்பட்டார்.
கொள்ளைக்காரர்களை, திருடர்களை விரட்டி பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் பெருமாள் உடம்பினை
பயிற்சிகள் மூலம் முறுக்கேற்றி வைத்திருந்தார். அந்த உடம்பை பார்த்து அவரை டி எஸ் பி
“ஸ்பெஷல் டீம்” மில் இணைத்து கொள்ளப்பட்டார்.
இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்ளிட்ட ஏழுபேர் கொண்ட அந்த டீம் காலையில்
டி ஸ் பி அலுவலகத்தில் கூடியது. எல்லாரும் துப்பாக்கிகளுடன் அணி வகுத்து நின்றனர்
“ரெடி…. …..” என்று
பட்ட். …. டப்..பட்…டென தனது துப்பாக்கியை
நீட்டி மடித்து தட்டி சத்தங்களை எழுப்பினார் காவலாளி.
டி எஸ் பி வந்து நின்றார். எல்லாரும் விறைப்பாக சல்யூட் அடித்தனர்.
“பாய்ஸ்… முக்கியமான சீக்ரெட் டியூட்டி…. ..இன்ஸ்பெக்டர் லீட்
பண்ணுவார்… ஸ்டிரிலி பாலோ இம்…” என்று ஆணை இட்டு, ..இன்ஸ்பெக்டரிடம் சில நிமிடங்கள்
பேசி விட்டு ஜீப்பில் ஏறி பறந்தார்.
ஸ்பெஷல் டீம் போலிசாரிடம் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
“பெருமாள்… நீ போய்
ரூமில் இருக்கிற கடப்பாரை, மம்முட்டி, பாண்டு… எது நன்றாக உள்ளதோ அதெல்லத்தையும் எடுத்து
வேனில் வை…” என்றார் இன்ஸ்பெக்டர்.
பெருமாளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. போலிஸ் வேலை செய்ய போகின்றோமா
கொத்தானார் வேலைக்கு போகப்போகின்றோமா என்று புரியாமல் விழித்தான். அந்த ஸ்டோர் ரூமில்
இருந்து தேறியது ஒரு கடப்பாரையும், ஒரு மண்வெட்டியும்
தான்.
சிறிய வெள்ளை வேன் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இன்ஸ்பெக்டர் வேனை ஹார்டுவேர் கடையில் நிறுத்த சொன்னார். அங்கு மேலும்
இரண்டு மண்வெட்டிகளும், ஒரு கடப்பாரையும் , மூன்று பாண்டுகளையும் வாங்கினர்.
“என்ன…. போலிஸ்காரங்கெல்லாம் கிணத்து வேலைக்கு… இல்ல கொளுத்து
வேலைக்கு டிரான்ஸ்பர் பண்ணச் சொல்லிட்டாங்களா..?” என்று பெருமாள் பக்கத்தில் அமர்ந்திருந்த
ஏட்டுவிடம் கிசுகிசுத்தார். அவரோ ஆ.. ஆஹா என்று
பலமாக சிரித்து விட்டார். எல்லாரும் என்னவென்று தெரியாமல் முழித்தனர். இன்ஸ்பெக்டர்
முறைத்தார்.
சந்தை கேட் வழியாக வண்டி சென்று வானாந்தரமாய்ய் விரிந்த காட்டு
பகுதியை நோக்கி பறந்தது. பெருமாள் வேலைக்கு சேர்ந்த புதியதில் ரவுடிகளிடம், கந்துவட்டிகாரர்களிடம்
மாமூல் வாங்க அந்தச் சந்தை கேட்டிற்கு அனுப்புவார்கள். யாரை கைது செய்து கேஸ் போட்டு
சிறைக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களிடம் கையேந்துவது ஆரம்பத்தில் கூச்சமாக இருந்தது… அதுவே
பின்பு பழக்கிமாகி விட்டது. கந்துவட்டிக்காரர்கள் அட்டூழியம் நாளும் பெருகி வந்தது.
மாடாய் உழைத்தாலும் கால்வயிற்றுக்குதான் கஞ்சி கிடைத்தன மக்களுக்கு, கந்துவட்டிகாரர்களுக்கோ தட்டின இடமெல்லாம்
தங்கமாய் கொட்டியது.
திடீரென ஒரு நாள் சந்தை கேட்டில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்
செய்தனர். அதற்கு மறுநாள் சந்தை கேட் ரவுடிக்கு மருத்துவ மனையில் சேரும் அளவிற்கு அடி
உதைகள் விழுந்தது. நக்சர்பாரிகள் தான் அடித்தாக
மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனாலும் அடிவாங்கிய ரவுடி அதைப் பற்றி வாயை திற்ந்து புகார் ஏதும் சொல்லவில்லை.
இப்படி அங்காங்கே நடந்தன. கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் காணமால் போயின. கந்துவட்டிகாரர்களை
எங்கு ஒளிந்தார்கள் என்று தெரியவில்லை. சாதி மறுப்பு காதல் திருமணங்களை முன்னிறுத்தி
சாதி சண்டைகள் மூளாமல் அவை இயல்பாக மாறின. காவல்துறைக்கு வேலை குறைந்து போயின! ஓட்டு
கட்சி கரைவேஷ்டிகள் சலசலப்புகள் குறைந்தன. சில ஆண்டுகள்தான் இந்த நிலைமை நீடித்தன.
இப்பொழுது ஆறுமாதங்களில் எல்லாம் தலைகீழாகி விட்டது. நாளோடுகளில்
“நக்சலைட்டுகளுடன் போலிஸ் மோதல்….”, “இரண்டு
நக்சல்லைட்டுகள் சுட்டு கொலை…” என்ற செய்திகள்
வந்த வண்ணம் இருந்தன.
இன்ஸ்பெக்டர் ஜீப் முட்புதர் காடுகளை நோக்கி பயணித்தது. வெள்ளைவேன்
அத்துடன் ஒட்டிகொண்டு விரைந்தது.
தார்ச்சாலை மண் சாலையாய் மாறி மாட்டு வண்டி தடமாய் சுருங்கியது.
அந்த தடத்தில் இறுதியில் வேன் நின்றது
காட்டிற்குள் போலிஸ் குழு சூடேறி பறந்த மண்ணில் காலடி வைத்தது.
கல்குருவி சோடி தரையிலிருந்து பறந்து சென்றது.
கானங்கோழி ஒன்று இவர்களை கண்டு புதருக்குள் மறைந்தது. காட்டிற்குள் இரண்டு பார்லாங்குகள்
உள்ளே சென்றனர்.
பெருமாள் ஜீப்பில் அருகில் இருந்து அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.
இதற்குள் அவனுக்கு எந்த காரியத்திற்க்காக இந்த டீம் வந்திருக்கிறது என்று தெரிந்திருந்தது.
அவன் எண்ணங்கள் போலிஸ்காரர்கள் செய்யப் போகும் கொலையைப் பற்றிய வட்டமிட்டு கொண்டிருக்கிறது.
ஒயர்லெஸ் கருவியிலிருந்து….. ஒவர்….ஒவர்… , கொர்…கொர்ரரவ்….கொர்… என்ற கரகரப்பான சத்தம் கேட்டது.
“ஆப்ரேசன் ரெட் ரோசஸ் ரெட் ரோசஸ் வேலை முடிந்ததா …ஒவர்..” என்று
ஒரு குரல் கேட்டது. அவன் அந்த அலைவரிசைக்கு குமிழை திருகினான்.
“ஆப்ரேசன் ரெட்ரோஸ்
ஒர்க் கோயிங் ஆன்ன் ….சார் ஒவர் ..”என்றான் பெருமாள். அவருக்க அளிக்கப்பட்ட கட்டளையை
நிறைவேற்றினான். அதில் அவன் கருத்திற்கு இடமில்லை.
கொடுக்கும் சம்பளத்திற்கு அதிகாரத்திற்கு கீழ் பணிய வேண்டியது அவன் கடமை என்று பழக்கப்பட்டிருந்தான்.
ஒவ்வொரு அரை நேரத்திற்கு இவ்வாறு பதிலளித்தான்.
மதியம் இன்ஸ்பெக்டரும் இரண்டு காவலர்களுடன் வந்தார். மற்றவர்கள்
வர வில்லை. அவர்கள் சட்டைகள் மீது மண் புழுதிகள் ஒட்டி கிடந்தன.
“பெருமாள்….ரெட்ரோஸ் ஒர்க் எப்டி இருக்கிறது கெட்டால் ரெடியாச்சுன்னு
சொல்லு…” என்று இன்ஸ்பெக்டர் கூறி விட்டு ஒரு காவலருடன் மதிய சாப்பாடு வாங்கி வர சென்றார்.
இன்னொரு காவலர் பெருமாளுடன் இருந்தார். அவன்
பேச்சு துணை ஆள் கிடைத்தது என்று ஆசுவாசப்பட்டான்.
மாலை ஐந்து மணி நெருங்கி கொண்டிருந்தது. பறவைகளின் இன்னிசை குறிப்புகள்
உரையாடல் தொகுப்புகள் எங்கும் காட்டில் பரவ தொடங்கின. இன்ஸ்பெக்டர் வேனுக்குள் லேசாக கண்ணயர்ந்து கிடந்தார்.
ஒயர்லெஸ் கருவியிலிருந்து அவ்வவ்பொழுது கர்ர்..கர்..சத்தங்கள் எழுந்து நின்றன.
திடுமென வயர்வெஸ் அதிகமாகக் கத்த ஆரம்பித்தது.
“பி அல்ர்ட்…… ரெட்ரோஸ் ஆப்ரேசன்… ஸ் டு ஸ்டார்ட்…” என்று கரகரப்பான குரலில் ஒயர்லெஸ்
கருவி கத்தியது.
காவலர்கள் நெஞ்சை நிமிர்த்தி
ஆங்காங்கே நின்றனர். இன்ஸ்பெக்டர் விழித்து கொண்டுத் தயாரானார்.
“எவனை கொண்டு வரப்போகிறார்கள்…?” என்று பெருமாள் முணுமுணுத்தார்
“யாருக்கு தெரியும்… ஆனா வரவன் முக்கியப்புள்ளி… இவனை போட்டா நக்சலைட் கதை ஒவர்.. எல்லாம்
இங்கு முடிந்தா போலதான்…..” என்றார் அந்த காவலர்.
அதற்குள் ஒரு பெரிய வெள்ளை வேன் அங்கு வந்தது நின்றது.
டி எஸ் பி வேனின் முன்பகுதியில் இருந்து இறங்கி வந்தார். அனைவரும்
அவருக்கு சல்யூட் வைத்தினர்.
“எல்லாம்… ரெடியா….”
“எஸ் சார்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
“டோரை ஒபன் பண்ணுங்க…”
வேனின் பின் பக்கம் திறக்கப் பட்டது. நவீன ஆயுதங்களுடன் நக்சலைட்
ஒழிப்பு படை பிரிவினர் அதில் இருந்தனர். அவர்கள் காலடியில் நசுக்கப்பட்டு குண்டு கட்டாக ஒருவர் படுத்திருப்பது
தெரிந்தது. பன்றியை சாகடிப்பதற்க்காக அதன் கால்களைக் கட்டி துடிக்காமல்
இருப்பதற்க்காக மீன்பாடி வண்டியில் போட்டு
அதன் மீது நான்கைந்து நபர்கள் கால்களால் அழுத்திப் பிடித்து கொண்டிருப்பதை அந்த காட்சி
நினைவூட்டின.
நாலைந்து போலிசார்கள் கீழே தொப் ..தொப்.. என்று குதித்தனர்.
அங்காங்கே நடந்து சென்று வட்டமாய் அந்த காவலர்கள் நின்றனர்.. அவரை கதவருகில் பன்றியை போல இழுந்து வந்தனர்.
“பொணமா போகிறவன்.. பொணம்
கனம் கனக்கிறான்டா” என்றவாறு நக்சல் ஒழிப்பு காவலர் ஒருவர் தோழரை பூட்ஸ் காலால் எட்டி
உதைந்து தள்ளினர்.
சித்திரவதை செய்யப்பட்டு மோசமான நிலையில் தளர்வாய் ஒரு மூட்டையைப்
அந்த உடல் கீழே சரிந்து விழுந்தது. தரையில்
உடல் மோதியதும் அடிப்பட்டு இரணமான உடல்
பகுதியின் வலி வேதனை தாங்காமல் துடித்தார். அப்படி துடிக்கும்பொழுது எதேச்சையாக அவரின்
கால்கள் தொட்டதும் டி.எஸ்.பியை மோதியது. டி.எஸ்.பி
தடுமாறி விழ பார்த்தார். சமாளித்து நின்ற அவர்
முகம் அஷ்ட கோணலாகியது..
அடுத்த விநாடி காவலர்களின் பூட்ஸ்கால்கள் அந்த தோழரை மிதிமிதியென்று
மிதித்து துவைத்தன. தோழர் பலமாக அலறி கத்தினார். இயல்பாக இருந்த அனைவரின் முகத்திலும்
பரபரப்பும் சிறிது அச்சமும் பரவிக் கிடந்தன..
“இவ்வளவு பண்ணியும் இவன் திமிரு அடங்கிலேயே…” என்று டி எஸ் பி
பக்கத்தில் இருந்த காவலர் கையிலிருந்து துப்பாக்கியை
வாங்கி பின்புறக்கட்டையால் பலமாய் தோழரின்
முகத்தில் குத்தினர்.
ஏற்கனவே வீங்கி கிடந்த முகத்தில் இரத்தம் பீறிட்டு மண்ணில் சிதறியது.
இப்பொழுதும் தோழர் அலற வில்லை. மண்ணின் கருவறையில் கைகால்களை குறுக்கி படுத்து கொண்டார். போலிஸ் லாக்கப் அறையின் கும்மட்டல்
எடுக்கும் நாற்றத்தை விட இந்த மண்ணின் கதகதப்பு அவரின் வீங்கங்களுக்கு ஒத்தடம் கொடுப்பது
போல் இருந்தது
“இன்னும் எவ்வள தூரம் போகணும்… நடக்க மட்டான் போல ….பன்னிய தூக்கிர
மாதிரி கம்பு கட்டி தூக்கிகொண்டு போகலாமா… …”
தோழர் அசைந்து மெல்ல எழுந்தார்.
“இல்ல.. நா…நடந்து வரேன்..”என்று வலியில் பல்லைக் கடித்து கொண்டு
எழுந்தார்.ஆனால் தடுமாறி கீழே விழுந்தார். மீண்டும் எழ முயற்சித்து விழுந்தார்.. சிறுகுழந்தையைப்
போல மீண்டும் மீண்டும் முயற்சித்தார். தனது மரணம் இழிவாக்கப்படக் கூடாது என்பதில் அவர்
உறுதியாக இருப்பதாக தெரிந்தது.
பெருமாள் உள்ளிட்ட நாலு காவலர்கள் அவரை சூழ்ந்து நின்றனர். தோழர்
ஒரே ஒரு அடி கூட எடுத்து வைக்கவே சிரமப்பட்டார். “லாடம் கட்டி” அடித்து இருப்பததால்
அவர் பாதங்கள் சிதைக்கப்பட்டு இரத்தம் கசிந்து வீங்கி கிடந்தன.
“தோளை பிடிச்சிங்கோ…” என்று பெருமாளும் இன்னொருவரும் சொன்னார்கள்
அவரால் தோளை வலுவாக பிடிக்க முடியவில்லை..அவைகளும் வீங்கி கிடந்தன..ஆளுகொரு பக்கம்
பிடித்து கொண்டு தோழரை நடத்திச் சென்றனர் இல்லை… இழுத்து சென்றனர்.
தோழரின் உடலில் வீசிய இரத்த கவுச்சி வடை பெருமாளை என்னமோ செய்தது.
“எதற்காக இவனுங்க… இப்படி சித்ரவதையை தாங்கிறான்கள்..” என்பதாக
பெருமாள் சிந்தனை ஒடியது
சிறு விவசாயியாக உள்ள பெருமாளின் தூரத்து உறவினர்கள் சிலர் இந்த
நக்சல்பரி இயக்கத்தில் இருப்பது பெருமாளுக்கு தெரியும்.
அவர்களின் பேச்சுகளின் நியாயம் தர்மம் இருந்தன..
இருந்தாலும் தோழர்களால் பிரமாண்டமான் போலிஸ்…. இராணுவம், நீதிமன்றம்…அதிகாரிகள்… அரசாங்கத்தை
என்ன செய்ய முடியும்? தலையை மலையால் மோதி உடைப்பது போல இருந்தது.
அதற்குள் அந்த விசாலமாய் பரந்த முள் உடைமரம் வந்து விட்டது.
அந்த பெரிய மரத்தில் நிழலில்தான் அந்த பத்துக்கு பத்து குழி வாயை விழுங்க காத்து கிடந்தது.
அதன் அருகே கிடத்தப்பட்டார் தோழர்.
“என்னடா. .உங் கத முடிய
போது.. உன் கடைசி ஆசை இன்னா… உங்கலால் எங்கல அரசாங்கத்தை ஒரு மயிரும் புடுங்க முடியாது..” என்று
எகத்தாலமாய் டி எஸ் பி கேட்டார்.
“தண்ணி…
தண்ணீர் வேணும்..” என்று தோழர் கேட்டார்.
அங்கு இருந்த முதுகில் பையுடன் இருந்த நக்சல்
ஒழிப்பு படை காவலர் ஒருவரை டி.எஸ்.பி பார்த்தார்.
அவர் தண்ணிர் பாட்டிலை எடுத்துப் பெருமாளிடம் தந்தார். அதை வாங்கி மூடியை கழட்டி தோழரிடம் கொடுத்தார். வீங்கிய
கைகளால் அதை அழுத்திப் பிடிக்க முடியாமல் முகத்தை வலியில் சுருக்கினார். பின் ஒருவழியாக
பிடித்து நீரை பருகினார்.
“தேங்ஸ் ..” என்று அந்த தோழரின் முகத்தில் சிறிது தெம்பு வந்தததை
பெருமாள் கவனித்தார்.
எல்லாரும் கவனிக்கும் பொழுதே தோழர் புதிய தெம்புடன் எழுந்து
நின்றார் அத்தனை வலிகள் அத்துணை இரணங்களையும் மீறி கம்பீரமாய் நிமிர்ந்து நின்றார்.
அவருக்க நாற்பது வயது இருக்கலாம் வீங்கி கிடந்தஅவரின் வீங்கிய முகத்தில் ஒரு அலட்சிமான
புன்னகை பரவியது. அந்த தோழரின் கண்கள் கோபத்தையும் கக்கின.
“தூ..போடா.. மசுறு… சுடுரா..இப்ப சுடுரா.. “ என்று அலட்சிமாயானதொரு
கோபத்துடன் தோழர் நெஞ்சை நிமிர்ந்தி கர்ஜனை செய்தார்.. அஞ்சதா போர் வீரன் போல் அவர் ஜொலித்தார் புரட்சி
ஒங்குக… புரட்சி ஒங்குக என்று அந்த காடு அதிர முழங்கங்களை எழுப்பினார்.. புதர் மறைவில்
இருந்த ஓணான் தலையை தூக்கி எட்டி பார்த்தது.
பனங்காடை ஒன்று உற்று கவனித்தது.
அங்கிருந்தவர் அனைவரின்
முகங்களில் ஆச்சிரியமும் அச்சமும் மாறி மாறி காண்பித்தன. டிஎஸ்பி முகம் சிறுத்து கருத்தது.
கைதி பயந்து கெஞ்சுவான் என அவர் எதிர்பார்ப்பு தோல்வி கண்டது.. எல்லா காவலர்களும் ஏதோ புதிய மனிதனை கண்டதை போல பார்ப்பதை கண்டு எரிச்சல்
அடைந்தார்.
“அவன சுடு..ங்…” என்று
கத்தினார்.
துப்பாக்கி வேட்டுகள் கேட்டன. அதைக் கேட்ட பறவைகள், சிறிய உயிர்கள்
அலறிக் கொண்டு பறந்தன…ஒடின. இரண்டு அக்ககக்கா குருவிகள் வானில் பறந்து அங்கு நடந்ததை
உலகுக்கு அறிவிக்கும்படியாக விதவிதமான ஒலிகளில் பறந்தவாறு கீழ்திசை நோக்கி பறந்தன. தோழர்
சரிந்து விழுந்தார். அவர் உயிர் உடனே போகாவில்லை.
துடித்துக் கொண்டிருந்தது. சதாரண மனிதர்களின் ஆவி கூட எதோ ஆசையால் பல காலம் துடிக்கிறது. பொன்னுலகு போராசை கொண்ட அந்த தோழன் உயிர் எளிதில்
அடங்குமா என்ன?
பெருமாள் இன்னொரு போலிஸ்காரரும் தோழர் அருகில் சென்று உயிர் போய் விட்டதா என்று பார்த்தனர்.
ஏதோ ஒன்றை தோழர் விட்டு விட்டு முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெருமாளின் முகம்
பேயறைந்த மாதிரி மாறியது.
அவரை காவலர் ஒருவர் குழியில் தள்ளினார். கீழே விழுந்த உடல் கடைசியாய் எம்பி துடித்து. தோழரின்
உயிர் அடங்கியது. அவரின் நிலை குத்திய கண்களில் ஜீவ ஒளி கோகிநூர் வைரத்தை காட்டிலும்
மின்னின. அவர் உதடுகளில் மண் ஒட்டிக்கிடந்தது. அவர் மண்ணை சாப்பிட்டு இருப்பாரோ?....
பெருமாள் உறவினர்கள்… நண்பர்கள்… பலரிடம்…. இந்த கண்களை… மரணத்தின் வாசலில்
தோழன் எப்படி நடந்தான் என்பது பற்றி சொன்னார்.
என்னிடமும் வியப்புடன் கூறினார். காலையில்
மாணவன் போராட்டம் தலைவனின் கண்கள் அவைகளில் மின்னிய சீற்றம் ஏனோ அந்த தோழனின் உயிரிப்பை
பிரதிலிப்பதாவே எனக்கு பட்டது.
துறுதுறுவென இங்கும் அங்கும் தாவி குதித்து கொண்டிருந்தத பெருமாளின்
குட்டிப் பையனுடம் விளையாடுவதில் என் கவனம் சிதறியது.
இரவு பத்து மணிக்கு பெருமாள் வந்தார். என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த
குட்டை பையன் ஓடு சென்று அப்பாவின் கழுத்தில்
எம்பி குதித்து தொங்கிளான்.
அவர் அவனை வானில் தூக்கி போட்டு கொஞ்சினார். குட்டி பையனை அவர் வேறு ஒரு பெயரில் அழைத்தார். மகிழ்ந்தார்.
“என்ன… மாமா… இரண்டு பேரா… எல்லாரும் ஒரு பெயரைக் கூப்பிடுகின்றனர்
நீங்க இன்னொரு பெயரை வைத்திங்க போல..” என்று
கேட்டேன்
“அவருக்கு எல்லாம் விளையாட்டுதான் … அது யாரோ ஒரு நக்சலைட்டின் பெயராம் பயமறியா வீரனாம்… அதனால்
அந்த பெயரைதான் எல்லாரும் கூப்பிடனும் சொல்லிகிறாரு உங்க மாமா…” என்றாள் மாமி..
தோழர் உயிர் பிரியும் கடைசி கணத்தில் உச்சரித்தை அந்த வார்த்தை அவருக்கு மட்டும்தானே தெரியும்
“எனக்கு மரணம் கிடையாது ..
நான் மரிப்பதில்லை …
நான்….. நா…
…. ……
நான் என்றால் நானல்ல.”