Sunday, October 15, 2017

மெட்ராஸ் திரைப்படம் பற்றிய விமர்சனம் அல்ல...

மெட்ராஸ் திரைப்படம் பற்றிய விமர்சனம் அல்ல...
***************************************************************************
"சாதிய ஆதிக்கத்தை முழுமுற்றாக துடைத்தெறிய வேண்டுமெனில் அங்கு தாழ்த்தப்பட்ட மக்களில் சாதிய மனநிலை அடிப்படை விசையாக அமைய முடியும்.."
மறைந்த மார்க்சிய அறிஞர் கோ.கேசவன்

மெட்ராஸ் திரைப்படம் சில நாட்களுக்கு முன் பார்த்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது கே.கே.நகர் இராணி அண்ணா நகரும், அதிலிருந்து முன்னோடி அலுவலகம், அதில் 90 களின் ஆரம்பத்தில் நான்கைந்து ஆண்டுகள் அதில் வசித்த அனுபங்கள் தான். சென்னை புறநகர் கிராமவாசியான என்னால் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஜீரணிக்க இன்றுவரை முடியவில்லை.
20க்கு 15அடிகள் உள்ள ஒரு அறை, அதை ஒட்டி சிறிய சமையல் கூடம்.. அந்த சமையல் கூடத்தை ஒட்டிய மிகச்சிறிய கக்கூஸ்-குளியல் அறை. இதுதான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீட்டின் அமைப்பு. இந்த சமையல் கூடத்தை ஒட்டிய மிகச்சிறிய கக்கூஸ் அறை இன்றுவரை ஒத்துப்போகவில்லை என்பது கிராமவாசிக்குரிய மனநிலையாக இருந்தாலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் மனித உறவின் மாண்புகளை சிதைப்பவைகளாகவே எனக்கு பட்டது. இந்த வீட்டில் ஆண்-பெண் இருவர் மட்டும் குழந்தை குட்டி இல்லாமல் வாழ தகுதி படைத்தது. (இது பற்றி விரிவான கட்டுரை பல ஆண்டுகளுக்கு முன் இதழ் ஒன்றில் வந்துள்ளது). ஆனால் குடும்பம் குடும்பமாக சென்னையின் ஏழை-கீழ்த்தட்டு உழைக்கும் மக்கள் பெரும்பாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கிறார்கள். வாழ்கிறார்கள். இங்குள்ள மக்களில் தலித்துக்கள் மிக அதிகமாகவும், பிற இடைச்சாதிகளைச் சேர்ந்த ஏழை உழைக்கும் மக்கள் கணிசமாகவும் இருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை.
சாதி வேறுபாடுகள் இவர்களிடம் இருந்தாலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களிடம் அவர்கள் வாழ்நிலையை ஒட்டி ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். இதே நிலைமை சென்னை குடிசைப்பகுதிகளுக்கும் பொருந்தும்.
மெட்ராஸ் திரைப்படம் இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களின் வாழ்க்கையை, உறவுகளை, காதலை, நட்பை, விளையாட்டை, அன்பு. மேரி, ஜானி பாத்திரப்படைப்புகள் ஊடாக இயக்குனர் ரஞ்சித் காட்சி மொழியில் திரையில் உலாவ விட்டுள்ளார். காளி ஆரம்ப காட்சிகள் காளி ஒ.கே..பிற்பகுதி வணிக சமரசம் அல்லது கார்த்தி சமரம். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் இரவு காட்சிகள்… ஏரியல் & லாக் ஷாட்கள் குறிப்பட தகுந்தவைகள். வேறு பல சினிமாக்களில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காட்சிகள் வருகின்றன. ஆனால் அவற்றில் உயிர்ப்புகள் இல்லை.அல்லது குற்றுயிராய் பதியப்பட்டுள்ளன.
கடைசியாக…
ஒரு வன்னிய நண்பர் கார்த்தி தனது காதலிக்கு இரவில் ஏதோ சுவரோரம் முத்தமிடுவதை கொச்சையாய் விமர்சித்திருந்தார். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காதலர்களுக்கு வேறு யதார்த்தம் இல்லை. பல நாட்களில் தோழர்களுடன் இரவுகளில் நீளும் விவாதங்கள், தேநீர்-பீடி கடைகளை தேடி அலையும் பொழுது இக்காட்சிகள் மிகச்சில நேரங்களில் கண்ணில் படுவது தவிர்க்க இயலாது. கணவன் – மனைவி, அம்மா – மகள் , நண்பர்கள்- குடும்பம் இந்த உறவுகளை அதிக பட்ச கண்ணியத்துடன் இயக்குனர் ரஞ்சித் காட்சிப் படுத்தி இருக்கிறார். நம்முடைய விமர்சனம் மனித உறவுகளின் நாகரிகத்திற்கு கேலிக்குரியதாக்கும் இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளையும் அதை வடிவமைந்த இந்த அரசாங்கத்தின் –அதிகாரிகளின் மீதுதான் இருக்க வேண்டும். ஏனெனில் விருந்தோம்பு தமிழ்பண்பாட்டிற்கு எதிரானது இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் கட்டமைப்பு. விருந்தினர் வரக்கூடாது என்பதே இங்குள்ள வீடுகள் கட்டமைப்பு அங்குள்ள மக்களிடம் திணித்துள்ள பண்பு..
அப்புட்டுதான்…

No comments:

Post a Comment