Sunday, December 6, 2020
தோழரின் துப்பாக்கி ஏன் மவுனித்தது? சிறுகதை
****************
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”.
தனக்கு மிகவும் பிடித்த குறள் இது…அந்த உலோகம்..அந்த உலோகத்தினால் செய்யப்பட்ட ஆயுதம் அடிக்கடி இப்படிப் பெருமைப்பட்டுக் கொள்ளும். நவீன காலத்தைச் சேர்ந்தவனாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்தோன்றி மண் தோன்றாத காலத்து முன்தோன்றிய மூத்த குடியாகிய தமிழ் கூறும் நல்லுலகம் தனது வருகையைப், பெருமையைப் முன்கூட்டியே பறை சாட்டி சென்று உள்ளது என்று அந்த ஆயுதம் அடிக்கடி பீற்றித் திரிந்துக் கொண்டு இருந்தது.
“என்னடா ஏட்டிக்கு போட்டியா எக்குத்தப்பா அது உளறுகிறதே என்று யாரும் நினைக்கக் கூடாது…. ஏன்னா.. அந்த ஆயுதமே ஒரு ஏடாகூடமான ஆளுதான்”
அதன் பெயர் துப்பாக்கி.
ஒரு விதத்தில் துப்பாக்கியும் மழையைப் போன்றதுதான்! மா-நிலம் போற்றும் மாமழைக்கு நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடுகள் கிடையாது. துப்பாக்கியும் அது மாதிரியான ஒன்று தான்!! விசையை அழுத்தினால் தனது எதிரில் யார் இருக்கின்றாரகள் என்று கவனிக்காமல், துப்பாக்கி குண்டுகளை மழையாய் பொழிந்து நல்லவனோ கெட்டவனோ அனைவரையும் போட்டு தள்ளிவிடும். எல்லாருக்கும் மோட்ச லோகத்தை அள்ளி அருளி தந்து விடும்.
எந்த தராதரமும் அற்ற இந்த துப்பாக்கியை விதவிதமான வகைகளாய் மேம்படுத்த, வளர்க்க மனிதர்கள் தங்கள் மூளைகளை கசக்கி பிழிந்து கோடான கோடி மூலதனத்தை, மனித உழைப்பை செலவழிப்பதை பார்த்தால் அந்த துப்பாக்கிக்கும் கூட தர்மசங்கடமாக இருக்கின்றது.ல்
303, ஏபிள், ஸ்டென் கன், எஸ்.எல்.ஆர்., ஏ.கே 47. .ஜி.கே.50…….. … .. என்ற நீளும் இந்த பட்டியல் உயர்நடுத்தர குடும்பத்தின் மளிகைச் சமான்களின் பட்டியலை காட்டிலும் நீண்டுக் கொண்டு போய்க் கொண்டு இருப்பதைக் காணலாம்.
இப்படியானத துப்பாக்கிகளின் ஒன்றுதான் தோழரின் துப்பாக்கி! அது ஒரு தான்னியங்கி யந்திர துப்பாக்கி. சரமாரியாக சில நொடிகளுக்குள் குண்டுகளைப் பொழிந்து பலரை சிவலோகப் பதவிக்கு அனுப்பி விடும் ‘தெய்வாம்சம்’ நிறைந்தது. எங்கேயோ பிறந்து, எப்படியோ வளர்ந்து, எங்கெல்லாமோ ஒளிந்து, எல்லாவற்றிலும் பதுங்கி, தரை, நீர், வான்… என்று அலைந்து திரிந்து கடைசியில் தோழரின் கைகளின் வந்து சேர்ந்தது.
எந்த அரசானாலும், தனி மனிதனாலும் துப்பாக்கி வந்ததும் முதலில் செய்வது போட்டோவிற்கு போஸ் கொடுப்பதுதான்! துப்பாக்கியை கையில் ஏந்தியவுடன் கம்பீரமும், தைரியமும் மட்டுமல்ல… திமிரும், மற்றவர்களை பயமுறுத்த வேண்டும் மன வக்கிரமும் கூடவே ஒட்டி பிறந்து விடுகிறது. ஆனால், தோழர் அப்படி அல்ல!
புரட்சி போரில்,. விடுதலைக்கான களத்தில் மக்கள் என்ன ஆயுதம் தரிப்பது என்பது எதிரி என்ன ஆயுதத்தை வைத்திருக்கிறான் என்பதை பொறுத்தது என்று தோழர் நம்பினார். தேடி தேடி பிடித்து அந்த ஆயுதத்தை தோழர் தொப்புள்கொடி உறவுகளிடம் இருந்து வாங்கினார். அன்றிலிருந்து தோழரும் அந்த துப்பாக்கியும் இணைபிரியாத நண்பர்களாகி விட்டனர். ஆனால் துப்பாக்கியுடன் ஒருமுறை கூட தோழர் புகைப்படம் எடுக்கவில்லை. தலைமறைவு வாழ்க்கையில் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது என்றாலும் அது மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும், வெகுமக்களிடம் இருந்து அந்நியமாவதிற்கும் காரணமாகிவிடும் என்பதாலும் ‘போட்டோவிற்கு போஸ் அளிக்க்கும் கலாச்சாரத்திற்கு’ தோழர் பலியாகவில்லை.
ஒருநாள் தோழரும், அவரின் துப்பாக்கியும், மற்ற சகாக்களும் வங்கியை ஒன்றை சூழ்ந்தனர். மணி ஆக்சன் செய்ய தோழகள் திட்டமிட்டுள்ளதை அந்த துப்பாக்கியின் இரும்பு மண்டைக்கு புரிந்து விட்டது.
பதபதப்பும், மகிழ்ச்சியும் அந்த துப்பாக்கியை வந்தது தொற்றிக் கொண்டது. இந்த மாதிரி அதிரடி வேலைகளில் அது தானே கதாநாயகன்! அதை முன்னிருந்தியே இந்த மணி ஆக்சன் திட்டமிடப்பட்டுள்ளது. துப்பாக்கிக் கண்டதும் பொது புத்தியில் உறைய வைக்கப்பட்டுள்ள பயம்..அச்சம்.. தான் இந்த அதிரடி திட்டத்தின் மூலதனங்கள்.
தோழர்கள் துப்பாக்கியை சரியாக பயன்படுத்துவர்களா?
வங்கிக்குள் நுழைந்த சில நொடிகளில் தோழரின் உள்ளுணர்வு விழித்து ஏதோ ஒரு பொறி தட்டியது. இயல்புக்கு முரணாக சில நபர்கள் நடமாடினர்.. அங்கும் இங்கும் தென்பட்டனர். அவர்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் இல்லை என்பது உறுதி. பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை கற்றுத் தந்த நுணுக்கங்கள், எச்சரிக்கை உணர்வுகள் தனது திட்டம் காட்டி கொடுக்கப்பட்டதை தோழர் உணர்ந்து கொண்டார்.
அங்கிருப்பது பெரும் பிழை என்று உணர்ந்த நொடிகளில் தோழர்களுடன் தப்பித்துச் செல்ல வெளியே பாய்கின்றார்.
“வங்கியை கொள்ளை அடிக்கிறாங்க ……. திருடங்க… திருடராங்க.. ஒடியாங்க” என்று கபடக் குரல்கள் ஒலித்தன.
தோழர் திடுக்கிட்டார். பெரும் கும்பல் கூடி விட்டது. எப்படி நடந்தது இது? எங்கோ தவறு நேர்ந்து விட்டது? அந்த கறுப்பு ஆடு எது? சில வினாடிகளில் தோழரின் மனதில் எண்ணங்களும், உணர்ச்சிகளும் அலைகளாய் எழுந்து மோதின.
திட்டம், செயல் புத்தி, அதை நடைமுறைப்படுத்துபவர் என்று ஒவ்வொரு நகர்வும் தொடர்ச்சியாக செழுமையாக இருந்தால் தான் இரகசிய அதிரடி திட்டங்கள் வெற்றி பெறும். எங்கேனும் ஒரு கண்ணி பிசிகினாலும், அறுந்தாலும் சிக்கல்கள் தலை விரித்தாடும்!
துப்பாக்கிக்கு உற்சாகம் பீறிட்டு கிளம்பியது. இந்த கும்பல் குண்டு மழையில் தூசியாய் கரைந்து விடும். விசையை ஒருமுறை அழுத்தினால் போதும்…….. அது கூட தேவையில்லை. பளபளக்கும் அதைத் தூக்கி காட்டினால் போதுமானது. காக்கைகள் கூட்டமாய் கும்பல் சிதறி ஓடும்!
தோழர் துப்பாக்கியை உயர்த்தி காணத்தை நோக்கி இரு முறைகள் சுட்டார்,
“ஒடி போயிடுங்க.. ……. நாங்க திருடங்க இல்ல.. புரட்சி காரங்க …… விடுதலை வீரர்கள்….. புரட்சி வெல்க” என்று முழங்கினார்.
கும்பல் கலைந்து ஒடவில்லை. துப்பாக்கியை கண்டும் பயப்படாமல் அந்த கும்பல் முன்னேறியது. ஆயிரம் டாலர் ஆச்சிரியத்திற்குரிய மர்மமும், சதியும் அதில் ஒளிந்திருந்தன.
“புரட்ட்சி வாதிங்க இல்ல திருட்டு பசங்க” என்று கும்பலில் இருந்து குரல் எழுப்பி முதல் கல்லை வீசியது. தோழரின் உதடு கிழிந்து இரத்தம் பீறிட்டது.
,இந்த மாபெரும் சந்தாபத்திற்காக தான் அந்த துப்பாக்கி தவம் கிடந்தது.
“நா யன் வேலையை காட்டப் போறேன் … நாலைந்து உயிராவது குடிக்கனும்..” என்று துப்பாக்கி மகிழ்ந்து கூத்தாடியது
பெரும் மக்கள்திரள் மறியல்-ஆர்ப்பாட்டம் நடைபெறும் பொழுது காவல் துறையால் திட்டமிட்ட நடைமுறைப் படுத்தப்படும ஒரு செயல்தந்திரம் கல்லெறியும் தொழில் நுணுக்கம் ஆகும். எந்தந்த போராட்டடங்கள் எப்படி எப்படி கொண்டு சென்று முடிக்க வேண்டும் என்ற மூல யுத்திகள் ஆளும் கட்சிகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் அத்துபடியான விசயம். குறிப்பாக உளவு போலிஸ்அதிகாரிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் இது தலைகீழ் மனப்பாடம்.
அன்னா அசாரே ஆர்ப்பாட்டம், சாமியார்கள் மறியல், உழவர்கள் சாலைமறியல், மாணவர்கள் ஊர்வலம், கம்யூனிஸ்டுகள் தர்ணா, நக்சல்பாரி புரட்சியானர்கள் ஆர்பாட்டம்….. என்று எதை எதை எந்த போக்கில் கொண்டு செல்வது, அதன் இயல்பான முடிவிற்கு விடுவதா அல்லது இரத்த களறியில் முடிப்பதா என்பதை அந்த ஒரு கல்தான் தீர்மானிக்கும். அந்த ஒரு கல் நிகழ்கால் சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையை சுழித்து திசை திருப்பி விட்டு விடும். ஆளும் கட்சி காவல்துறை-துப்பாக்கி-ஒரு கல் கூட்டணிக்கு அந்த அளவிற்கு பலம் உள்ளது.
“மறியலில் ஈடுபட்டவர்கள் கல்லெறிந்து கலவரம்
போலிசாருக்கு பலத்த காயம்
தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு
நான்கு கலவரக்காரக்ள் சாவு “
என்ற செய்திகள் ஊடகங்களின் மூளையில் கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டு இருப்பவை வாந்தி எடுக்கப்படும்.
முதல் கல்லை எறிந்து கலவரத்தை தொடங்கியது யார் என்ற மர்மம் யாருக்கும் தெரியாது
“சார்ர்ர்ஜ்….பய்யர்ர்.. “
என்று தனது இரும்பு உடலை சிலிர்த்து கொண்டு அந்த துப்பாக்கி தனக்குத்தானே ஆணை இட்டு மகிழ்ந்து பார்த்தது. தனது கடமையை செவ்வனே ஆற்றும் நேரம் நெருங்கிவிட்டதை அது உணர்ந்து இருந்தது.
தோழர் இயந்திரத் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தார். அதிலிருந்த குண்டுகள் சீறி பாயத் தயாராயின….ஒரு சில வினாடிகள்…. தாமதமாகின.. தோழர் சுற்றும் முற்றும் பார்க்கின்றார். வாரச் சந்தைக்கு வந்த அந்த எளியமக்கள் துடிதுடித்து சாவதா? யாருடைய சதிக்கு யாரை பலி ஆக்குவது?
அவரின் பிடி சிறிது சிறிதாக சோர்ந்து தளர்ந்ததுக் கொண்டிருந்தது. அங்கிருந்து தப்பித்து ஒட தோழர்கள் முயற்சி செய்கின்றனர். சரமாரியாய் கருங்கற்களை கும்பல் ஏறிகின்றன. அவ்வளவு கருங்கற்கள் வங்கி எதிரில் எப்படி வந்தது? பலத்த காயங்களை அந்த கற்கள் உண்டாக்கின. தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தோழர்கள் குனிந்து உட்கார்ந்தனர்.
மண்டைகள் உடைந்து இரத்தம் கொட்டின. உடலெங்கும் இரத்தக் காயங்கள் சல்லடையாய்…
“போதும் விடுங்க செத்துட போறாங்க..” என்றது பொதுசனம்.
“விடாத.. கொல்லுங்க” என்றன சதிகும்பல்.
“சுடு ….சுடு…” என்று இன்னொரு தோழர் அலறுகிறார். அப்பொழுதாவது தோழர் விசையை அழுத்துவார் என அந்த துப்பாக்கி எதிர்பார்த்தது…. ஏங்கியது…?!
தோழர் மவுனமானார். அந்த துப்பாக்கிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
“பைத்திகாரத்தனமாய் இருகாதீங்க தோழா….கல்லெறிந்து கொல்ல பார்க்கிறாங்க.. கையில துப்பாக்கிய வைச்சு கிட்டு எவனாவது கல்லால் அடிப்பட்ட சாவானா?” என்றது துப்பாக்கி.
விரக்தியாய் தோழர் புன்னகையை தவழ விட்டார். ஆனாலும் அதில் ஒரு தெளிவும் இருந்தது.
“தோழர் துப்பாக்கிய என்னான்ன்ட் கொடுங்க …நா சுடறேன்”
என்று இரத்தம் உடலெங்கும் கொப்பளிக்க மற்றொருவர் மரணவலியில் கெஞ்சுகிறார்.
தோழர் மார்பில் துப்பாக்கியை இறுக பிணைத்துக் கொண்டு மண்டியிட்டு அமர்கிறார்.
“ஆயுதத்த… ஆயுதத்த… மவுனிக்கிறேன்”
என்று தோழர் முணு முணுக்கிறார்
“என்ன தோழர் செயல்றீங்க மவுனிக்றீங்களா?.. உங்கலால் எனது உயிர்ப்பும் அடங்கி போயிடும்.. சீக்கிரம் சுடுங்க” என்றது துப்பாக்கி.
“மத்திய அரச மக்கள் பிரச்சனையில் கவனத்தை குவிக்கவே பாலத்தில குண்டு வைச்சோம்.. இரண்டு மணி நேரத்திற்கு முன்னே அதிகாரிக்கு பொது தொலைபேசி மூலம் தகவல் சொன்னோம் …. மீண்டும் கூட ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு அதிகாரிக்கும் குண்டு வெடிக்கப் போவதை சொன்னோம் அதிகாரிகள் அலட்சியம் மக்கள் பலர் உயிரை வாங்கிட்டது.. மக்கள் சாவுக்கு நாங்க காரணமாகிட்டோம் ………………………..மீண்டும் அப்பாவி மக்கள் சாவுக்கு நா காரணமாக மாட்டேன்..”
விட்டு… விட்டு சொற்களை உதிர்த்தார் தோழர்..இரணத்தின் வலியில் மென்மையாய் பேசினாலும், அதன் வலிமை துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டின் விசையினும் அதிகமாய் இருந்தது.
கற்களால் அடித்து.. அடித்து.. அந்த கும்பல் தோழர்களை கொன்றுக் கொண்டிருந்தது. கற்களை வீசிய கைகளில் சிலரின் கண்கள் குரூரமாய் நகைப்பதை தோழர் கண்டார். உயிர் வதையில் அணு அணுவாய் பரவும் நோவின் வலியில் தன்னையும் மீறிச் செயல்பட்டு மீண்டும் மக்கள் மீது துப்பாக்கியை பிரயோகித்து விடுவேமோ என்ற தார்மீக அச்சத்தில் அந்த மாவீரன் துப்பாக்கியை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்ட குப்புறச் சரிந்தார்.
தோழர்கள் சிந்திய இரத்தில் அந்த இடம் இரத்தக் குளமானது.. துடிதுடித்து அலறி.. அலறி.. முணகி… முணகி தோழர்கள் பலியானார்கள்.
எப்பொழுதும் மனிதர்களை இரத்த வெள்ளத்தில் மூடிகடிக்கும் துப்பாக்கி முதன் முறையாக இளஞ்சூடான தோழரின் இரத்தத்தில் சிறிது சிறிதாக நனைந்தது. பிரசவித்த தாயின் மார்பில் துயில் கொண்டுள்ள இரத்தமும் சதையுமான பச்சிளம் குழந்தையாய் அந்த ஆயுதம் அணைத்து கொள்ளப்பட்டு கிடந்தது.
புதியதோர் ஆயுதாய் அந்த துப்பாக்கி உயிர்த்தெழுந்தது.
தோழரின் இதயம் கடைசியாய் வேகவேகமாக துடித்துக் கொள்வதை அது கேட்டது. மெல்ல மெல்ல தேய்ந்து அந்த துடிப்புகள் அடங்கி கொண்டிருந்தன புரட்சியையும், இன விடுதலையையும் அதனினும் மேலாய் மக்களையும் நேசித்த அந்த தோழனின் ஆன்மா இறுதியாய் துடிக்கும் பொழுது துப்பாக்கியிடம் தனது இறுதி மரண சாசனமாய் ஏதையோ முணுமுணுத்தது. நூற்றாண்டாய் கம்யுனிச இயக்கம் செழுமைபடுத்தி வளர்த்துள்ள மானுட சாசனம் அது …. … ..?!
“தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
பொய்யற்ற அந்த தோழனின் ஆன்மாவிலிருந்து சுயவிமர்சனப் பேராயுதம் குருதியில் வடித்து அந்த கொலைகருவியில் குடி புகுந்தது. அந்த உலோகம் மெல்ல உயிர்தெழுந்த்து. சுயபரீசலனையை செய்யத் தொடங்கியது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment