பெண்சிசு சிறுகதை
ரங்கனுக்கு பவுனு வாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கை உழைச்சாத்தான் கஞ்சி குடிக்க முடியும். இருக்கின்ற ஒருகாணி புஞ்செய்யில் பாடுபடனும். பல நேரங்களில் வெளியில் கூலிவேலைக்கு செல்லவேண்டும் . இந்த பொழப்புலதான் ஒராண்டு முடிந்ததும் வயத்துல பூச்சியோ புழுவோ வளரலேன்னு அந்த வானம் பார்த்த பூமியே கவலைபட ஆரம்பித்தது. மாரியாத்தா புண்ணியத்தில் பவுனு அடுத்த ஆண்டில் பெண்பிள்ளையை பெற்றெடுத்தாள்.
“இன்னா இவ பொட்ட பிள்ளைய பொத்துட்டாளே”
என்னமோ அவள் தான் திட்டமிட்டு பெண்ணை பெற்றது கணக்கா, கட்டியவன் முதல் ஊரே இப்படி பேசி பேசி மாய்ந்து போனது.
“ஆம்பள பிள்ளைன்னா கடசி காலத்தில் கஞ்சி தண்ணியாவது ஊத்தும் பொம்பள பிள்ளைன்னா செலவுதான்”
ஆம்பள பசங்க எட்டி உதைக்கிற கதை தெரியமா இப்படி அங்கலாய்த்தது.
குழந்தை வளரத் தொடங்யது மழலையின் மொழியில் தங்களை மறந்து பெற்றோர் பரவசம் அடைந்தனர். வங்கி கடனில் பசுமாடு ஒன்னற வாங்கினர். பாலைகறந்து நாலு குடும்பத்திற்கு ஊத்தினால், நாலு காசு கையில் பார்க்கலாம் என்ற நம்பிக்கை. அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. துவரம் பருப்பு நிறத்தில் இருந்ததால் அதற்கு துவரம் என்று செல்லபெயர் வைத்தன்.
“துவராம்மா”
இவர்கள் அழைத்தால் திரும்பி பார்த்து, அது அசைந்து அசைந்து வரும் அழகே தனி?
கடேறி கன்றை (பசு கன்று) ஈன்று அவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. பால் வியாபாரமும் நன்றாக நடந்தது.
இரண்டு வயதான குழந்தை தெருவில் இருந்து செவிலி நாய் குட்டியை தூக்கி வந்து விட்டது. நாய்குட்டியும் குழந்தையும் துள்ளி துள்ளி குதித்து விளையாடினர். அந்த வீடே மகிழ்ச்சி கடலில் ழூழ்கியது. நாய்குட்டி ஒட குழந்தை துரத்த, குழந்தை ஒட நாய்குட்டி துரத்த அமர்களப்பட்டது . பவுனு அதை ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள்.
அந்தி சாய்ந்ததும் கழனியில் இருந்து ரங்கன் திரும்பினான். குழந்தை அப்பாவிடம் நாய்குட்டியை கொண்டு வந்து கொடுத்தது. துரு துருவென்று கண்களுடன் புரண்டு விளை ,யாடிய அதை ரங்கனுக்கு பிடித்து போனது. வாஞ்சையுடன் தூக்கி மடியில் வைத்து கொஞ்சினான். மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாடினான்.
“ஐய்யே....பொட்டை நாய் குட்டி”
அவன்முகம் சுண்டி விட்டது, நாய் குட்டியும் குழந்தையும் மீண்டும் குதித்து குதித்து விளையாடியானர்.
“பாப்பா... இந்த குட்டிய எங்கேந்து கொண்டாந்தா”
“யம்மாக் கூட நாடார் கடைக்கு போவச்ச தெருவில் கிடைச்சது”
“குட்டிய அது அம்மாகிட்ட கொண்டு போயி விட்டுடலாம் பாப்பா. பாவம்மா அது. உன்னாட்டும் அதுக்கும் அம்மா வேணும்லா”
“இல்லப்பா... நம்ம வூட்ல வைச்சிக்கலாம், சோறுல்லாம் ... சாப்பிட்டு இல்லாம்மா,,,”
“பொட்டைக் குட்டிம்மா இது. வசவசன்னு குட்டி போட்டுகிட்டே இருக்கும். அதுங்க தொல்லை தாங்க முடியாது”
குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு நாய்குட்டியை விட்டுபிரிய மனமில்லை. இறுக்கமாக அணைத்து கொண்டது.
“இந்த பொட்ட கழுதையே எப்படி கரையேத்தறதுன்னு தெரியல்லை, இதுல்ல இது வேற தொல்லை...”
“எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான்”
பவுன் மீது ஏறிந்து விழுந்தான்.
“நான் யென்னா பண்ணறது. அது தான் தெருவில் போற குட்டியை தூக்கியாந்திட்டு யென் உயிரை வாங்குறா”
நாய்குட்டி ஒடிவந்து ரங்கன் காலை நக்கியது. தரையில் உருண்டு பிரண்டு அழகு காட்டியது. எம்பி எம்பி குதித்தது.
“வொவ்வ்வ் வொவ்வவ்.... வொவ்வவய்’’
கொஞ்சி கொஞ்சி சிணுங்கி கொண்டிருந்தது. ரங்கன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதனுடன் சிறிது நேரம் வினளயாடினான். குழந்தை, நாய்குட்டி, கணவன், மனைவி சேர்ந்து விளையாடினர். அந்த வீட்டில் மகிழ்ச்சி பொங்கி பெருகி கொண்டிருந்தது.
பவுனு இரண்டாம் முறை கர்ப்பம் தரித்தாள். இந்த முறையாவது ஆண்பிள்ளை பிறக்க வேண்டுமென்று அவளும் ரங்கனும் வேண்டாத தெய்வம் இல்லை,
துவ¬ராம் பசு பால் கறப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நிலை கொள்ளாமல் பசு அல்லாடி கொண்டு கத்தி கொண்டிருந்தது. சினைக்கு விடும் நேரம் வந்து விட்டதை ரங்கன் புரிந்து கொண்டான்.
கால்நடை மருந்துவரிடம் பசுவை கொண்டுச் சென்றான், உயர்ந்த ஜாதிரக மாட்டின் விந்துவை கொண்டு சினை ஊசி போடப்பட்டது. மருந்துவர் கேட்பதற்கு முன்பே நூறு ரூபாய் கொடுத்தான்.
“ஜெர்சி இனத்தோட விந்துப்பா இது. பசுவை நல்லா கவனிச்சிக்க. ஏதாச்சின்னு வந்து காட்டு”
இந்த முறையும் கடேறி கன்று பிறந்தால் கொங்கையம்மனுக்கு வேப்பஞ்சலை கொடுப்பதாக வேண்டிக் கொண்டான்.
நாயும் பருவம் வந்து விட்டது. எப்பொழுதும் அதன் பின்னால் ஆண் நாய்கள் சுற்றி சுற்றி வந்தன. இதுவும் கூட பல தடவைகள் ஆண் நாய்களுடன் வெளியில் அடிக்கடி ஒடி போனது. சிறுமிக்கு இந்த நாய்கெல்லாம் எதற்கு நம்ம நாயை சுத்தி வருகிறது என்று புரியவில்லை. கற்களை கொண்டு அவைகளை விரட்டி விரட்டி அடித்தாள். ஆண் நாய்களின் அலச்சல் தாங்கமுடியாததாக இருந்தது. ரங்கனும் விரட்டிப் பார்த்தான். ஒன்று ஆண் நாய்கள் இதைச் சுற்றி சுற்றி வந்து சண்டை போட்டன. அல்லது பெண் நாய் ஆண் நாய்கள் இருக்குமிடம் தேடி ஓடியது. இந்த தேடல் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வந்தது.
நாய் சினையாகி விட்டதை பவுன் புரிந்துகொண்டாள். வழக்கத்தைவிட அதிகமாக சாப்பாடு கொடுத்தாள். வாஞ்சையுடன் அதை கவனித்துக் கொண்டாள்.
கழனியில் இருந்து பசும்புல்லை அறுத்து வந்து பசுவிற்குப் போட்டாள். கணவன் தரும் பணத்தில் மிச்சம் பிடித்து தவுடு புண்ணாக்கு வாங்கி கொடுத்தாள். அடிக்கடி பசுவைக் கழனிக்கு ஓட்டிச்சென்று வயிறாற மேய்ந்து கொண்டு வந்தாள்.
இயற்கையின் உந்துதலால் இனப் பெருக்கத்திற்காக தாய்மை அடைந்த உயிர்கள் தங்களுக்குள் வாஞ்சையும், பரிவும் கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று தோழமை உணர்வை வெளிப்படுத்தின.
மாதங்கள் உருண்டோடின. இடுப்பு வலி கண்ட பவுனை பக்கத்து நகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவ நிலையத்தில் ரங்கன் அழைத்துக் கொண்டு போய் சேர்த்தான். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு, அம்மாவை இரவு மனைவியுடன் மருத்துவமனையில் தங்கி இருக்கச் செய்தான்.
அக்கம் பக்கம் உறவினர்கள் பார்த்தாலும், குழந்தை தனியாக வீட்டில் இருக்கும் என்று பதைப்புடன், மாலையில் வீடு வந்து சேர்ந்தான். வந்ததும் வராததுமாக குட்டிப்பெண் ஓடிவந்து காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா அப்ப்பா... நம்ம நாய் ஜச்சு குட்டி போட்டிருக்கு... வா காட்டுறேன்...”
“எங்கம்மா....”
இழுக்காதக் குறையாக அப்பாவை இழுத்து சென்றது. புழக்கடையில் முட்புதர்களுக்கு மத்தியில் பாதுகாப்பான இடத்தில் குட்டிகளைப் போட்டு இருந்தது. தாய்மை பூரிப்பில் நாய் அவனைப் பார்த்தது. குட்டிகள் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை.
“ம்ம்ம்...ம்ம்..ம்”
மெல்லியதாக முணுகியபடி ஊர்ந்து ஊர்ந்து தாயின் மடியில் பாலைக் குடிக்க முயற்சிக்கின்றன.
“இரண்டு கருப்புக் குட்டி... இரண்டு செவிலி.. ஐந்தாவது எங்கம்மா...”
“இப்ப தான்ப்பா கொஞ்சம் முன்னாடி பார்த்தேன்.”
பலவீனமான குட்டியைத் தாய்நாய் தின்றுவிட்டு இருக்கும். பசிக்காகவா அல்லது மருத்துவ காரணங்களுக்காகவா என்று ரங்கனுக்கு விளங்கவில்லை.
நாய்குட்டிகளை எடுத்துப் பார்த்தான். இரண்டு கடா குட்டிகள். இரண்டு பெட்டைக் குட்டிகள் இருந்தன.
குட்டிப் பெண்ணின் மகிழ்ச்சி எல்லையற்று தாண்டவமாடியது.
அன்றிரவு துவராம் பசுவும் எந்த சிக்கலுமின்றி கன்றை ஈன்றது.ஆசையுடன் என்ன முயன்று கொண்டு இருந்தது.
இரண்டு பெட்டை குட்டிகளை எடுத்து துண்டால் மறைந்து கொண்டு நடந்தான். வீட்டின் மூளையில் இருந்த மண்வெட்டியைக் கொண்டு சென்று குழியைத் தோண்டினான். சிறிய குழிதான். அதில் இரண்டு பெட்டைக் குட்டிகளைப் போட்டான். புசுபுசுவென மகிழ்ச்சியாகக் கண்களைக் கூட திறக்காத குட்டிகள் ஒன்றின்மீது ஒன்று ஏறிக் கொண்டிருந்தன.
ஒரு கணம் யோசனை செய்தான். மண்ணை அள்ளி அதன்மீது போட்டு உயிரோடு அந்தக் குட்டிகளைப் புதைத்துவிட்டான்.
குட்டியின் கடைசி அலறல் கேட்டு நாய் அங்குமிங்கும் ஓடியது. இரண்டு குட்டிகளை அணைத்து சுற்றுமுற்றும் பார்த்தது. இரண்டு குட்டிகளைத் தேடி தேடி ஒடி அலைந்தது.
கடேறிக் கன்று வாலை முறுக்கியவாறு துள்ளி துள்ளிக் குதித்து ஓடிவந்தது.
====
No comments:
Post a Comment