Wednesday, June 25, 2014

'With You or Without You' சிங்களப்படம் சொல்லும் கதை என்ன?


தனது எல்லா உறவுகளும் சிதறடிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்ட சிங்கள இளைஞன் தனது பிழைப்புக்காக சிங்கள இராணுவத்தில் சேருகிறான். ( அறுபது மக்களுக்கு ஒரு இராணுவ வீரன் இலங்கையில்..).. சிங்கள இராணுவம் விடுதலைப் போராளிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொல்கிறது. தமிழ்பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துகிறது. தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடி கொள்ளை அடிக்கிறது. அவனின் இராணுவ பிரிவு ஒரு தமிழ்பெண்ணை கும்பலாக பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்கிறது. அது விசாரணைக்கு சென்றபொழுது தனது நண்பர்கள் என்பதற்க்காக பொய்சாட்சி சொல்லி பாலியல் வன்புணர்ச்சி செய்த நண்பர்களை அவன் காப்பாற்றுகிறான். குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டு அவன் இராணுவத்திலிருந்து விலகுகிறான்.

ஈழத்தமிழர்கள் வாழும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலையக ஊரில் அடகு கடை வைத்து அந்தச் சிங்கள இராணுவ வீரன் வாழுகிறான். கடுமையான உளவியல் சிக்கலில் இருக்கும் அவன் இலட்சியம் அந்த தேயிலை தோட்டங்களில் ஒரு துண்டு நிலத்தை வாங்குவதுதான். அடகு தொழிலை காறாக ஈவு இரக்கமின்றி செய்கிறான். அப்பொழுது செல்வியை சந்திக்கிறான். செல்வியின் இரு சகோதரர்கள் நான்காவது ஈழப் போரின் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். அவளுடைய பெற்றோர்கள் அவளை இராணுவத்தினரின் பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கே பெரும்பாடு பட வேண்டி இருக்கிறது… அவள் அகதியாய்.. அநாதையாய் மலையகத்தில் அடைக்கலமாகிறாள். செல்வி அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்ட தன்னுடைய இனத்தின் வலிகளை சுமந்து திரிகிறாள்..

நகைகளை அடகு வைக்க வ்ரும் செல்வியின் கண்ணிலும் உதடுகளிலும் தெரியும் நெருப்பு அந்தச் சிங்கள இராணுவ வீரனை அவள்மீது காதல் கொள்ள வைக்கிறது. அவள் முதலில் மறுத்தாலும் பின்பு சம்மதிக்கிறாள். தான் அந்த பெண்ணுக்கு ஒரு சாதாரண சிங்கள மனிதனை நேசிப்பதற்கு சிக்கலில்லை. அவனோ தான் இராணுவ வீரன் எனபதை மறைத்து விடுகிறான். நேசம், காதல், கலவி என்று அவர்கள் இருவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லுகிறது. அவன் புத்தரை கும்பிட்டாலும் அவள் ஏசுவை வழிபட உதவுகிறான். அவள் இந்தியா செல்ல வேண்டும்..தனது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா என்று தேட வேண்டும் என்கிறாள். அவன் தேயிலை தோட்ட துண்டு நிலத்தை வாங்கும் இலட்சத்தில் உறுதியாக இருக்கிறான். அவள் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான்.

அவனை பார்க்க வரும் சிங்கள இராணுவ வீரன் செல்வியிடம் அவள் கணவன் இராணுவ வீரன் என்று எதேச்சையாக சொல்லி விடுகிறான். எந்த சிங்கள இராணுவத்தால் அவள் குடும்பம், உறவுகள் சிதைவுக்கு உள்ளானதோ அந்த சிங்கள இராணுவத்தின் கூறாக இருந்தவனை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்பு, நேசம், காதல், உறவு, கலவி ஆகிய அனைத்து மனித உறவுகளும் அவர்களுக்குள் சிக்கலாகி மனச்சிதைவாகின்றது. இந்த சிக்கலே அரசியல்பார் பட்டது. முன்னாள் சிங்கள வீரனுக்கோ தன்னுடைய கடந்த காலம் சுமையாக இருக்கிறது. அந்த சுமையிலிருந்து வெளிவருவதற்கு, அவளுடைய பிடிப்புத் தேவையிருக்கிறது. அது உண்மையானதாகவும் இருக்கிறது. ஆனால் அரசியல், கலாச்சார, பொருளாதார, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவளுக்கு அடக்குமுறையின் கருவியாக இருந்தவனை முற்றிலும் ஏற்றுக்கொள்வது சாத்தியமற்றுப் போகிறது.

அவன் மன்னிப்பு, அவன் காதல்.. என்று கெஞ்சி, கடந்த காலத்தை மறந்து விடுவோம் என்றாலும் அவள் மனம் சமாதானம் அடைய மறுக்கிறது. தனது காதல் மனைவிக்காக அடகு கடையை விற்றுவிட்டு அவள் விருப்பபடி இந்தியா செல்ல பாஸ்போர்ட் வாங்கச் செல்கிறான். ஆனால் அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். தற்போது ஒரே நாட்டுக்குள் இரண்டு இனங்களும் இணைந்து வாழ சமரசங்களை முன்வைக்கும் அரசியல் வாதங்கள் அவளின் தற்கொலையின் மூலம் தவிடுபொடியாக்கப்படுகின்றன. இது கதையில் நேரடியாக இல்லாவிடினும் மிகவும் அழுத்தமான சினிமா மொழியில் முன்வைக்கப்படுகிறது.

இந்தப் படம் அவர்களுக்கு இடையில் நிகழும் உளவியல் சிக்கலுக்கான அடிப்படை அரசியல் காரணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடவில்லை. அவள் அவனிடம் கேட்கிறாள், “எத்தனை அப்பாவித் தமிழர்களை கொன்றாய்? எத்தனை தமிழ்ப் பெண்களிடம் வல்லுறவுக் கொண்டாய்? எந்த தமிழ் பெண்களின் தங்க நகைகளை கொள்ளை அடித்து இந்த அடகுகடையை வைத்தாய் ” என்று . அவளின் கோபாவேசக் கேள்விகளிலிருந்தே இராணுவ அடக்குமுறை எந்த அளவுக்கு கொடூரமாக இருந்தது என்பதை வெளிக்கொணருகிறாள். இராணுவ வீரன் தான் செய்த ஒரு குற்றத்தை ஒப்புக்கொள்ளுவதன் மூலம் அத்தகைய குற்றங்கள் எந்த அளவுக்கு பரந்துபட்டதாக நிகழ்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பேரினவாத பாசிச சிங்கள அரசின் கீழ் வாழும் படைப்பாளி பிரசன்னா விதானாகே தான் வாழும் சமூகத்தின் மீதான விமர்சனத்தை பொறுப்புடன்,நேர்மையுடன் தனது கலைமொழியில் துல்லியமாகக் அம்மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளான்... ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த படைப்பாளி தனது இனத்தின் குற்ற உணர்வை, ஒடுக்கப்பட்ட இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை தனது மக்களின் மனசாட்சிக்கு உரைக்கும்படி தன் இனம் இன்னொரு இனத்திற்கு இழைத்த போர் குற்றத்தை தனது மக்களுக்கு எதை புரிய வைக்க நினைத்தாரோ அதை சிறப்பாக செய்திருக்கிறார் …

• போர் குற்றங்களை பதிவு செய்ய ஆலிவு பிரமாண்டங்கள் தேவை இல்லை. செதுக்கப்பட்ட கதைசெறிவுள்ள மன உணர்வுகள் மூலம் எளிமையாக காட்ட முடியும்.

• சிங்கள இராணுவ வீரனும் அவன் மனைவியும் விஜய் படம் பார்க்கிறார்கள் ..” பயம் பயம்.. தனிமனிதனிடமும், மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி எதையும் சாதிக்கலாம்..” என்ற வசனம் ஒலிக்கிறது.. படம் முடிந்த பின் …. ‘Waste of time’ என்று சிங்கள இராணுவ வீரன் சொல்கிறான். எவ்வளவு கொடூரங்களை சிங்கள இராணுவம் செய்து பயத்தை ஈழத்தமிழ்மக்களிடம் செய்தாலும் அது ‘Waste of time’..அது எந்த பயனும் அளிக்காது என்று இயக்குனர் போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.

• படத்தின் முதல் பிரேமில் சன்னலில் ஒரு இளம் பெண் மாடியில் நின்று கொண்டு மலையின் பசுமையை இரசிப்பாள் என்ற காட்சி படிமத்தை இயக்குனர் பதிய செய்வார். ஆனால் படத்தின் இறுதியில் அந்த காட்சி படிமம் தற்கொலை செய்யும் காட்சி படிமாக மாற்றப்பட்டு இருக்கும்.

• முதலில் ஆண்-பெண் படுக்கையறை உடலுறவு காட்சி படிமங்கள் காட்டப்படுகிறது .. பின்பு சிங்கள இராணுவ வீரன் என்று தெரிந்ததும் வல்லுறவு காட்சி படிமங்களாக அழுத்தமாக பார்வையாளர் மனதில் பதிய இதை இயக்குனர் பயன்படுத்துகிறார்..

* சிங்கள இராணுவ வீரன் தொடர்ச்சியாக ரெஸ்லிங் பார்ப்பது எதை நமக்கு புரிய வைக்க முயல்கிறது.

No comments:

Post a Comment