உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்: -Bhim Prabha Gandhi
***********************************************
சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது.
சோவியத் மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகளைப் பற்றிக் கேள்விப்படும் தமது மக்கள், புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று மேற்குலக அரசுகள் அஞ்சின. அதனால் தான், எதிர்காலப் புரட்சியை தடுக்கும் நோக்கில், தாமும் அதே மாதிரியான வசதிகளை தமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர். மனித சமுதாயம் முழுவதற்கும் சோவியத் யூனியன் வழங்கிய நன்கொடைகளின் விபரம்:
1. உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது.
2. வேலை செய்யும் அனைவருக்கும், வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத விடுமுறை வழங்கப் பட்டமை இன்னொரு சாதனை ஆகும். சில தொழிற்துறைகளில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட விடுமுறை கிடைத்தது. அது மட்டுமல்ல, விடுமுறைக் காலம் முழுவதும் முழுச் சம்பளம் வழங்கப் பட்டது. இதுவும் உலக வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.
3. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் ஏதாவதொரு தொழிற்சங்கம் பொறுப்பாக இருக்கும். அதில் அங்கத்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிற்சங்கப் பாதுகாப்பு கிடைத்து வந்தது. உதாரணத்திற்கு, தொழிற்சங்கத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நிறுவனமும் தமது ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது.
4. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த ஒவ்வொரு பட்டதாரிக்கும், வேலை தேடிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதிப் படுத்தப் பட்டது.
5. பாடசாலைக் கல்வியில் திறமைச் சித்தி பெற்ற அனைவரும், தாம் விரும்பிய கல்லூரிக்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ செல்ல முடிந்தது. தரப்படுத்தல் கிடையாது. கல்விக் கட்டணமும் அறவிடப் பட மாட்டாது.
6. பாலர் பாடசாலை தொடங்கி, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையில், முற்றிலும் இலவசமாக வழங்கப் பட்டது. உலகிலேயே இலவசக் கல்வியை அறிமுகப் படுத்திய முதல் நாடு சோவியத் யூனியன் தான்.
7. உலகிலேயே முதல் தடவையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல் சத்திர சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். எங்கேயும், எப்போதும், காலவரையறை இன்றி இலவச மருத்துவ வசதி வழங்கப் பட்டது. எந்த மருத்துவமனையிலும் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கவில்லை. காலந் தாமதித்து சிகிச்சை வழங்கவில்லை. ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் (poliklinikas) இருந்தன. அந்த இடங்களுக்கு எவரும் சென்று வைத்திய ஆலோசனை பெறலாம். எக்ஸ் ரே படம் பிடித்தல், பற்களை கட்டுதல் அனைத்தும் இலவசம்.
8. ஒவ்வொரு உழைப்பாளியும், தனது நிறுவனத்தை சேர்ந்த முகாமையாளரிடம் சுற்றுலா பயணம் கோரி விண்ணப்பிக்க முடிந்தது. கடற்கரைக்கோ அல்லது வேறெந்த விரும்பிய சுற்றுலா ஸ்தலத்திற்கோ சென்று வர அனுமதி கோர முடிந்தது. ஒவ்வொரு வருடமும், தமது தொழிலாளரின் சுற்றுலா செலவுகளை, அந்த நிறுவனம் முழுமையாக பொறுப்பெடுத்தது. அதாவது, தொலைதூர பிரதேசத்திற்கான சுற்றுலா பயணமும் முற்றிலும் இலவசம்.
9. உலக வரலாற்றில் முதல் தடவையாக, ஒவ்வொரு சோவியத் பிரஜையும் இலவச வீட்டுக்கு உரிமை உடையவராக இருந்தார். வீட்டு வாடகை கிடையாது. முற்றிலும் இலவசம். உங்களது பெயரில் வீடு எழுதித் தரப் படும். அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பின்னர் உங்களது பிள்ளைகள் அங்கே வசிக்கலாம். வீடு கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டி இருந்தமை உண்மை தான். ஆனால், ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு புது வீடுகள் வழங்கப் பட்டன. இன்றும் கூட, ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் பெரும்பான்மையான மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
10. ஒவ்வொரு சோவியத் பிரஜையும், தங்கியுள்ள இடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர இலவச பயணச் சீட்டு வழங்கப் பட்டது. பஸ், மெட்ரோ, ரயில் எதுவாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு இலவச பயணச் சீட்டுகள் கொடுத்தனர். இதுவும் உலகிலேயே முதல் தடவை.
11. தாயாகப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று வருட மகப்பேற்று விடுமுறை வழங்கப் பட்டது. ஆமாம், மூன்று வருடங்கள்! முதலாவது வருடம், அவர் சம்பாதித்த அதே சம்பளம் வழங்கப் பட்டது. இரண்டாவது, மூன்றாவது வருடங்கள் அரசு உதவித் தொகை கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்ல, மூன்று வருடங்கள் முடிந்ததும், அவர் முன்பு செய்த அதே வேலையை திரும்பவும் பெற்றுக் கொள்ள முடிந்தது.
12. ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைகளுக்கான பால் அல்லது பால்மா இலவசமாக வழங்கப் பட்டது. பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் மூன்று வயதாகும் வரையில் இலவசப் பால் கிடைத்தது. இதற்காக, ஒவ்வொரு ஊரிலும் பால் நிலையங்கள் இருந்தன. பெற்றோர்கள் எந்த நேரத்திலும் அங்கே சென்று, தமது குழந்தைகளுக்கான பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை:
பிரமாண்டமான உல்லாசப் பிரயாணக் கப்பலில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம். மலைப் பகுதிகளில் இளைப்பாறுவதற்கு ஆடம்பரமான தங்குவிடுதிகள். சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள் கூட விடுமுறையில் பொழுதுபோக்குவதற்கு ஏற்படுத்தப் பட்ட உயர்தரமான வசதிகள். இந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி, நம் நாட்டு தொழிலாளர்கள் கனவு மட்டுமே காண முடியும். ஆனால், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில் அது நடைமுறையில் இருந்தது. மிக மிக குறைந்த செலவில், அனைத்து பிரஜைகளும் சுற்றுலா செல்வதற்கான வசதிகளை, கம்யூனிச அரசுக்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருந்தன.
தமிழ் பேசும் மத்தியதர வர்க்கத்தினர் பலர், எந்தக் காரணமும் இல்லாமல் கம்யூனிசத்தை, அல்லது இடதுசாரியத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் ஜனநாயகவாதிகளோ அல்லது மனிதநேயவாதிகளோ அல்ல. அவர்களது அச்சம் எல்லாம், தமது சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்கள், தமது "அந்தஸ்தை" எட்டிப் பிடித்து விடுவார்கள் என்பது பற்றியது தான்.
மேட்டுக்குடி மக்கள், வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் சுகபோகத்தில், நூறில் ஒரு பங்கை கூட, அடித்தட்டு வர்க்க மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. இன்றைக்கும், அவர்களைப் பொருத்தவரையில், வர்க்க சமத்துவம் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும், வசதியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிட்டியவர்கள் கூட, உல்லாசக் கப்பலில் செல்வது மிகக் குறைவு.
இப்படி ஒரு நிகழ்வை கற்பனை பண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் கடின வேலை செய்யும் தொழிலாளி, ஒரு மாத விடுமுறையில், குடும்பத்தோடு கோவா சென்று, கடற்கரையில் உல்லாசமாக பொழுது போக்குகிறார். யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி, ஒரு வார விடுமுறையில், குடும்பத்துடன் உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, தாய்லாந்து, சிங்கப்பூர் என்று நாடு பார்த்து விட்டு ஊர் திரும்புகிறார்.
"பகல் கனவு காணாதீர்கள். இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும், எமது நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது." என்று பலர் நினைக்கலாம். ஒருவேளை, இந்தியாவும், இலங்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்படும் சோஷலிச நாடுகளாக இருந்திருந்தால்? அது என்றோ ஒரு நாள் நடைமுறைச் சாத்தியமாகி இருக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த சோஷலிச நாடுகளில், "தொழிலாளர்களுக்கான உல்லாசப் பிரயாணம்" நடைமுறையில் இருந்துள்ளது.
சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோஷலிச நாடுகளிலும், அனைத்துப் பிரஜைகளும் விடுமுறைக்கு உல்லாசமாக பொழுதுபோக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. சோவியத் யூனியன், உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும், பல்லின மக்களின் தேசமாக இருந்தது. அதனால், சோவியத் யூனியனுக்குள் சுற்றுலா சென்றாலே, உலகின் அரைவாசியைப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும்.
உலகில் எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, பெரும்பான்மையான சோவியத் மக்கள் விடுமுறையில் கடற்கரையொன்றில் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு தான் ஆசைப் படுவார்கள். குறிப்பாக மாஸ்கோ போன்ற குளிர்வலையப் பிரதேசத்தில் வாழும் மக்கள், கொளுத்தும் வெயிலில் இளைப்பாற விரும்புவார்கள். அதனால், கருங்கடலில் உள்ள கிரீமியா கடற்கரைகள், விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
அநேகமாக, அன்று ஐரோப்பாவில் இருந்த எல்லா சோஷலிச நாடுகளிலும் சுற்றுலாத் திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைமுறையில் இருந்தது. எமக்கு அந்த நாடுகளின் மொழிகள் தெரியாத படியால், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. (தெரிந்திருந்தாலும் மத்தியதர வர்க்க வலதுசாரி- அறிவுஜீவிகள் அவற்றை மறைத்திருப்பார்கள்.) இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காக, நானும் எனக்குத் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும், கிழக்கு ஜெர்மனி பற்றித் தான் எழுத வேண்டியுள்ளது.
பொதுவாக, இன்றைக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதைப் போன்று, கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான், சோஷலிச நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய தொழிற்சங்கமான FDGB (Freier Deutscer Gewerkschaftbund), சுற்றுலாத் துறையையும் நிர்வகித்தது. அனைத்து தொழிலாளர்களும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலைக்கு தனித்தனியாக சுற்றுலா ஒழுங்குபடுத்தப் பட்டது.
இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்துப் பிரஜைகளும், செய்யும் தொழிலில் பேதமின்றி, சுற்றுலா செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்கப் பட்டது. அதற்காக அவர்கள் மிகச் சிறிய தொகையை கட்டணமாக செலுத்தினார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, எத்தனை வருடங்கள் சென்றாலும், விலை மாறப் போவதில்லை.
FDGB க்கு சொந்தமான ஹோட்டல்கள், நாடு முழுவதும் இருந்தன. அவை "Ferienheime" (விடுமுறை இல்லம்) என்று அழைக்கப் பட்டன. பெரும்பாலும் கிழக்கு ஜெர்மனியின் வடக்கே இருந்த, கிழக்குக் கடல் தான் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. பெரும்பான்மையான மக்கள் கடற்கரையை தெரிவு செய்த படியால், அங்கே தான் அதிகமான தங்குவிடுதிகள் காணப் பட்டன.
கோடை காலத்தில், கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்தியாவில் கோவா கடற்கரைகள், அல்லது தென்னிலங்கை கடற்கரைகள் போன்று காட்சி தரும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், அங்கே வருவோரில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். ஆனால், கிழக்கு ஜெர்மன் கடற்கரையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.
ஒவ்வொரு வருடமும், விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மலைப் பகுதிகளிலும் விடுமுறைத் ஸ்தலங்கள் இருந்தன. அதுவும் வேண்டாமென்றால், ஓர் ஏரிக்கரையில், அல்லது புல்வெளியில் கூடாரம் அடித்து தங்கிக் கொள்ளலாம்.
கிழக்கு ஜெர்மன் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல முடியுமா? ஆம்! மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வது தடுக்கப் பட்டது உண்மை தான். ஆனால், அவை மட்டுமே உலகம் அல்லவே? சகோதர சோஷலிச நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் சுதந்திரம் இருந்தது.
சோவியத் யூனியன் மட்டுமல்லாது, ஹங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, யூகோஸ்லாவாக்கியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, கிழக்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அது மட்டுமல்ல, சிறந்த நட்புறவு பேணப்பட்ட, அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும், சுற்றுலா செல்ல முடிந்தது. கியூபாவுக்கு செல்வது மிகுந்த செலவு பிடிக்கும் விடயமாகையால், அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் தவிர வேறு யாரும் செல்லவில்லை.
FDGB, இரண்டு உல்லாசப் பயணக் கப்பல்களை வைத்திருந்தது. Cruise Ship எனப்படும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல்கள், இன்றைக்கும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஆடம்பரக் கப்பல்களில், சாதாரண தொழிலாளர்களும் பயணம் செய்தனர் என்று சொன்னால் நம்புவீர்களா?
Arkona, Völkerfreundschaft ஆகிய இரண்டு ஆடம்பரக் கப்பல்களில், இடப்பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது. திறமையாக வேலை செய்து, அதிகமாக உற்பத்தி செய்து சாதனை செய்த தொழிலாளர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அது அவர்களை ஊக்குவிக்கும் பரிசாக வழங்கப் பட்டது. அதற்கு அடுத்த படியாக, நிறைய பிள்ளைகளை கொண்ட, பெரிய குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டது. சிலநேரம், மக்களுடன் சேர்ந்து, ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும் பயணம் செய்தனர்.
உல்லாசக் கப்பல் என்றால், உள்நாட்டுக் கடலுக்குள் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்கு போக வேண்டாமா? ஆமாம், அந்தக் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்த கடற்கரைப் பட்டினங்களை நோக்கிப் பயணம் செய்தன. கப்பல் பயணிகள் அந்த நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள். Völkerfreundschaft கப்பல், எந்தெந்த நகரங்களுக்கு செல்கின்றது என்ற விபரம் பொறிக்கப் பட்ட பீங்கான் தட்டு, கப்பல் பயணிகளுக்கு விநியோகிக்கப் பட்டது. அவற்றை இன்றைக்கும் பல கிழக்கு ஜெர்மன் மக்கள், நினைவுப் பரிசாக வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.
Völkerfreundschaft கப்பல் பயணம் செய்த வெளிநாட்டு நகரங்களின் விபரம்:
Algier (அல்ஜீரியா)
Tripolis (லிபியா)
Dubrovnik (யூகோஸ்லேவியா, தற்போது குரோவாசியா)
Constanta (ருமேனியா)
Batumi (சோவியத் யூனியன், தற்போது ஜோர்ஜியா)
Varna (பல்கேரியா)
கம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற்கு...
ஒரு முதலாளித்துவ நாட்டில் மனிதர்கள் வேலை தேடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் வேலை மனிதர்களை தேடும்.
முன்னாள் சோஷலிச நாடுகளில், "மக்களை வருத்திய, கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கொடுங்கோன்மைகள்" இவை:
ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை, அனைவருக்கும் இலவச கல்வி. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி.
சாதாரண காய்ச்சல் முதல் சத்திர சிகிச்சை வரையில், அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.
மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தை சுற்றி வரலாம்.
ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும், சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுலாப் பயணம்.
ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் அறவிடப் பட மாட்டாது.
அனைவருக்கும் இலவச வீட்டு வசதி அல்லது வீட்டு வாடகை மிக மிகக் குறைவு. மின்சார, எரிவாயு செலவினங்களும் மிக மிகக் குறைவு. அதனால், மாத முடிவில் சம்பளத்தில் பெருந்தொகை பணம் மிச்சம் பிடிக்கலாம்.
சொந்த வீடு, சொந்த வாகனம் வாங்க விரும்புவோர், அதற்காக பெருந்தொகைப் பணம் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டி அவதிப் படத் தேவையில்லை. அரசாங்கமே செலவை பொறுப்பேற்கும்.
இதைப் பற்றி கேள்விப் பட்ட பிறகும், ஒருவர் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார் என்றால், நிச்சயமாக அவர் ஒரு சமூக விரோதியாகத் தான் இருப்பார்.
ஒரு சந்தேகம். மக்கள் வரிப்பணம் இருந்தால்தான் அரசை இயக்க முடியும். அது இல்லாமல் எப்படி மேல் கூறியவற்றை இலவசமாக வழங்க. முடியும் அரசுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்?
ஒரு முதலாளித்துவ நாட்டில், உற்பத்தி சாதனங்கள் யாவும் முதலாளிகளின் சொந்தமாக இருக்கும். பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்பது அவர்களது கொள்கை. முதலாளிகள் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். மக்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால், முதலாளித்துவ பொருளாதாரம் நிலவும் எல்லா நாடுகளிலும், அரசு வரி அறவிடுகிறது. அனைத்துப் பிரஜைகளிடமும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி எடுக்கிறது.
ஆனால், சோஷலிச நாடுகளின் பொருளாதாரம் வேறு விதமாக இயங்குகின்றது. அங்கே முதலாளிகளின் ஆதிக்கம் கிடையாது. சோஷலிச நாட்டில் பெரும்பான்மை பொருளாதார உற்பத்தி, அரசுடமையாக இருக்கும். அதை விட கூட்டுறவு அமைப்பு பொருளாதாரமும் இருக்கும். அரசு நிறுவனமாக இருந்தாலும், கூட்டுறவு நிறுவனமாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒரு சராசரி நிறுவனம், தனது உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்திய பின்னர் கிடைக்கும் இலாபத்தை பொதுவாக இரண்டாகப் பிரிக்கும். ஒரு பகுதி அரசு செலவினங்களுக்காக கொடுக்கப் படும். மறு பகுதி மீள முதலீடு செய்வதற்கு அல்லது தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு செலவிடப் படும்.
உதாரணத்திற்கு, தொழிலாளர்களின் கல்வி, குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வூதியம், விடுமுறையில் சுற்றுலா ஸ்தலங்களில் தங்குவதற்கான செலவுகள் போன்றவற்றை சம்பந்தப் பட்ட நிறுவனம் பொறுப்பெடுக்கும். நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து, பொது மருத்துவம், பொதுக் கல்வி போன்ற செலவுகள் அரசின் பொறுப்பு. முதலாளித்துவ நாடுகளில் ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தின் பெரும் பகுதி முதலாளிகளின் சுகபோக வாழ்வுக்கு செலவிடப் படுகின்றது. ஆனால், சோஷலிச நாடுகளில், அந்தப் பணம் மக்களின் நன்மைக்காக செலவிடப் படுகின்றது.
அவை எந்தெந்த நாடுகள். அந்த நாடுகளின் இன்றைய நிலைமை என்ன?
முன்னாள் சோவியத் யூனியன் உட்பட, பல ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. இதை நான் சொல்லவில்லை. உலகவங்கி, IMF அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகள் அளவு இல்லா விட்டாலும், அவற்றை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்த படியால் அவை இரண்டாம் உலக நாடுகள் என்று அழைக்கப் பட்டன. (மேற்கத்திய நாடுகளின் மூலதன திரட்சியை மறந்து விடலாகாது.) ஆனால், மூன்றாமுலக நாடுகளில் இருந்த சோஷலிச நாடுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளாக கருதப் பட்டன.
ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளின் பொருளாதாரம், தொண்ணூறுகளுக்கு பிறகு முதலாளித்துவத்திற்கு மாற்றப் பட்டது. தேசம் முழுவதும் விற்பனைக்காக திறந்து விடப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் தாம் விரும்பிய நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கினார்கள். அனேகமாக அடி மாட்டு விலை என்பது போல, பெறுமதிக்கு குறைவாக பணம் கொடுத்தார்கள். குறைந்தளவு தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பினார்கள். அதனால், ஒரே காலத்தில் ஆயிரக் கணக்கானோர் வேலை இழந்தனர்.
அது மட்டுமல்ல, எந்த முதலாளியும் வாங்க விரும்பாத நிறுவனங்கள் பல கை விடப் பட்டன. அவற்றின் உற்பத்தி நின்று போனது. இயந்திரங்கள் துருப் பிடித்தன. அங்கே வேலை செய்து வந்தவர்களும், வேலை இழந்து வீட்டில் தங்க வேண்டிய நிலைமை. வேலையில்லாதவர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. முதலாளித்துவ அரசு அவர்களைப் பொறுப்பெடுக்கவில்லை. இதனால் நாட்டில் வறுமை அதிகரித்தது.