Monday, March 7, 2011

vanambadi-- short story


வானம்பாடி
சிறுகதை
தனது இனத்தின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை கண்டு வானம் பாடி மகிழ்ச்சி அடைந்தது. கடைக்குட்டி மகன் பறத்தலை இச்சை செயலாக அடைந்து விட்டது, அதற்கு ஆனந்தத்தை அளித்தது.
தனது கடைசி வித்தையை மகனுக்கும் மனைவிக்கும் காட்டியது. பாடிக்கொண்டே சுழன்று வானில் மேலே எழும்பியது. செங்குத்தாக வானில் பாய்ந்து மறைந்தது. கண்ணுக்கு தெரியாமல் மறைந்தாலும் அதன் இனிய இசைக் குரல் அந்த வசந்த காலத்தில் புதிய உலகத்தை உதயமாக்கியது. அம்பு போல் சடாரென கீழே பாய்ந்து பின் இறக்கைகளை விரித்துவானில் மிதந்து மீண்டும் அம்பென பாய்ந்து பாடிக் கொண்டே தன் பெட்டையின் அருகில் வானம்பாடி அமர்ந்தது. கடைக் குட்டி அதனை உள்வாங்கிக் கொண்டு செய்து காட்டியது. 
சென்று வா மகனே
பெற்றோர் விடை கொடுத்தனர். குட்டிப்பறவை இறக்கைகளை விரித்து மடக்கி வன்னி பிரதேசத்தின் நான்கு திசைகளிலும்  பறந்து பறந்து திரிந்தது.
வட்டமடித்து பாடிக்கொண்டே வன்னிவயல்களை சுற்றி சுற்றி வந்து குட்டி பறவை பரவச நிலையை  அடைந்தது! பச்சை பசேலன நெற்பயிர்கள், புல்வெளிகள், செடி, கொடி மரங்கள்! வசந்த காலத்தினை வரவேற்கும் வண்ணமலர்கள், பலவிதமான நறுமணங்கள்! காடு, வயல், சமவெளி என்றும் தன் இனத்தோடு சுதந்திரமாக வானம்பாடி திரிந்தது.
வட்டமடித்து பாடி கொண்டே வானில் எழும்பி இனிய இசையை எழுப்பி கொண்டே சடாரென கீழே வந்தபோது தன் இணையை கண்டது. வானம் பாடியின் இசைக்கு பெட்டை மயங்கியது. இரண்டும்  இணை சேர்ந்து காதல் கீதம் இசைந்து உறவாடி சுதந்திர வானில் ஆடி பாடி மகிழ்ந்தன.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை விரிந்து கிடந்த நெல்வயலில் தங்கள் காதல் கூட்டைக் கட்டின.  சின்னஞ்சிறு புற்களால் நேர்த்தியாய் அடர்ந்து தூர்விட்டு கிளம்பிய  நெற்கட்டின் இணைந்து கட்டபட்ட கூடு வானம்பாடியின் வீடு.
காதல் தந்த பரிசாக அடர்நீல நிறத்தில் கரும் புள்ளிகள் கொண்ட  நான்கு முட்டைகள் அடைகாத்து குஞ்சுகளை பொறித்தன.  உழவனுக்கு உதவியது வயலில் கிடந்த சிறுசிறு புழுக்கள், பூச்சிகளை விரட்டி பிடித்துதானும் உண்டு குஞ்சுகளுக்கு தந்தன. சிவந்த சின்ன சிறு அலகுகளை  திறந்து குஞ்சுகள் வானம்பாடிகளை அழைக்கும் அழகே தனி வானம்பாடிகள் மகிழ்ந்து கூத்தாடின. 
நெற்கதிர்கள் பூந்து குலுங்கி மகரந்த வாச¬¬யை பரப்பி பின் பால் பிடித்தது நெல்மணிகள்  உருண்டு திரண்டு முற்றி அறுவடையாகும் முன்பே தன் குஞ்சுகளுக்கு இறகுகள் நன்கு வளர வேண்டும் என்று ஆண்டவனை வானம்பாடிகள் வேண்டிக் கொண்டன.
வன்னிவயல்களில் நெற்பயிர்கள் முற்றி பரந்து விரிந்த தங்கநிறம் கம்பளங்கள் அடுக்கடுக்காய் விரித்தது கிடந்தன குஞ்சுகளுக்கு இறகுகள் முளைத்து கொள்ளை அழகுடன் திகழ்ந்தன
நாளைக்கு பறக்கலாம் கண்ணுங்களா 
இன்றைக்கே பறக்கலாம்பா 
குஞ்சுகளில் செல்ல கொஞ்சலில் வானம்பாடி மயங்கின மஞ்சள்  வெயிலில்தத்தி தத்தி நெல்வயிலில் பறந்தன. மாலை மயங்கி இருள் கவ்வியது. வானம்பாடிகளின் கதகதப்பில் சுதந்திர வானில் பறக்க போவதை கனவு கண்டு குஞ்சுகள் மகிழ்ந்தன.
கருத்த வானில் சிறு சிறு விண்மீன்கள் மின்னுவதை குஞ்சுகள் கண்கொண்டாமல்  பர்£த்து ரசித்து   கொண்டிருந்தன எப்பொழுதோ ஒரு முறை எரி நட்சத்திரம் நகர்ந்து சென்று மறைந்தது
பெரிய எரி நட்சத்திரம் வேகமாக வயலை நோக்கி வந்தது நெருப்பு குண்டு   வெடித்து வயல் பற்றி எரிந்தது. தொடர்ந்து நாலா பக்கங்களிலும் குண்டுகள் வெடித்து சிதறின எல்லா இடங்களிலும் வயல்கள் பற்றி கொழுந்து விட்டு எரிந்தன.   தூரத்தில் ஊரெல்லாம்   தீப்பிடித்து வெடித்து சிதறும் ஒசை ஒயாமால் கேட்டது.      
பயந்து போன குஞ்சுகள் பெற்றோரை கட்டிக் கொண்டன. எங்கே இருந்து பறந்து வந்த ஷெல்  வானம்பாடி கூட்டின் அருகில் வெடித்தது பாடுபாட்டு ஒவ்வொரு புல்லாய், நாராய் சேகரித்து பின்னப்பட்ட அழகிய கூடு பிய்த்து எரியப்பட்டது.
 ஒரு நெஞ்சில் பறிறி எரியும் நெருப்பில் விழுந்து கருகின அம்மா என்று அலறக் கூட அதற்கு வாய்ப்பில்லை. இன்னொன்று இரத்த சகதியில் குற்றுயிராய் துடிதுடித்து அலறி கொண்டே உயிரை விட்டது. பயத்தில் மயக்கம் அடைத்து கிடந்த இரண்டு குஞ்சுகளையும் ஆளுக்கொன்றாய் தூக்கி கொண்டு வானம்பாடிகள் காட்டை நோக்கி பறந்தன.
போரின் கொடூரம் எங்கும் கிடந்தன மனிதர்கள் உடல்கள் அங்காங்கே சின்ன பின்னமாய் கிடந்தன. வானில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தன. நிலமெங்கும் கருகும் வாசனையும்  தீப்பிழம்புகளும் காணப்பட்டன. காட்டில் மான்களும்,  வண்ணமயில்களும், முயல்கள், புலிகள் என்று அனைத்து உயிர்களின் உடல்களும் சிதறிக் கிடந்தன. வயல்களிலும்  ஊர்களிலும் மனித உடல்களும் குற்றுயிராய் சிதைந்த உடல்களும் எங்கும் கிடந்தன மனிதர்கள் சகமனிதர்களை ஏன்?
இப்படி கொன்று குவிக்கின்றனர் தாங்கள் உழைத்து உற்பத்தி செய்த வீடுகளை, மாட மாளிகைகளை வயல்களை, குண்டுகளை கொண்டு தாங்களே தகர்ந்து அழிப்பதும் ஏன்? என்று புரியாமல் வானம்பாடி பறந்தன. 
பொழிந்து குண்டு மழையில் ஒரு சிதறல் தாய் வானம் பாடியையும்  அது தூக்கிச் சென்ற குஞ்சினையும் சுக்கு நூறாய் பிய்ந்து எறிந்தது கண்முன் நடந்த கோரத்தை கண்டும் கதறக் கூட வானம்படியால் முடியவில்லை. ஊமையாய் போனது சக்தியற்று மரண பயத்தில் போரில் சிதலடைந்த டாங்கி ஒன்றில் குஞ்சுடன் தஞ்சமடைந்தது.
பயத்தில் வானம்பாடி கழிசலாய் கழிந்தது. அது டாங்கியினுள் கிடந்த புத்தனின் அமைதி தழுவும் முகத்தை ஒரு கணம் கோரமாக்கி சிதைத்தது. இன்னொரு குண்டு அந்த டாங்கியில் விழ அந்த இடமே சுடுகாடாகி விட்டது.        

1 comment:

  1. வானம்பாடியின் வாழ்​வை குறியீடாக்கி ஈழத்தில் நடந்த இறுதியுத்தத்தின் ​கோரத்​தை எண்ணி உருகும் இச்சிறுக​தை தங்களின் இதுவ​ரையான ப​டைப்புகளின் சிகரமாகப் படுகிறது எனக்கு.

    ReplyDelete