குட்டிப்பையனின் பொம்மை
“மாமா நாளைக்கு பிள்ளை வீட்டுகாரர்கள் கை நனைக்க வருகிறார்கள் நீங்க நிச்சயம் வரனும்”
மச்சானின் இந்த அழைப்பிற்கு பின், என் முகத்தில் தோன்றி மறைந்த தயக்கம் அவனுக்கு புரிந்தது விட்டது.
“நீங்கதான் மாமா முன்னின்று செய்ய வேணும். நம்ப குடும்பத்தில் நீங்க தான் பெரியவங்க.. நீங்க கட்டாயம் வரனும்... நீங்க தான் முன்னின்று நடத்தனும்”
மச்சானின் உறுதியான அழைப்பை தட்டி கழிக்க முடியவில்லை. இப்பத்தானே அந்த பெண்ணிற்கு சடங்கு என்ற பெயரில் ஏதோ நடந்தது. இதற்குள்ளாகவா திருமணம் என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
அதை அவனிடம் சொன்னாலும், எல்லாம் கைமீறி போய் விட்டதை உணர்ந்தேன். அதட்டலாக சொன்னால் இருக்கின்ற கொஞ்சம் உறவும் அறுந்து போகும் என்பதால் தலையாட்டி வைத்தேன்.
பூப்பெய்தல் விழா அல்லது வீட்டு இட்டு கொள்ளும் சடங்கு அழைப்பிதழை வீட்டில் பார்த்தால் எனக்கு எரிச்சல் தான் பற்றிக் கொண்டு வருகிறது.
இயல்பாக உடலில் ஏற்படும் மாற்றத்தை ஊதிப்பெருக்கி, சின்ன பசங்களை பெரிய பொம்பளையாக காட்டும் நிகழ்ச்சி என்பதால் தான் அந்த கோபம். பொம்மை வைத்து விளையாடும் வயதில் பெண் பிள்ளைகளை பொம்மைகளாக்குவது உடன் பாடில்லாமல் இருந்தது.
வேறு வழியின்றி மறுநாள் மச்சான் வீட்டிற்கு சென்றேன். எனக்கு முன்னே நாலு பெரிசுகள் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை சகிதம் அங்கு கூடி இருந்தனர். திருநீறு பொட்டு வைத்து பெரிசு ஒன்றும் அதில் அடக்கம். எனக்கு பிடித்த கட்டம் போட்ட நீலகலர் சட்டையுடனும், கருப்பு முழுகால் ஆடையுடன் தான் சென்று இருந்தேன்.
மாப்பிள்ளை வீட்டாரிடம் நகை எவ்வளவு போடுவது என்று பேசி முடித்து விட வேண்டும் என்றார்கள். பட்டு புடவை, இதர சீர்வரிசைகள் பற்றி பேச வேண்டும் என்றனர்.
இதில் என்ன பேசவதற்கு இருக்கின்றது என்பதுதான் எனக்கு புரியவில்லை.
இருக்கின்ற சொத்தை எல்லா பிள்ளைகளுக்கு சமமாக பிரித்து கொடுத்து விட வேண்டும், இது எனது விருப்பம் மட்டுமல்ல, சட்டமும் அதைத்தான் கட்டளை இடுகின்றது. பெண்ணுக்கும், ஆணுக்கும் சொத்தை சமமாமாக பங்கு பிரிப்பது தான் தற்காலத்தின் உலக நியாயம்.
இப்படி இருக்கையில், நகை,சீர்வரிசைகளுடன் மட்டும் பெண்களுக்கு தரவேண்டியதை முடக்குவது சிரியில்லை என்று தோன்றினாலும், என்னால் எதுவும் இது அதைப் பற்றி பேச முடியவில்லை.
பன்னிரண்டு மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து இறங்கினர்.
வந்து இறங்கிய ஒரு பெரிசு இன்னொரு பெரிசை பார்த்தவுடன் கட்டி பிடித்து குசலம் விசரித்தது கொஞ்சி கூத்தாடியது.
ஆம்! மூன்றாம் கால்வழி ....நாலாம் கால்வழி...அந்த கோத்தரம்....இந்த குலம் என்று சுற்றி சுற்றி சுற்றி வந்து உறவுமுறை, சொந்தபந்தம் வருவதை இரண்டு பெரிசுகளும் பேசிப் பேசி உறுதி செய்துகொண்டன. எனக்கு தான் தலை சுற்றியது.
இவர்கள் எப்படிதான் இப்படி உறவு முறைகள் கட்டி அமைக்கிறார்கள். இதற்கான ஊற்றுக்கண் எங்குள்ளது என்று மட்டும் விளங்கவில்லை.
இப்பொழுது நமது கதையின் மையத்திற்கு வருவோம். பெண்ணின் உறவுகாரப்பெண் அனைவருக்கும் தேநீர் அளித்தாள். அதற்குள் வேகமாக ஆகட்டும் பெண்ணை கூப்பிடுங்கள் என்ற குரல் ஒங்கி கேட்டது.
நாணி கோணி தண்ணீர் டம்பளர்களுடன் பெண் வந்தாள். பார்த்தவுடன் பகீர் என்றது.
அந்த சின்ன பெண்ணை பொம்மையுடன் பார்த்த ஞபாகம் மறையாமல் நினைவில் நிழலாடியது. தன் சக தோழிகள், சிறுமிகளுடன் ஒன்று சேர்ந்தது பொம்மையுடன், சொப்புகளையும் வைத்து விளையாடியக்கொண்டிருந்தது பசு¬மாக நினைவில் வந்தது.
அந்த சிறுமி பொம்மைக்கு கலர் கலர் துண்டு துணிகளை கொண்டு புடவை கட்டிக்கொண்டு இருந்தாள், இன்று அந்த சின்ன பெண்ணிடமிருந்து பொம்மை பிடுக்கப்பட்டது. பளபளக்கும் பட்டு புடவையை அந்த சின்ன பெண்ணிற்கு கட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். பொம்மைக்கு வண்ணதுணியைச் சுற்றி வந்ததாகவே அது இருந்தது.
“இப்படி உட்காரும்மா பாப்பா”
பாப்பாவை உட்காரவைத்து விட்டு பெரிசுகள் தங்கள் வேலையை துவங்கின. நகை ,நட்டு ,சீர் வரிசைகளை பற்றி பேச்சு ஆரம்பித்தது.
“மாமா நீங்க சொல்லுங்க...”
என்னை பார்த்து விழுந்த கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தேன்.
அதற்குள் பெரிசு ஒன்று பெண்ணுக்கு இவ்வளவு போடறோம், பிள்ளைக்கு இவ்வளவு போடுறோம் என்று ஆரம்பித்தது.
உங்க பொண்ணுக்கு நீங்க செய்ய போறீங்க என்று மாப்பிள்ளை வீட்டுகாரம்மா ராகம் பாடியது.சவரன் கணக்குகள் ஏற்றம் இறக்கங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி முடிவாகியது.
எல்லாம் முடிந்த மகிழ்ச்சியில் அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டதை பேசி பேசிப் பிரிந்தனர்.
“மாமா வந்ததால் எல்லர்ம் நல்லபடியாக முடிந்தது”
இந்த சம்பிரதாய பேச்சு... சடங்குகளில் ஊமையாய் வாய்மவுனி போனேன்.
மீண்டும் என்னை பொம்மையாக்கி இந்த பெரிசுகள் உருட்டி விளையாடுகின்றதோ என்ற கவலை ரேகைகள் நெற்றியில் ஒடியது.
மறக்க முடியுமா அந்த நினைவுகளை! பெரிசு ஒன்றால் குட்டிபையனின் கையிலிருந்த பொம்மை பிடுங்கப்பட்டகாட்சி என் மண்டைக்குள் வலியாய் புதைந்து கிடந்தது. அந்த வலியின் நோவு இன்றும் தெறிகின்றது.
அப்பா ஆசையாய் கேட்டார் என்று அம்மா அன்று மெதுவடை காலையில் செய்தார். எனக்கு நான்கு வயது இருக்கும். சுடும்பொழுதே மெதுவடையை லபக் லபக் என்று சுட சுட சாப்பிட்டு கொண்டிருந்தேன்.
“இட்லியை சாப்பிடாமல் மெதுவடையாய் முழுங்கி கொண்டிருக்க... பார்த்துடா ....உளுத்த வடை ரொம்ப சாப்பிட்டா, வயிறு உப்பிடும்”
அம்மாவின் எச்சரிக்கையை மீறி அன்று காலை உணவு மெதுவடை மட்டும் தான் என்று ஆனது. எனது அம்மா கையில் மெதுவடை சாப்பிடுவது இது தான் கடைசியாக இருக்கும் என்று தெரியாது. அதற்குள் பக்கத்து வீட்டு அண்ணன் பள்ளிக் கிளம்புவதை பார்த்தேன். அப்பா வாங்கி தந்த சிலேட்டை எடுத்துக் கொண்டு நானும் அண்ணனுடன் கிளம்பினேன். அம்மா சிரித்த முகத்துடன் வழி அனுப்பினாள்.
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் அண்ணனுடன் மூன்றாம் வகுப்பில் பாடம் கேட்டேன். விளையாட்டு நேரம் வந்தது. நண்பகலில் அண்ணனின் வகுப்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டு மாமா வேக வேகமாய் என்னிடம் வந்தார். என் கையை பிடித்து இழுத்து வீட்டிற்கு அழைத்தார்.
”வரமாட்டேன் போ....அண்ணாவோடதா வருவேன்”
திடுமென அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததை பார்த்தேன்.
“குட்டி பையா உங்கப்பா லாரியில் அடிப்பட்டு செத்துட்டாருடா...வாடா போகலாம்”
செத்துப் போவது என்பதின் அர்த்தம் அப்பொழுது விளங்கவில்லை. ஏதோ தீமை நேர்ந்திருக்கிறது என்று மனம் கூறியது. அவருடன் வீட்டிற்கு புறப்பட்டேன்,
எங்கள் வீட்டை சுற்றி சனங்கள் கும்பலாக கூடியிருந்தனர். அழுகையும் அலறலும் கேட்டது. தலைவிரிகோலமாய் அம்மா அழுது அலறியது கண்டு வீல் என்று அலறினேன்.
என்று அலறி அழுதேன் எவ்வளவு நேரம் அழுத்தேன் என்று தெரியாது. கண்ணீரும் நாக்கும் வறண்டு போனது. சாவுமேளம் கொட்டத் தொடங்கியது
டர்ணக்டர்ணக் கா...டர்ணக்கடர்ர்ர்க்க........இந்த தாளம் எப்பொழுது கேட்டாலும் துள்ளி குதித்து எனக்கு நானே ஆடுவேன். அந்த தாளம் என் உடம்பில் சப்தநாடிகளையும் தட்டி எழுப்பும். இன்று என் உடம்பின் சப்தநாடிகளும் ஒடுங்கி கிடந்தால் அந்த தாளம் எரிச்சலை ஏற்படுத்தியது.
கம்பகாலன் அண்ணன் வந்தார். என்னை கட்டிபிடித்து கதறி அழுதார். “டேய் உங்கப்பனை முழுங்கிட்டயாடா... இந்த வயசிலேயே அப்பனை வாரி கொடுத்துட்டு கொல்லி போடுறயடா” என்றார்.
முதலில் ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அப்பா இறந்ததையும் ,என்னையும் இணைத்து ஏதோ சொல்கிறார் என்று புரிந்தது. அதன் பின்
வந்து போன பெரிசுகள் எல்லாம் ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாமல் அனைத்தும் இதேச் சொற்களை உதித்தன. என்னை அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று மெல்ல புரிந்து, அதிர்த்து போனேன். குட்டி பையனின் மனதிற்க்குள் இரத்தம் கசிந்தது.
இரண்டு கிழவிகள் என்னை இழுத்து சென்று குழாயடியில் வைத்து குடம் குடமாய் தண்ணிரை கவித்தனர். .படக்கென்று டவுசரை உருவி ஏறிந்தனர் துண்டை இடுப்பில் சுற்றி சொறுகினர்.
தலைச்சம் பிள்ளை நான் என்பதால் அனைத்து சடங்களும் என்னை முன்னிறுத்தியே செய்தனர். தீசட்டியுடன் சுடுகாட்டில் அப்பாவை அழுகையுடன் சுற்றி வந்தேன்.
“டேய் தம்பி தங்கச்சிகளையும், அம்மாவையும் நீ தாண்டா காப்பாத்தனும் “
பெரிசு ஒன்று இப்படி என் தலையில் பேரிடியை இறக்கியது.
கொல்லி வைத்தப்பின் திரும்பி பார்க்காமல் இருக்கும்படி கூறி என்னை தூக்கி சென்றனர்.
திரும்பி பார்க்காமல் இருக்க முடியவில்லை. திகு திகுவென அப்பா தீச்சுவாலையாய் எரிந்து கொண்டிருந்தனர். எனது அப்பா மட்டும் அல்ல எனது குழந்தை பருவமும் அந்த தீயில் பொசுங்கி போனது.
பல விழுதுகள் விட்டு பரந்த விரிந்த ஆலமரம் அந்த குளக்கரையில் இருந்தது நானும், தம்பி தங்கையும், இன்னும் சில பொடிசுகளும் விழுதுகளை பிடித்து தொங்கியபடி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தோம். தங்கை விழுது வழுக்கியதால் தொப் தொப்பெனவிழுந்து கொண்டிருந்தாள். அவளை விழுதைகொட்டியாக அணைத்துப் பிடிக்கும்படிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பங்களிகள் அனைவருக்கும் முடிதிருத்துனர் மீசை தாடிகளை எடுத்து விட்டு கொண்டிருந்தார். விழுதில் தொங்கி கொண்டிருந்த எனனை . “இங்கென்னாடா விளையாட்டு”
என்று என்னை இழுத்துக்கொண்டு போய் அவரிடம் விட்டனர். குட்டி பையனுக்கு மீசையா,தாடியா இருக்கும் எடுப்பதற்கு என்று நான் நினைப்பதற்குள் எனக்கு மொட்டை போட்டு விட்டார்!
குளத்தில் என்னை நாலு தடவை முக்கி எடுத்து வெள்ளை துண்டை வேட்டியாய் கட்டினர். அந்த வேட்டி இடுப்பில் நிற்காமல் அடிக்கடி அவிழ்த்து கொண்டது. பெரிசுகள் கிண்டல்... பண்ணி சிரித்தது, என்னை என்னமோ பண்ணியது. பிரமணை போல் துண்டை சுருட்டி இடுப்புடன் இறுக்கிக் கொண்டேன்.
“வாங்க நாயக்கரே.... மனையில் குந்துங்க”
அய்யர் என்னை மனையில் ஒருகாலை மடித்து குந்த வைத்தார். பூணுலை மாட்டி விட்டு தர்ப்பபுல் மோதிரத்தை விரலில் மாட்டினார்.
குலம் கோத்திரம், பாட்டான்,முப்பாட்டன், கொள்ளுபாட்டன் என்று சொல்லி சொல்லி அய்யர், “நாம்மியா நாம்மியா” என்று புரியாத சொற்களை மந்திரங்களாக உதிர்த்து கொண்டு இருந்தார்.
இறுதியில் பங்களாளிகள் அனைவரும் புதுவேட்டி, துண்டு, தலைபாகை அணிந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
எனக்கும் வேட்டி, துண்டு, தலைபாகை அணிவித்தனர். அப்படி சொல்ல இயலாது. அதற்குள் என்னை புதைத்தனர். குழந்தைகள் பெரியவர்களின் ஆடைகளை,செருப்பை, கண்ணாடியை, கைதடி அணிந்து அதைப்போல் செய்ய முயலுவது அவர்களுக்குக்கொரு தன் மகிழ்வை கொடுக்கும். அதுவே சம்பிரதாயமாக வலுகட்டாயமாக வேட்டி, துண்டு, தலைபாகை அணிவித்தது, பெரும் சுமையாக அழுத்தியது.
குளக்கரைக்கு வந்தவுடன் வெண்ணிறத்தில் பளபளவென்று என்னை கவரும் பொருளாக முதலில் இருந்த அதை எடுத்து பார்த்தேன். அதையெல்லாம் தொடக்கூடாது என்று என்னிடமிருந்த சங்கை பண்செட்டியான் பிடிங்கி கொண்டார்.
அந்த கருமாதி ஊர்வலத்திற்கு என்னை தலைமை தாங்கி நடக்க விட்டனர். அந்த பெரியவர்களுக்கான ஆடையணிந்து நடப்பது சிரமத்தை கொடுத்தது. அப்பா இல்லாதப் பிள்ளை என்றால் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது ஊர்காரர்களின் பார்வையாக இருந்தது. அந்த வெண்சங்கை வாயில் வைத்து கண்ணம் புடைக்க ஊதிய பொழுது எழுந்த சங்கோசையும் மணிஓலியும் எனது குழந்தை பருவத்திற்கு வேட்டு வைப்பதாக இருந்ததை சில மாதங்களில் என்னால் உணர முடிந்தது. விளையாட்டு, பள்ளி, கடை, திருவிழா என்று எங்கு சொன்றாலும் எங்களை கிராமத்தினர் வித்தியாசமாக பார்த்தனர்.
“அப்பன் இல்லாத பிள்ளைகள்.. தலைசன் பிள்ளைதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்”
“அம்மா. தம்பி, தங்கையை நீ தாண்டா காப்பாற்றனும்”
இப்படியான அறிவுரைகள், அனுதாப வார்ததைகள் சகஜமாக வந்து விழுந்தன.
குண்டி கழுவுவதற்கே இப்பத்தான் அம்மா கத்து கொடுத்தார்கள். இதில் நான் எப்படி எங்கம்மாவை காப்பத்திகிறது என்று யோசனையில் ஆழ்ந்தேன். இன்றுவரையில் யோசனையில் ஆழ்ந்து கிடக்கிறேன்.
சில மாதங்களுக்கு பிறகு பங்காளியின் மகனுக்கு திருமணம் நடந்தது குடும்பத்துடன் அப்பா இல்லாமல் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி. குட்டி பையன்களுக்கு ஒரே கொண்டாட்டம். கல்யாண வீடு கலை கட்டுவது இவர்களால் தான்.
நாற்காலிகள், மணவறை, பூத்தோரணம் என்று அனைத்தும் எங்கள் விளையாட்டு பொருள்களாக இருந்தது.
நானும், தம்பி தங்கையும் மாற்றி மாற்றி வருவோர் போவோர் மீது எல்லாம் பன்னீர் தெளித்தோம்.
வருகின்றவர்கள் வேண்டாம் என்றாலும் நாங்கள் விடுவதாகயில்லை.
பன்னீரில் குளிப்பாட்டி,ரோசா பூவை கொடுத்து அனுப்பாமல் நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை.
அம்மா கல்யாண மண்டபத்தின் ஒருமுலையில் சங்கடப்பட்டு கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்பா இருக்கும் பொழுது பட்டுபுடவை சகிதம் மல்லிகை மணத்துடன் புன்னகை பூக்க ஒடியாடி அனைவரையும் கவனிக்கும் அம்மாவை இப்பொழுதுபார்க்க முடியவில்லை.
“டேய் கண்ணா ரொம்ம ஆட்டம் போடாதடா.. யாராவது தப்பா சொல்ல போறாங்கடா”
அம்மா என்னை அடிக்கடி அழைத்து தலையை கோதி எச்சரித்தாள். அதன் அர்த்தம்தான் எனக்கு புரியவில்லை.
டும் டும் முடிந்து மருசடங்கு தொடங்கியது. சீர்வரிசைகளுடன் ஆம்பிளை , பொம்பளை என்று எல்லா பெரிசுகளும் உட்கார்ந்து கொண்டு எதையே செய்து கொண்டு இருந்தன, கல்யாண சாப்பாடு கொடுத்த தொப்பு எங்களை இன்னும் நன்றாக ஆட்டம் போட வைத்தது.
“டேய் நாய் க்கரே இங்க வாடா”
பெரிசு ஒன்று என்னை இப்படி கூப்பிட்டது. வேறு யாரையோ கூப்பிடுகின்றார் என்று திரும்பி திரும்பி பார்த்தேன். அன்றைக்கு கருமாதியில் அய்யர் சொன்னதை இன்று கல்யாணத்தில் பெரிசு வழிமொழிந்தது.
குட்டிபையா, கண்ணு, செல்லம், வாண்டு.... என்று தான் அழைப்பார்கள். நான் எப்படி நாயக்கரானேன் எனக்கு புரியவில்லை.
“உன்னைத்தாண்டா ..... அப்பனை வாரி முழுங்கிட்டு ஒன்னும் தெரியாதமாறி
முழிக்கிறதபாரு.. நீ தான் எல்லாத்தையும் முன்னின்று செய்யனும் டா”
சொல்லிக்கொண்டே அந்த பெரிசு குட்டி பையனான என்னிடம் இருந்த பொம்மையை பிடுங்கி வீசி ஏறிந்தது. என்னை தரதரவென்று இழுத்து கொண்டு கொண்டுபோய் சபை நடுவில் உட்காரவைத்தது.
வெள்ளை துண்டை எடுத்து தலைபாகையாக என் தலையில் சுற்றியது அந்த பெரிய தலைபாகையினுள் குட்டி பையனின் முகம் முழுவதும் புதைந்து போனது.
வேட்டி, துண்டுடன் வெற்றிலை பாக்குடன் எனக்கு தாம்பூலம் வழங்கப்பட்டது. மலங்க மலங்க விழிந்து கொண்டு குருவி தலையில் பனைங்காய் வைத்த அந்த பெரிசுகள் மத்தியில் குட்டி பையனான நான் அமர்ந்து கொண்டிருந்தேன்.
எங்களை சுற்றி குட்டி பசங்கள் குதுகலமாக ஆடிபாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏக்கத்துடன் அவர்களின் விளையாட்டையும், கீழே கிடந்த பொம்மையும் பார்த்து கொண்டிருந்தேன்.
தூரத்தில் அம்மா பெருமூச்சுடன் சோகமாக என்னை கவனித்ததைக் கண்டேன். அவர்கள் கண்ணில் துளிர்த்த கண்ணீரை முந்தானையால் துடைத்தார்கள்.
( நன்றி.--WWW.THADAGAM.COM. மின் இதழ்)