மாபெரும் போட்டி இறுதிக் கட்டத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறியது. நாட்டின் பல இடங்களில் இருந்து வந்த இலட்சக்கணக்கான விண்ணப்பங்களை வடிகட்டி, ஆயிரக்கணக்கானவர்கள் தோந்தெடுக்கப்பட்டு பல முனைகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதி சுற்றுக்கு மூன்று பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆவாரம், சூரப்பன், பக்கீரன் ஆகிய மூவரும் தான் அவர்கள் என்பதை நமது கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடிக்கு அறிவிப்பது அவசியமாக படவில்லை! மூன்று பேரும் கடா மீசைகளைத் தடவி தடவி கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தனர்!
மீசையின் முனையில் சாத்துக்குடியை எவ்வளவு நிமிடங்கள் வைத்திருப்பது, கடாமீசையில் கயிறு கட்டி மனைவியை இழுப்பது எனப் பலபல போட்டிகள் நடந்து முடிந்து, மூவரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த மீசைப் போட்டியில் வெற்றி பெற்றால் உலக ஆண்மகன் பட்டம் கிடைக்கும் என்னும் மயக்கத்தில் இப்படியும் அப்படியும் திரும்பி ஆவாரம் அலப்பரைச் செய்தார்!
இறுதி போட்டி ஆரம்பமானது. பக்கீரன் டம்பளரில் இருந்த வடிகட்டாத டீயை எடுத்து அடர்ந்த தனது மீசையில் ஊற்றி வடிகட்டினார்! சூரப்பன் பாலை எடுத்து மீசையில் சிறு ஏடு கூட இல்லாமல் வடிகட்டி காட்டினார் !!
சனங்கள் ஆரவாரம் செய்தனர். தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்த தமிழ்மக்கள் பேச மறந்து சிலிர்த்து போயிருந்தனர்.
ஆவாரம் அலட்சியமாக சூரப்பன், பக்கீரனையும் பார்த்து சிரித்தார். சூரப்பன்னையும் கடா மீசையை முறுக்கினார். பதிலுக்கு ஆவாரம் நன்றாக இன்னும் மீசையை முறுக்கி தொலைகாட்சி காமாராக்களில் இப்படியும் அப்படியும் காட்டி காட்டி போஸ் கொடுத்தார்! மக்கள் பொறுமையை இழந்தனர். இந்த ஆள் போஸ் கொடுப்பதை எப்பொழுது தான் நிறுத்துவார் என்று சலிப்பின் உச்சத்திற்கு மக்கள் சென்றனர்.
இதை எதிர்ப்பார்த்த ஆவாரம் பாலை எடுத்து கடா மீசையில் வடிகட்டி கொண்டே பக் பக் கென்று கெக்கெலியிட்டு சிரித்தார். அடர்ந்த மீசையில் கீழே பால் வரவில்லை. பால் தண்ணீராக வடிக்கட்டப்பட்டு வழிந்தது. பால் மீசையின் மேலே ஒட்டிக் கொண்டது. தொலைகாட்சிக் காமிரா மீசையின் அருகே சென்று துல்லியமாக காட்டியது. தண்ணீர் மட்டும் மீசையில் வடித்தே தவிர பாலை காணவில்லை. அப்பொழுது எழுந்த ஆரவாரம் அடங்கவே இல்லை. மாவீரன் ஆவாரம் நடுவர் அறிவிக்கும் முன்பே பரிசை எடுத்து கடாமீசையில் வைத்து அப்படியும் இப்படியும் தொலைகாட்சிக்குப் போஸ் கொடுத்தார்.
2
அதிசய, பயங்கர கனவை கண்டு சாமிநாதன் திடுக்கிட்டு அலறி எழுந்தான். முகத்தை தடவினான். மீசையில்லாமல் முகம் மழு மழுவென இருந்தது!
மீசை இல்லாமல் இருப்பது ஒன்றும் தலை மூழ்கி போகும் விசயம் இல்லை தான்! போலிஸ் வேலையில் சேர்ந்த பிறகு, மீசை இல்லாமல் இருப்பது உலகமாக குற்றமாகியது.
தங்க பதக்கம், வால்டர் வெற்றிவேல், கேப்டன். காக்கி சட்டை இன்ன பிற தமிழ் சினிமாக்களை பார்த்து பார்த்து சாமிநாதன் வாழ்க்கை இலட்சியமே போலிஸ்காரனவது என்று ஆனாது.
அவனது அப்பா நன்றாகப் படித்தால் நல்ல வேலைக்கு போகலாம் என்று ஆலோசனைகளை வழங்கினார். சாமியின் நாட்டம் போலிஸ் வேலையிலேயே குறியாக இருந்தது. படிப்பில் கவனம் செல்லவில்லை.
போலிஸ் துறைக்கு உடலை தயார் செய்வது அவனது முழுநேர பணியானது.
வாரத்தில் மூன்று நாட்கள் பத்து முட்டைகள், இறைச்சி, காலையில் முளை கட்டிய கறுப்பு மூக்கடலை,,,, என சாமியின் உணவுப்பட்டில் நீண்டது. தள்ளு வண்டியில், சிறுகடைகளில் சாப்பிடும் பீப் பிரியாணி, பீப் சூப் இந்த கணக்கில் சேரவில்லை.
ஜிம்மில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சிகளின் உடலை மூலம் முறுக்கேற்றினான். ஐந்து பேக், ஆறு பேக், ஏழு பேக் என்று ஆரம்பித்து உடம்பில் பேக் எண்ணிக்கை ஏறி கொண்டே சென்றது! செல்லமாக கட்டுவிரியன் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
தினமும் காலையில் ஒட்டப்பயிற்சி செய்தான், கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஒட்டம் அதிகரித்தது. இளைய தளபதி விஜய் ஸ்டைலில் லாரியுடன் ஒடினான்.... ஒடினான். ஒரு கட்டத்தில் உண்மையாகவே லாரியை ஒடிகடந்து டிரைவருக்கு கை காட்டினான்! சினிமாவில் டிரைவர் கை காட்டியது போல் டாடா காட்டுவார் என எதிர்ப்பார்த்தான்,
‘’டேய சாவு கிராக்கி நீ ஒடி வந்து விழுவதற்க்கு ஏ வண்டியாடா கெடைச்சது. சாவு கிராக்கி சாவு கிராக்கி” என்று லாரி டிரைவர் திட்டியது அவன் முதல் தோல்வி!
பதினெட்டு வயது நிறைவடைந்ததும் போலிஸ் வேலைக்கு ஆள் சேர்க்கும் வைபோகத்திற்கு சாமிநாதன் சென்றான். அங்கு கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான். கடல் அலையென இளைஞர்களும், இளைஞிகளும் அங்கு குவிந்திருந்தனர். நாட்டிற்கு சேவை செய்யும் ஆர்வத்தில் இவர்கள் வரவில்லை என்பதை அங்கு நடந்த உரையாடல்கள் அவனுக்கு உண்ர்த்தியது. அவன் முகம் சுண்டி போனது.
எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றான். கடைசியாக உயரத்தை அளப்பதற்கான வரிசையில் நின்றான். உயரும் அளக்கும் பலகையில் ஏறி நின்றான்.
எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றான். கடைசியாக உயரத்தை அளப்பதற்கான வரிசையில் நின்றான். உயரும் அளக்கும் பலகையில் ஏறி நின்றான்.
“எம்பி நிக்காதடா .... சரியா நில்லு”
போலிஸ்காரர் எரிந்து விழுந்தார். அவன் சாதாரணமாதான் நின்றான். டப் டப் பென்று மேலே உள்ள அளவு மட்ட பலகையால் அவன் தலையில் ஒங்கி ஒங்கி இரண்டு தடவைகள் அந்த போலிஸ்காரர் அடித்தார். வலியில் சாமிநாதன் சிறிது குனிந்தான். அதனால் மூன்று சென்டி மீட்டர் உயரம் குறைந்தது. அவன் வேலைக்கு தேர்வாக வில்லை.
அதன் பிறகு மீண்டும் மீண்டும் போலிஸ் வேலைக்காக மூன்று ஆண்டுகள் படையெடுப்புகளை அவன் நிகழ்த்தினான். படாதபாடு பட்டப் பிறகே வெற்றிகனி அவன் கையில் கிடைத்தது.
பயிற்சி முடித்து வேலையில் சேர்ந்தான். நல்ல படியாக நகர்ந்து கொண்டிருந்தது. அரசல் புரசலாக குசு குசுவென அவனை பார்த்து சிரித்ததைக் கண்டான். அந்த இன்ஸ்பெக்டர் இவனை பார்க்கும் பொழுதெல்லாம் முறுக்கு மீசையைத் திருகினார்.
கத்தை மீசை வைத்திருந்த சக போலிஸ்காரர் சாமிநாதனைக் கேட்டு விட்டார்.
“தம்பி மீசைதான் போலிஸ்காரனுக்கு அழகு. மீசையை கத்தையா வளர்க்கனும்”
இப்படி தான் மீசை விவகாரம் ஆரம்பித்தது.
மப்டியில் நாலைந்து போலிஸ் காரர்கள் சேர்ந்து சாராய ரெய்டு சென்றனர். அங்கிருந்த மக்களிடம் கள்ளசாராயம் விற்பதை கேட்டனர். ஒருவர் அவர்கள் யார் என்று கேட்டார்.
“எங்க மீசையை பார்த்த தெரியலையா....”
என்று மீசைகளைத் தடவி போலிஸ்காரர்கள் என்று சொல்லாமல் சொன்னார்கள். அப்பொழுது அவர்கள் சாமிநாதனை நக்கலாக பார்த்து சிரித்தனர்.
அவனுக்கு அவமானமாக போய் விட்டது. இந்த வேலைக்கு ஏன் சேர்ந்தோம் என்று நினைத்தான்.
“மீசை இல்லாமல் ஒம்பது மாதிரி இருக்க”
ஒரு மேலதிகாரி நேரடியாக சொல்லிவிட்டார். ஒவ்வொரு போலிஸ்காரர்களுக்கும் ஒரு நம்பர் இருக்கும். சாமிநாதனுக்கு நம்பர் 1327. ஆனால் அவனை நேரில் பார்க்கும் பொழுது தான் இந்த எண்னை பயன்படுத்தினர். அவன் இல்லாத பொழுது அவனுக்கு சக போலிஸ்காரர்கள் வைத்த நம்பர் 9.
மீசை பற்றி சாமி இப்பொழுதொல்லாம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
சாதாரண கான்ஸ்டேபிளில் இருந்து ஜ.ஜி வரை மீசை வளர்க்க கணிசமாக நேரம் செலவிட்டனர். அதற்கான சிறப்பு திரவியங்களை பயன் படுத்தினர். தங்கள் மீசையை ஒதுக்குவதற்கு சிறப்பு முடிதிருத்துவரையும் அவரவர் சக்தி, வசதிக்கேற்ப ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். வீரம், தைரியம், உறுதி, கம்பீரம் இவைகளின் சின்னமாக மீசை இருந்தது. எல்லாற்றுக்கும் மேலாக ஆண்மை =கடா மீசை=போலிஸ் என்பது போலிஸ்துறையின் கணித சமன்பாடாக விளங்கியது! இதற்கு முன்னர் மீசை வளர்ப்பதற்கு சிறப்பு அலவன்ஸ் தந்ததாக கூட கேள்விப்பட்டான்.
உடல்வலிமை, மனதிண்மை, நுண்ணறிவு ஆகியவைகளை பயிற்சிகள் செய்து வளர்ந்து கொண்ட சாமிநாதனுக்கு, மீசை பற்றி தெரியாமல் போனது பற்றி, அவனுக்கே ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை அளித்தது.
மீசையை வளர்ப்பதற்கு கடும் முயற்சிகள் செய்தான். முப்பது நாளில் வழுக்கை மண்டையில் கரு கருமுடி வளரும் தைலம், அமோசான் -ஆப்பிரிக்க காடுகளில் வளரும் அரிய வகை மூலிகை தைலம்...... என்று பலதையும் சாமி வாங்கி தடவி பார்த்தான். முகத்தை அலங்கோலம் படுத்திக் கொண்டது தான் மிச்சம் மேலுதட்டில் மீசையென சில பூனை முடிகள் அசிங்கமாய் வளர்ந்தது.
மீசை பற்றிய கட்டுரைகள், கவிதைகளை படித்தான். தமிழ் நாட்டிற்கு வெளியே மீசை பற்றி இவ்வளவு காத்திரம் இருக்கவில்லை. இந்தி, ஆங்கில படங்களில் பெரும்பாலான கதாநாயகர்களுக்கு மீசை இருப்பதில்லை. மா-சே-துங் முதல் ஜார்ஜ புஷ்வரை தலைவர்கள் பலருக்கும் மீசை இல்லை. மாவீரன் அலெக்சாண்டர் என்ன முறுக்கு மீசையா வைத்து இருந்தார்? இந்த கேள்விகள் சாமியின் நெஞ்சை துளைத்தன.
“ மீசை முளைத்தோரெல்லாம்
பாரதி என்றால்
எனக்கும் ஆசை
கவிதை வடித்திட
இப்படிக்கு
கரப்பான் பூச்சி”
என்ற கவிதை சாமியின் நினைவில் அவ்வப்பொழுது நிழலாடியது.ஆறுதல் படுத்தியது. இதெல்லாம் அவன் பிரச்சனையைத் தீர்க்க உதவவில்லை. ஒரு கட்டத்தில் மீசை இல்லாமல் போலிஸ் உத்தியோகம் செய்ய முடியாது என்ற எல்லைக்கே அவன் தள்ளப்பட்டான்.
டெங்கு காய்ச்சல் என்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாகினன். கலர் கலர் மாத்திரைகளை விழுங்கி நோய் தீர ஒரு மாதமானது. மீசை பற்றி மறந்தே போனான்.
மீண்டும் வேலைக்கு போகவேண்டிய சூழல் வந்ததும், மீசையை பற்றி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். அருமையான யோசனை உதித்தது. அவ்வை சண்முகிக்கு ஒரு நாகேஷ் மாதிரி இவனுக்கு நண்பன் ஒருவன் கிடைத்தான். கரு கருவென்ற ஒட்டு கடா மீசையுடன் வேலைக்கு சென்றான்.
தடித்த மீசையைப் பார்தத போலிஸ்காரர்களுக்கு சந்தேகம் வந்தது.
“கண்ட கண்ட வைட்டமின் மாத்திரைகளை விழுங்கிதால் இப்படி மீசை அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.” என்று கதை விட்டான்.
“கண்ட கண்ட வைட்டமின் மாத்திரைகளை விழுங்கிதால் இப்படி மீசை அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.” என்று கதை விட்டான்.
வேறு வழியின்றி எல்லாரும் நம்பினர். சிலர் லேசாக இழுத்தும் பார்த்தனர். மீசை நன்றாக ஒட்டி கொண்டதால் இவன் மானம் கப்பல் ஏறவில்லை.
அடிக்கடி தனது கடா மீசையை தடவி சாமிநாதன், மற்ற போலிஸ்காரர்களை கிண்டல் தொனியில் பார்த்தான். தன்னை ஆண்மையை இப்படி சாமி நிருபித்தான் .
ஆனால் அதற்கு இவ்வளவு சீக்கிரத்தில் சோதனை வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
சுதந்திரதின அணி வகுப்பு காவல் துறை சார்பில் மெரினாவில் நடந்தது. அணி வகுப்பின் முன்னணி வரிசையில் சாமிநாதன் இருந்தான். கையில் துப்பாக்கியுடன் அணி வகுத்துச் சென்றான்.
குண்டம்மா முதலமைச்சர் மேடையில் நின்று அணிவகுப்பை கறுப்பு பூனைகள் புடை சூழ பார்வையிட்டு கொண்டிருந்தார். போலிஸ் அணி வகுப்பு முதல்வர் மேடையருகே வந்தது.
“படார் படார் ....டமார் டமார்” என்று பூட்ஸ் கால்கள் சத்தம் காதை கிழித்தது. சாமிநாதன் தூப்பாக்கியை நேராக நீட்டி, மடக்கி தரையில் அடித்து, நேராக நிமிர்த்தி சல்யூட் அடிக்க தூப்பாக்கியை உயர்த்திய பொழுது, கை பிசகி பயடெட் கத்தி முகத்தில் உராசி, கத்தி முனையில் பெரிய ஓட்டு கடாமீசை ஒட்டி கொண்டு கீழே விழ்ந்தது. இக்காட்சி கண்டு அனைவரும் அலறினார். குண்டம்மா பயத்தில் வீல் என அலறினாள்.
உடனே பட பட வென்று கறுப்பு பூனைகளின் இயந்திர துப்பாக்கிகள் வெடிக்க சாமிநாதன் உடல் சல்லடையாக குண்டுகளால் துளைக்கப்பட்டது. கடாமீசை தூரத்தில் மண்ணில் வீழ்ந்தது. அது அவனை போல் துடிக்காமல் வீழ்ந்து கிடந்தது.
மறு நாள் அனைத்து தினசரிகளிலும் நாலுபத்தித் தலைப்பு செய்திகள் வந்தன.
“மாறுவேடத்தில் கடாமீசையுடன் வந்த
“மாறுவேடத்தில் கடாமீசையுடன் வந்த
தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
மயிரிழையில் முதல்வர் தப்பினார்”.
3
சமர்ப்பணம் : பொய் வழக்கில் கைது செய்ய மப்டியில் இரு போலிஸ்காரர்கள் எனது அறைக்கு வந்தனர். “ நீங்கள் யார் என்று கேட்டேன். மீசையை பார்த்தா தெரியவில்லையா” என்று புகழ் பெற்ற வாசகத்தை எனது மரமண்டையில் ஆணி போல் அடித்து ஏற்றிய அந்த இரு போலிஸ்காரர்களுக்கு அடியேனின் சிறுகாணிக்கை.
மீசை குறித்த இந்தக் கதை காவல்துறையை மட்டுமல்ல, ஒரு வகையில் தமிழ்க்கலாச்சாரத்தின் ஒரு போலித்தனத்தையும் வெகுவாக கிண்டல் செய்கிறது. தொடர்ந்து உங்கள் சிறுகதைகள் ஒவ்வொன்றும் மிகச்சிறப்பாக நம் வாழ்வின் பல அபத்தங்களையும், ஆச்சர்யங்களையும், ஆபத்துக்களையும், ஒரு சமூக கோபத்துடன் வெளிப்படுத்துகிறது. சுயஅனுபவங்கள், சிந்தனைகள் வழிநின்று, இடைவிடாத தொடர்ந்த வாசிப்பும், எழுத்தும் இன்னும் உங்கள் நடையை செழுமைப்படுத்தும், தொடர்ந்து பல நல்ல அனுபவங்களை சிறுகதைகளின் வாயிலாக தரும் உங்களின் படைப்பாற்றல் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் ஆலோசனைகளை நிச்சயம் எடுத்து கொள்வேன்
ReplyDelete