எந்த மனித மொழியும் புனிதமானது அல்ல
(மரபியல் மற்றும் பரிணாமவியலின் வளர்ச்சிப் படிநிலையே மொழி) – நோம் சாம்ஸ்கி
நேர்காணல் : மரியன் லாங், வெலரி ராஸ்
தமிழில்: இரா. நடராசன்
தமிழில்: இரா. நடராசன்
நோம் சாம்ஸ்கி ஒரு மொழியியல் விஞ்ஞானி. அரசியல் அரங்கில் ஐன்ஸ்டீனைப் போலவே தன்னை ஒரு இடதுசாரியாக அணிவகைப் படுத்துவதில் தயங்காதவர். அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோத அம்சங்களைத் தோலுரிக்கத் தவறாத அமெரிக்க அறிஞர் என்பதில் முன்னுதாரணமாக இருப்பவர். ஆனால் முதலில் அவர் ஒரு தேர்ந்தமொழியியல் விஞ்ஞானி. தனது இருபத்தெட்டு வயதில் 1956ல் தகவல் தொடர்பு கோட்பாட்டின் பிரதான விதியான உயிரிமொழி சிக்கலாய கட்டமைப்பு விதி (Bio-linguistic Framework Concept) யையும் இயல்பார்ந்த மொழி கருத்துரு (the intimateness hypothesis) வையும் முன்வைத்தவர். இதன் மூலம் ஒருபுறம் சர்வதேச கணினி மொழியாக்கத்திற்கான முதல் படியை எடுத்து வைக்க உதவிய நோம் சாம்ஸ்கி, மனிதனால் கண்டடையப்பட்ட ஆயிரக்கணக்கான மொழிகளின் புனிதத்துவத்தை உடைத்து மொழியின் பரிணாம தோற்றவியல் குறித்த அறிவியல் சித்தாந்தத்தையும் நிறுவமுடிந்தது. அவ்வகையில் நோம் சாம்ஸ்கி மொழியியலின் டார்வினாக போற்றப்படுகிறார்.
அவ்ரம் நோம் சாம்ஸ்கி (Avram Noam Chomsky) 1928ல் திசம்பர் 7 அன்று பிலெடல்ஃபியாவில் பிறந்தவர். அவரது தந்தை வில்லியம் சாம்ஸ்கி ஹிப்ரு மொழி வல்லுனர். தாய் எல்சி சிமொனொஃப்ஸ்கி குழந்தைகளுக்கான எழுத்தாளராக ஹிப்ரு இலக்கியத்தில் பெயர் பெற்றவர். நோம் சாம்ஸ்கி சிறுவனாக இருக்கும் போதே தனது தந்தையின் மத்தியகால ஹிப்ருமொழி பற்றிய முனைவர்பட்ட ஆய்வைப் படித்து சரிபார்த்தவர். இதன்மூலம் மொழியியல் குறித்த தனது ஈடுபாட்டை ஆரம்பகாலமுதலே கட்டமைத்துக் கொண்டார். 1955ல் மாசெட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) யின் மொழியியல் துறையில் பணியாற்றியபோது மொழியியல் கட்டமைப்பியல் (அல்லது அமைப்பியல்) குறித்து தனது சர்ச்சைக்குரிய புதிய சித்தாந்தங்களை வெளியிட்டவர். உலகமொழிகள் அனைத்திற்குமான ஒரு பொது இலக்கணம் செயல்படுவதை சாம்ஸ்கி அடைந்தபோது மொழிகளின் புனிதத்துவம் உடைபட்டது. நடத்தையியல்(Behaviourism) உளவியலையும் சேர்த்து முடிவுக்கு கொண்டு வந்த மொழி கட்டமைப்பு சார்ந்த மரபியல் மற்றும் பரிணாமவியல் இணைப்பை நிகழ்த்திய சாம்ஸ்கி மொழி, அதிகாரத்திற்கு எப்படி சேவை செய்கிறது என்பதை அறிவியல் முறையில் நிறுவியவர். டிஸ்கவர் அறிவியல் இதழுக்காக அவர் வழங்கிய அறிவியல் நேர்காணல் இது. அடிக்கடி அமெரிக்க அதிகாரத்திடம் மோதும் அவர் 1967 வியட்நாம் யுத்தத்தின் போது பெண்டகன் எதிர்ப்பு அரசியல் பேரணியில் கலந்துகொண்டு முதல்முறையாக கைதுசெய்யப்பட்டார். இதன்மூலம் உலகப்போர்களுக்கு பிந்திய உலகில் அரசை நேரடியாக விமர்சித்து அதற்காக கைது செய்யப்பட்ட முதல் விஞ்ஞானி ஆனார் நோம் சாம்ஸ்கி. இந்த நேர்காணலில் தனது அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவாகப் பகிர்கிறார் 86வயதாகும் இந்த மூத்த விஞ்ஞானி.
கேள்வி: மனிதமொழி தனித்தன்மையானது என்கிறீர்கள். நம்மை தனித்தெடுப்பது எது?
பதில்: மனிதர்கள் ஏனைய அனைத்துவகை உயிரினங்களிடமிருந்து வேறுபடும் அதே சமயம், தனது சக மனிதர்களோடு பெரும்பாலும் வேறுபடுகின்றனர். ஆனால் மொழி என்று வருகிறபோது அனைவரும் ஒன்றே என்றாகி விடுகிறது. உதாரணமாக அமேசான் காடுகளில் பிறந்த ஒரு வேட்டை மரபினரின் குழந்தை இங்கே போஸ்டனில் வளர்கிறது என்றால், மொழித் திறன்களைப் பொறுத்தவரை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும்போது வேறுபடாது. இங்கிருந்து ஒரு குழந்தை அமேசானில் வளர்ந்தாலும் அதேதான். இதுதான் சிறப்புத் தன்மை. மனிதனால் கையகப்படுத்தப்பட்ட இந்தத் திறன் கலாச்சாரங்களின் கூறாகவும் நமது கற்பனை-அறிவுத் திறன் என பலவாறாக விரிகிறது. எப்படித் திட்டமிடுகிறோம், எப்படி கலையில் படைப்பாக்கம் செய்கிறோம். சிக்கல் மிகுந்த சமூகங்களை எப்படி உருவாக்குகிறோம் என்பதை எல்லாம் மொழி தீர்மானிக்கிறது. தவிர ஏனைய விலங்குகள் போலன்றி மனிதன் தனக்குள் தானே எப்போதும் எதையும் பேசியபடியே இருப்பதை நிறுத்த முடிவதில்லை. உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதை நிறுத்த எவ்வளவு முயன்றாலும் முடிவதே கிடையாது.
கே: எப்போது… எப்படி இந்த மொழி குறித்த ஆற்றல் மனிதனுக்கு ஏற்பட்டது?
ப: புதைபொருள் ஆய்வின் ஆவணங்களை உற்றுநோக்கும்போது ஒருவித படைப்பாக்க திடீர் எழுச்சி (Creative explosion) ஒரு குறுகிய சன்னலாக இன்றிலிருந்து 1,50,000 வருடங்களுக்கும் 75,000 வருடங்களுக்கும் இடையே வரலாற்றில் முன்பு நிகழ்ந்துள்ளது. திடீரென்று ஒரு எதேச்சையான பெருவெடிபோல படைப்பாக்க எழுச்சி கிளம்பி, சிக்கலான கலைவடிவங்கள்; சமிக்ஞை முறை பதிவுகள்; வான்நிகழ்வுகளை அளத்தல், பதித்தல்; சிக்கல்மிகு சமூக அடையாள கட்டமைப்புகளை உருவாக்குதல் – இப்படி.. இந்த திடீர் எழுச்சியை வரலாற்றுக்கு முந்தைய மனித சமூகத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் விஞ்ஞானிகள் வல்லுனர்கள் திடீரென்று தோன்றிய தகவல் தொடர்பு எனும் மொழிவழி எழுச்சியோடே தொடர்புபடுத்துகிறார்கள். இது மனித உடற்கூறு மாற்றமும் அல்ல. ஓசை எழுப்புதல் மற்றும் செவிப்புலன் குறித்த உடல்நிலை 600000 வருடங்கள் முன் வரை எந்த மாற்றமும் அடையவில்லை. புலனுணர்வு மற்றும் அறிதல் சார்ந்து ஒருவித ஒருங்கிணைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கே: உங்களுக்கு மனிதமொழிகளின் இலக்கணம் அதன் தோற்றம் குறித்த ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
ப: இளம்வயதிலிருந்தே என் தந்தையோடு சேர்ந்து நான் ஹிப்ருமொழி இலக்கியப் பிரதிகளை ஆய்வுநோக்கில் வாசித்துப் பழகினேன். 1940 வாக்கில் அவர் முனைவர்பட்டம் வாங்கியபோது இது நடந்திருக்க வேண்டும். பிலெடெல்பியாவின் ஒரே ஹிப்ரு கல்லூரியான டிராப்சி கல்லூரி அது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். வரலாற்றில் மத்தியகால ஹிப்ரு இலக்கணம் பற்றியதே அவரது ஆய்வு. அவரது ஆய்வு அறிக்கையை நான் பிழைத்திருத்தம் செய்தேனா என்பது தெரியாது. ஆனால் நான் அதை முழுமையாக வாசித்தேன். பொது இலக்கணம் குறித்த அடிப்படைகள் அங்கிருந்து கிடைத்ததுதான் என்பதை மறுக்க முடியாது. இலக்கணம் கற்றல் என்பது ஓசைகளை ஒருங்கிணைத்தல், கால-சொற்களை அறிதல், சொற்களின் பட்டியலைத் தயாரித்து அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்தி எப்படி அர்த்தம் தருகின்றன என்பதை ஆராய்தல்.
கே: மொழியியல் அறிஞர்கள் வரலாற்று இலக்கணம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட விளக்கமான இலக்கணம் என இரண்டாகப் பிரிக்கிறார்களே. இவை இரண்டுக்குமான வேற்றுமை என்ன?
ப: வரலாற்று இலக்கணம் என்பது உதாரணமாக மத்தியகால ஆங்கிலத்திலிருந்து நவீனகால ஆங்கிலம் எப்படி வளர்த்தெடுக்கப்பட்டது என்பதை ஆய்ந்ததில் எப்படி ஜெர்மானிய, ஆங்கிலோ சாக்ஸன் வழி முற்கால இந்திய – ஐரோப்பிய வழியில் மத்தியகால ஆங்கிலம் தோன்றியது என்றும் தொடர்வது… யாருமே இப்போது பேசாத எழுதாத அந்த மொழி வகையை ஆய்வின் மூலமே நம்மால் கட்டமைக்க முடியும். மொழிகள் எப்படி காலஅடிப்படையால் வளர்ச்சியுற்றன என்பதை பரிணாமவியலின் ஒரு அங்கமாக ஆராய்தல் வரலாற்று இலக்கண வழி. விரிவு-இலக்கணம் என்பது தற்போதைய மொழியின் சமூக இனக்கூறுகள் தனிமனிதக் கூறுகள் விதிகள் என விரிகிறது. பரிணாமவியலுக்கும் உளவியலுக்குமான வேற்றுமைதான்.
கே: உங்களது தந்தை காலத்து மொழியியல் வல்லுனர்கள்… அவர்களது வழிமுறை எப்படி இருந்தது?
ப: அவர்கள் களப்பணி செய்வதையே பெரிய ஆய்வுகளாகக் கருதியவர்கள். உதாரணமாக ஒருவர் செரோக்கி மொழி இலக்கணத்தை எழுத அந்தமொழி பேசும் தகவலாளர்கள் எனும் பண்பாட்டு மக்களிடம் சென்று அதுகுறித்துப் பதிவுகளை மேற்கொள்தல். கேள்விகளைக் கேட்பது பதில்களைப் பெறுவது.
கே: எந்தமாதிரி கேள்விகளை மொழியியலாளர்கள் எழுப்புவார்கள்?
ப: உதாரணமாக நீங்கள் அகழ்வாராய்ச்சி மொழியியல் அறிஞர், என் மொழியைப் பற்றி ஆராய, சீனாவிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றால், முதலில் நீங்கள், நான் என்ன மாதிரி ஓசைகளை எழுப்புகிறேன் என்பதைப் பார்ப்பீர்கள். பிறகு இந்த ஓசைகள் ஒரு கோர்வையாகி எப்படி வாக்கியங்கள் பிறக்கின்றன என கேட்பீர்கள். நான் Blink என ஏன் சொல்கிறேன். அதையே brick என்று ஏன் சொல்லவில்லை… இப்படி. ஓசைகளின் தோற்றுவாய் என்ன, இந்த ஓசைகள் ஒன்றாகித் தரும் அர்த்தம் என்ன? அப்படி வாக்கியக் கட்டமைப்பை ஆய்வு செய்தால் அங்கே இறந்தகாலத்தைக் குறிக்கும் வினைச்சொல் உள்ளதா… உள்ளதென்றால் அது வினைச்சொல் மூலத்திலிருந்து வந்ததா.. இல்லையா.. இப்படி கேள்வி மாற்றி கேள்வியாகக் கேட்டுக்கொண்டே போவீர்கள்.
கே: இந்த முறையை முடிவுக்கு கொண்டுவந்தவர் நீங்கள். இந்த முறையை ஏன் எதிர்த்தீர்கள், உங்களது முறையை எப்படி அடைந்தீர்கள்?
ப: நான் அப்போது பென் (penn) னிலிருந்தேன். எனது இளம் அறிவியல்பட்ட ஆய்வுப் பொருளுக்காக நான் களப்பணி செய்ய நேர்ந்தது. ஹிப்ரு பேச்சுமொழியின் நவீன இலக்கணம் எனது தலைப்பு. நாங்கள் எப்படி ஆய்வுசெய்யக் கற்றோமோ அதே வழியில் நான் தொடங்கினேன். எனக்கு ஹிப்ருமொழியின் அனைத்து வித ஓசை பாஷைகளும் நன்றாகத் தெரியும். ஒரு ஹிப்ரு மொழி பேசும் தகவலாளர் (informent) எனக்கு கிடைத்தார். நானும் தயாரிக்கப்பட்ட கேள்விகளுடன் தொடர்ந்தேன். ஆனால் ஒரு காலகட்டத்தில் எனக்கு அது மிகுந்த அபத்தமாகப்பட்டது. ஏனெனில் அவையனைத்திற்கும் எனக்கு பதில் தெரியும்… போலியாக ஒரு நாடகம் போல நான் கேள்விகளை கேட்க வேண்டி இருந்தது. அந்த 1950களில் ஹாவர்டில் ஒரு மாணவனாக இருக்கும்போதே அந்த முறையை நான் கைவிட்டிருந்தேன். மொழி என்பது விலங்குகளை சர்க்கஸில் தின்பண்டங்கள் கொடுத்து பேசப் பழக்குவது போல செய்யப்படும் மனித நடத்தையியல் சார்ந்த செயல்பாடு என்றுதான் உலகமே (நான் உட்பட) அப்போது நம்பிக்கொண்டிருந்தது. அதுவேறு மாதிரியாக இருக்க முடியும் என எனது உயிரியியல் பரிமாணமவியல் வாசிப்பு எனக்குப் புகட்டியது. டார்வினியத்தின் நியாயங்களை உண்மை நிலையை முழுமையாக ஏற்ற நான் மொழியியலுக்கு வெளியே எனது அறிவியல் வாசிப்பை எடுத்துச் சென்றிருந்தேன். மொழியை அதன் தோற்றத்தை மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கட்டத்தில் வளர்சிதை மாற்ற விதிக்குள் இயற்கை தேர்வுக்குள் எங்கே பொருத்துவது என்பது எனது சவாலாக இருந்தது.
கே: இதை எப்படி தீர்த்து வைத்தீர்கள்? உங்களது கோட்பாடான ‘உயிரி-மொழியியல் உருவரை’யை விளக்க முடியுமா?
ப: நாங்கள் மிகவும் அடிப்படையான விஷயத்தை பரீசீலிக்கத் துவங்கினோம். மொழி என்பது எண்ணங்களின் எண்ணிலடங்கா வெளிப்பாடுகளின் ஓசைகட்டமைப்பு என்பதிலிருந்து எங்கள் பயணம் தொடங்கியது. கவனத்தை ஈர்க்கும் முகபாவம் அதற்கேற்றபடி தொண்டைக் குழியிலிருந்து வெளிவரும் உணர்வு சார்ந்த ஓசைகள். எனவே இந்த ஒசைகள் கட்டுமானம்பெற்று எண்ணங்களை ஒருவருக்கு ஒருவர் பகிரும்போது இரண்டு வேறு வேறு செயல்பாடுகள் நடக்கின்றன. ஒன்று ஒசைகட்டமைப்பு. மற்றொன்று அது எண்ணங்களோடு இணைத்தல். அதற்கு ஒரு தோற்றுவிக்கும் செயல்முறையும் அதே சமயம் எண்ண இணைப்பு உயிரி செயல்பாடும் தேவை. எண்ணங்களின் தோற்றுவாய் நம் உணர்வு நரம்புகள். நாக்கின் உட்கட்டமைப்பு உள்நாக்கின் அசைதிறன் இவற்றின் கூட்டு செயல்பாடாக ஒருவித ஓசைசெயல்பாடாக – மனிதஇன புரிதல். ஓசை -உணர்திறன் என ஒரு முழு வட்டம் தான் மொழிகளைத் தகவல் ஊடகமாக மாற்றி இருக்க முடியும். இதுவெறும் நாகரிக வளர்ச்சிக்கட்ட செயல்பாடு அல்ல. மாறாக மனித உடற்கூறியல் பரிணாமத்தோடு மொழியியல் இணைந்தது. அங்கிருந்துதான் உயிரி மொழியியல் எனும் உருவரை தொடங்கியது. இது மொழியை மானுட உயிரி இயலின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. வெறும் நாகரிக சமூக செயல்பாடாக அல்ல. உளவியலை மரபியலை பரிணாமவியலை ஒரே கோட்டில் இணைக்கும் கோட்பாடு அது.
கே: நீங்கள் உலகமொழிகள் அனைத்திற்குமான உலகளாவிய – இலக்கணம் என்பதை முன்மொழிகிறீர்கள். அதை விளக்க முடியுமா?
ப: இது மனித மொழித்திறனின் மரபியல் கூறுகளை விவரிக்கும் அறிவியல் கோட்பாடு. உதாரணமாக நீங்கள் கூறிய கடைசி வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். அது கோர்வையாக வழங்கப்பட்ட ஏற்ற இறக்க சப்தம். ஆனால் அது ஒரு தீர்மானமான கட்டமைப்புக் கொண்டதாய் என்னால் (அதாவது கேட்பவரால்) சமிக்ஞை உடைப்பு செய்யப்படுகிறது. அந்த ஓசைக் கலவை ஒரு எண்ணத்தைப் பதிவுசெய்யும் உணர்வு சார்ந்த வெளிப்பாடாக உள்ளது. நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள் என்பதை உணர்த்தும் அந்த ஓசைகளின் ஒன்றிணைவு எதைச்சொல்ல வரவில்லை என்பதையும் சேர்த்தே உணர்த்துகிறது. இது எப்படி மனிதனுக்கு சாத்தியமானது? ஒன்று இது ஒரு அற்புதம். அல்லது உங்கள் உடலின் உட்கட்டமைப்பில் அடிப்படை விதிகளின் கூறுகளைத் தானே உருவாக்கிக்கொள்ளும் அமைப்பு இருக்க வேண்டும். நான் அதை அற்புதம் என நினைக்கவில்லை.
கே: ஆக மொழி என்பது வெறும் சமூக நாகரிக அம்சம் மட்டுமல்ல. அது ஒரு அற்புதம் எனும் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கை வாதத்தையும் உங்களது அறிவியல் உடைக்கிறது. இதற்கு கிளம்பிய எதிர்ப்பை பற்றிக் கூறுங்கள்.
ப: முதலில் மொழியியல் அறிஞர்கள் உட்பட அனைவருமே அதை கடுமையாக விமர்சித்தார்கள்.. அல்லது கண்டுகொள்ளாமல் தூக்கியெறிற்தார்கள். உங்களது வளரும் சூழல்படி நீங்கள் எதுவும் ஆகலாம் எனும் சித்தாந்தத்தை முன்மொழிந்த நடத்தையியல் அறிஞர்களான ஸ்கின்னர் போன்றவர்களின் பைபிள் பற்றுகளை இந்த கோட்பாடு குறித்த அவர்களது விமர்சனம் தோலுரித்தது. பரிணாமவியலின்படி நிலையில் மரபியல் முறைப்படி உருவான மனித இனத்தின் பொது அம்சமான மொழி ஒரு பகுதியில் ஹிப்ருவாகவும் ஒரு பகுதியில் அராபிக்காகவும் பரிணமிக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு ஆமைக்கு குரல் கட்டையாகவும் காலோபாகஸ் தீவில் ஒரு ஆமைக்கு குரல் சன்னமாகவும் இருப்பது போலத்தான். எனவே எந்த மொழியும் புனிதமானது அல்ல.
இதை ஏற்கமுடியாத தேவலாயமும் இதர மதகட்டமைப்புகளும் இக்கோட்பாட்டை எப்படி ஏற்கமுடியும். எனது கோட்பாட்டிற்கு அவர்கள் இயல்பார்ந்த மொழி கருத்துரு என பெயரிட்டு அதற்கு எதிராக பக்கம் பக்கமாக எழுதித்தள்ளினார்கள். எழுதிப் பேசி விவாதித்து… இறுதியில் தீர்வுகளை அறிவியல் அடுக்கியபோது ஒரளவு மவுனமாகிப் பிறகு என் அரசியல் நிலைபாடுகளுக்காக என்னை விமர்சிப்பது என பாதை மாறினார்கள்.
கே: அறிவியல் இப்பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்கிறது?
ப: இதை இரண்டு விதமாக உயிரிஇயல் தீர்க்கிறது. மூளை குறித்த ஆய்வுகளை நாம் முதலில் குறிப்பிடலாம். ஒரு குழந்தை மொழியை எப்படி கற்கிறது. தேவதைக் கதையில் சபிக்கப்பட்ட தவளை, இளவரசி தொட்டதும் இளவரசனாக மாறும் என்பதை அதன் மூளை எப்படி அடைகிறது? ஏற்கிறது? தவளையை ஒரு இளவரசனாகக் கருததும் படைப்பாக்க கற்பனாவாதம் எப்படி மொழியால் கட்டமைக்கப்படுகிறது? மிலானில் இருகுழுக்களிடம் அபத்த மொழியால் சிதைந்த கட்டமைப்புகளைக் கொண்ட அவர்கள் அறியாதமொழி ஓசைகள் திரும்பத்திரும்ப வழங்கப்பட்டபோது… அவர்கள் அறியாத மொழி ஓசைகள் கோர்வையைக் கொண்டு புதிய மொழி ஒன்றைக் கட்டமைத்தார்கள். மனித மூளை நிபுணர்களான நரம்பியல் விஞ்ஞானிகள், தலையில் பலத்த காயம்படும் நோயாளிகள் வார்த்தைப் பிதற்றல்கள் செய்வது எதனால் என ஆராய்ந்து மூளையின் குறிப்பிட்ட நரம்பு நியூரான்கள் பாதிக்கப்படும்போது குறிப்பிட்ட சில மொழித்திறன்களை மனிதர்கள் இழப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
கே: மரபியல் இதை எப்படி அணுகுகிறது. ஏதாவது தீர்வுகள் உங்கள் கோட்பாட்டிற்கு ஆதரவாக உள்ளதா?
ப:FoxP2 எனும் மரபணுவைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். இந்த ஜீன் நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்த மரபணுவில் செயலிழப்பு ஏற்படும்போது மொழிவரைவுகளைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றும் ஆற்றலை ஒருவர் இழந்துவிடுகிறார். உங்கள் முக நரம்புகளை, வாயை, நாக்கை உள்ளிழுத்த காற்றை ஓசைப்படுத்தும் போது செயல்பட வேண்டிய முகஅமைப்பு மாற்றத்தை இந்த FoxP2 தீர்மானிக்கிறது. இந்த மரபணு சிம்பன்சிக்கும் கரடிக்கும் கூட உள்ளது. ஆனால் மனிதருக்குள் இது தீவிரப்பட்டு சிந்தனாபூர்வமாக செயலூக்கம் பெற்றது ஏன் என்பதே தற்போது தொடரும் ஆராய்ச்சி. இது முழுமையாக மொழியியலின் அடிப்படைப் பிரச்சனையை தீர்த்துவைத்து விடாது என்றாலும் இது போன்ற ஆரம்பகால முயற்சிகளே கூட மொழியியலை அகழ்வாராய்ச்சி, மரபியல், பரிணாமவியல் என இணைத்துவிடுகிறது.
கே: மொழிதான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது என்பதை அறிவியல், எப்படி அணுகுகிறது?
ப: மனித வளர்ச்சியியல் (anthropology) மொழியின் பிறப்பே தலைமைப் பண்புகள், குடும்பத்தின் தோற்றம், ஆதிக்க இனக்குழுக்களின் உருவாக்கம் இவற்றுக்கு காரணம் என்பதை நிரூபிக்கிறது. இன்று அதிகாரத்தை தீர்மானிப்பது மொழியாகவே உள்ளது. தொழில்நுட்பம் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட இந்த 21ம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்தும் மொழி எது என்பது அதிகாரமையத்தை தீர்மானிக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தைக் கைப்பற்றும் அரசு, நுகர்வுக்கலாச்சார காலத்திலும் தனது அதிகாரத்தை மறைபொருளாகத் திணிக்க மொழியை ஒரு ஆயுதமாகப் பிரயோகிப்பதைப் பார்க்கிறோம். மொழியைத் தனக்கு எதிராக உருவாகும் அமைப்புகளை வேவு பார்க்கவும் அதே அதிகாரத் தலைமையைப் பயன்படுத்த முடிகிறது. வெறும் குறியீடுகளாலேயே ரகசியத் தகவல் பரிமாற்றம் ஒன்றை உலகயுத்தங்கள் சாத்தியமாக்கிய பின்னணியில் பண்டகனிலிருந்து தொலைக்கோள் வழியே புவியின் ஒவ்வொரு மனிதனின் அசைவையும் பதிவுசெய்யுமளவு அதிகாரக்கட்டமைப்பு உருவெடுக்கும்போது நாம் எதைப் பேசவேண்டும் எந்த மொழியில் பேசவேண்டும் என்பதைக் கூட அவர்களால் தீர்மானித்து அமல்படுத்த முடியும்.
நன்றி:http: //discover magazine.com/
http://maattru.com/pp/?p=388
No comments:
Post a Comment