Saturday, October 25, 2014

பேராசிரியர் கோ.கேசவன்: தமிழக திறனாய்வு வரலாற்றில் சுடரும் துருவ விண்மீன்!தோழர் கோ.கேசவன் காலமாகி 15 ஆண்டுகள் சென்று விட்டன. இன்றைக்கு கார்ப்பரேட் பன்னாட்டு கம்பெனிகளின் கொள்கை நலன்களுக்கான இந்துத்துவா பாசிசத்தின் நரேந்திர மோடி ஆட்சி டெல்லியில் நடைபெற்று வரும் சூழலில் பேராசிரியர் கோ.கேசவனின் வாழ்க்கையை, படைப்புகளை நினைவு கூர்வதும், திறனாய்வதும் அவசியமானதொரு பணியாகின்றது.

நுகர்வு வெறியும், சுயநலமும், தன்னகங்காரமும் உள்ள தமிழக அறிவு இன்று மேலோங்கி உள்ளது. தான், தன்குடும்பம், தன் வாழ்வு என்று தாழ்ந்து தாழ்ந்து பிள்ளைப் பூச்சியாய் கசிந்து போவதான சூழலில் பரந்து விரிந்து மானுட வாழ்க்கை கண்ணோட்டத்துடன் தன்னை முக்கியப்படுத்திக் கொண்டவர் தோழர் கோ.கேசவன்.

தோழர்.கேசவன் முதுகலைப்பட்டம் பெற்று இரண்டாண்டுகள் மொழி பெயர்ப்பாளராகவும், பின்பு வாழ்நாள் முடியும் வரை தமிழ்ப் போராசிரியராகவும் பணியாற்றியவர். ஆரம்ப நாட்களில் தி.மு.க அனுதாபியாக, இருந்து பின்பு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர், எழுபதுகளின் ஆரம்பத்தில் வளர்ந்த வானம்பாடி இலக்கிய இயக்கம் தெளிவான அரசியல் வழிகாட்டுதலும், தலைமையும் இன்மையால் தேய்ந்து நெருக்கடி கால கட்டத்தில்(1975) மறைந்து போனது. இத்தகைய பின்னணியில் நெருக்கடி நிலையை எதிர்த்து, பிள்ளை பாண்டியன் என்ற பெயரில் சில கவிதைகளை எழுதினார். அடக்குமுறை உச்சத்தில் இருந்த நெருக்கடிநிலையை விமர்சித்து எழுதிய சிலரில் கேசவனும் ஒருவர் என்பது பதிவு செய்ய வேண்டிய தகவல் ஆகும். இந்தப்பண்பு அவர் வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தது. 

ஆரம்பத்தில் இந்திய கம்யூஸ்ட்டு கட்சி {மார்க்சிஸ்ட்}யிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து கேசவன் பணியாற்றினார். அப்பொழுது எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1979இல் 'மண்ணும் மனித உறவுகளும்' என்ற நூலாக வெளியிடப்பட்டது. பரவலாக பாராட்டப்பட்ட இந்நூல் கேசவனுக்கு மார்க்சிய ஆய்வாளர், கைலாசபதியின் சீடர் என்ற பெருமைகளைத் தேடித் தந்தது. பின்பு சி.பி. எம்.மின் திரிபுவாத நிலைபாடுகளை உணர்ந்து அதிலிருந்து விலகினார். புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியான இ.க.க(மா.லெ) (மக்கள் யுத்தம்) உடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

இயக்கத்தின் தேவைகளை ஒட்டி மாரிஸ் கான் போர்த்தின்-"இயக்கவியல் பொருள் முதல்வாதம்", ஜார்ஜ் தாம்சனின் "மனித சமூகச் சாரம்" போன்றவைகளை மொழி பெயர்த்தார். புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவராகவும், செந்தாரகை ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்து புரட்சிகரப்பணிகளை ஆற்றினார். செந்தூரன் என்ற புனைபெயரில் ஏகாதிபத்திய - நிலவுடைமை கருத்துக்களையும் திரிபுவாத தத்துவங்களையும் அம்பலப்படுத்தி எழுதினார்.

தொடர்ந்து சமரன், தோழமை, மக்கள் தளம், பொதுவுடைமை ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுக்களிலும் இருந்து பங்களிப்பு செய்தார். மக்கள் பண்பாட்டு பேரவையின் பல கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, மக்கள் பண்பாடு இதழிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினார்.
90களில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவம் உட்பட பல்வேறு பிற்போக்கு கருத்துகளை முறியடிக்க அயராது உழைத்தார். தனது சர்க்கரை நோயையும் பொருட்படுத்தாது கடுமையாக பாடுபட்டதால் தோழர் கேசவன் 16.9.1998 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

புரட்சிகர ஆளுமை
நக்சல்பாரி பாதையை தனது அரசியல் வழியாக கோ.கேசவன் ஏற்றவுடன் அவர் எழுதிய நூல் "பள்ளு இலக்கியம் ஒரு சமூகப்பார்வை" என்பதாகும். தலித் மக்கள் பற்றி விரிவாகப் பேசும் இந்நூல் எழுத தோழருக்கு உந்து கோலாக இருந்தது நக்சல்பாரி அரசியல் கண்ணோட்டமே ஆகும். இந்நூலில் தலித் மக்கள் விடுதலை என்பது பாராளுமன்ற சனநாயக மாயைகளைத் தகர்த்து, ஆயுதம் தாங்கி உழவர் போராட்டமாக மலரும்போது மட்டுமே சாத்தியம் என்று கேசவன் தெளிவாக விளக்குகிறார். இதற்காக காவல்துறை கேசவனை விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்க உள்ளாகியது. கேசவன் அடக்குமுறையை உறுதியாக எதிர்கொண்டார். இந்தத் தெளிவும் உறுதியாக தோழரிடம் இறுதிவரை இருந்ததை அவரின் சாதியம், தாழ்த்தப்பட்டோரும் சமூக விடுதலையும் நூல்களைப் படிக்கும் வாசகர்கள் அறியமுடியும்.

புரட்சி பண்பாட்டு இயக்கம் ஆரம்பித்து பின்பு அதன் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு 'இலக்கிய விமர்சனம் ஒரு மார்க்சிய பார்வை' என்ற நூலை பேராசிரியர் கோ.கேசவன் எழுதினார். பண்பாட்டு அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்த தோழர் சரியாகவே அதை நிறைவேற்றும் வண்ணம் அத்தளத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டார். செந்தாரகை இதழில் பல கட்டுரைகள் எழுதினார். 'நமது இலக்குகள்' என்ற தொடர் கட்டுரை நிலவுடைமை பிற்போக்குத் தனங்களை, ஏகாதிபத்திய சீரழிவுகளை மட்டும் தோலுரிக்கவில்லை..... பல்வேறு நவீன திரிபுவாத கருத்துகளையும் அம்பலப்படுத்துவதாக அந்நூல் இருந்தது. ஆய்வாளராக மட்டுமல்லாமல்..... கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் பங்கேற்று, இச்சங்கம் நடத்திய பல போராட்டங்களில் முன்னணிப் போராளியாக இருந்தது வழிநடத்தினார்.

90களில் முன்னாள் சோலிச நாடுகளின் தகர்வும் ஏகாதிபத்தியங்களின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரமும் அறிவு ஜீவிகளின் மத்தியிலும், நடுத்தர வர்க்கத்தினிடமும் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியது. கம்யூனிசத் தத்துவம், புரட்சி, சோசலிச சமூகம் என்று பலவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது. கேசவன் இந்தப் போக்குகளை எதிர்த்துப் போராடினார். "ரசியப் புரட்சி மாயையா?" என்ற நூலை எழுதினார்.

நரசிம்மராவ் காலம் தொட்டு உலகமயமாதல், தாராளமயமாதல் என்று பல விதங்களில் ஏகாதிபத்திய சுரண்டல் அதிகரித்தது. உலகமயமாதல் தலித் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது முதல் ஏகாதிபத்திய சீரழிவுத் தத்துவமான பின் நவீனத்துவம் வரை பல சரக்குகளை ஆர்ப்பாட்டமாகச் சிலர் தமிழகக் களத்தில் இறக்கி விட்டனர். தலித் மக்கள், பெண்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை இத்தத்துவ பின்னணியில் வியாக்யானம் செய்து அப்போராட்டங்களைச் சிதறடித்து நீர்த்துப் போக வைக்க முயன்றனர். தோழர் கேசவன் அதைத் தனக்கே உரிய முறையில் எதிர்கொண்டார்.
1987க்குப் பின்பு தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டதை ஒட்டி புரட்சிப் பண்பாடு இயக்கம் மறைந்து போனது. கேசவன் பணியானது சிறிது திசை திரும்பியது. ஆனாலும், மார்க்சிய அடிப்படையில் திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தலித் இயக்கம் பற்றியும், பெரியார், அம்பேத்கார், சிங்காரவேலர் போன்றோரின் பணிகள்-படைப்புகள் பற்றியும் வரலாற்று அடிப்படையிலான மதிப்பீட்டு ஆய்வு நூல்களைச் செய்தார். இவையெல்லாம் பொதுவுடைமை இயக்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விலை மதிப்பற்ற அறிவுச் செல்வங்களாக என்றும் விளங்கும்.

 இந்திய அமைதிப் படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, கொலைகளை விமர்சனம் செய்து அப்துல் ரகுமான் எழுதிய கவிதை "சுட்டுவிரல்" பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய பாடத்தில் பாடமாக இருந்தது. ..இதை பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் முத்துகுமரன் தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழுவை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நீக்கினார். அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழு உறுப்பினராக பணியில் இருந்த பேராசிரியர் கோ.கேசவன் இதை கண்டித்து தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழுவில் தீர்மானம் கொண்டுவர பேசினார். மேலும், தனது பாரதிதாசன் பல்கலைக் கழக தமிழ் இலக்கிய பாடத்திட்ட குழு உறுப்பினர் பதவியை துறந்து வெளியேறினார். சொல்லும், செயலும் ஒன்றாக வாழ்ந்தவர் பேராசிரியர் கோ.கேசவன்

சிலரின் இறப்பு இறகை விட இலேசானது என்றும், சிலரது இறப்பு மலையை விட கனமானது என்றும் தோழர் மாவோ குறிப்பிடுவார். இந்தியச் சூழலில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சூழலில் திரிபுவாத தற்கால நவீன திரிபுவாத சக்திகள், சீர்திருத்த இயக்கங்கள், ஓட்டுப் பொறுக்கும் திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் துணையோடு இந்துத்துவம் பாசிச பரிவாரங்கள் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலைமையில், ஏகாதிபத்திய சீரழித்தத்துவமான பின்நவீனத்துவம் தான் முற்போக்கானது என்று ஏமாற்றுவது முதற்கொண்டு திராவிட இயக்கமே மண்ணுகேற்ற மார்க்சியம் என்று பிழைப்பு நடத்துவது வரை உள்ள அறிவுச் சூழ்நிலையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதலியல் ஆய்வு அடிப்படையில் பல்வேறு தளங்களில் 33 நூல்களையும், இன்னும் பல கட்டுரைகளையும் எழுதிய மார்க்சிய ஆய்வாளரும், நக்சல்பாரி இயக்கத் தோழருமான தோழர் கோ.கேசவன் அவர்களின் இழப்பை மேற்கண்டவாறு மதிப்பிடுவது மிகையானது அல்ல.
"கோ.கேசவனின் திறனாய்வாளுமை" - நூல் வெளியீட்டு விழா
வரவேற்புரை: பேரா.திருமாவளவன்,
தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்
வெளியிடுபவர்: நீதியரசர் கே.சந்துரு
பெறுபவர்: தோழர் ராதாபாய் அவர்கள்
கருத்துரை:
பேரா.கோச்சடை,
பேரா. மணிகோ.பன்னீர் செல்வம்,
பேரா.கமலா கிருஷ்ணமூர்த்தி,
ஆசிரியர் தா.பாலு, (விழுப்புரம்)
எழுத்தாளர் கி.நடராசன்.
ஏற்புரை: ஜெ.கெங்காதரன்
நன்றியுரை: ஜெ.பா.தமிழ்
நாள்: 01-11-2014, சனிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம் : தமிழ் இணைய கல்விக் கழகம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்,
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்,
சென்னை.600 025..
அனைவரும் வருக! ஆதரவு தருக!!
- முரண்களரி இலக்கிய அறக்கட்டளை
98402408497, 94444 80549

 பேராசிரியர் கோ.கேசவன் நூல்களில் இருந்து...

சாதி ஒழிப்பு, தலித் அரசியல், தலித் இலக்கியம் ..பற்றி பல ஆழமான, தரவுகளுடன், காத்திரமான நூல்களை எழுதினார்..
"அரசதிகாரத்தை நடுநிலைப்படுத்தி சில காரியங்களை ஆற்றிக் கொள்கிற செயல் தந்திரத்தை எல்லாக் கால கட்டங்களிலும், கடைபிடித்துக் கொண்டே இருக்க இயலாது. ஏதேனும் ஒரு தலித் அமைப்பு அத்தகைய செயல் தந்திரத்தை மட்டுமே தொடர்ந்து கடைப் பிடிக்குமானால் அது, இறுதி நிலையில் அரசதிகாரத்தால் உள்ளிழுக்கப் பட்டுவிடும் என்பது தெளிவு..."

 சங்க காலம் பொற்காலம் என்பதும், எல்லோரும் எல்லமும் பெற்றார்கள் என்பதும், அனைவரும் சமமாக உண்டு உடுத்தி உறைந்தனர் என்பதும் சில அறிஞர்களின் அகநிலைப்பட்ட சமூக, அரசியல் விருப்பு சார்ந்த மாயக்கனவே அன்றி உண்மை யதார்த்த மில்லை என்பதை உய்த்துணரலாம்..{Magesh Ramanathan உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமூக உடமையாக இருந்தது என்கிற அர்த்தத்தில்தான் அக்கால கட்டத்தை புராதன பொதுவுடமை சமூகம் என்று குறிப்பிடுகிறார்களே தவிர, அதை ஒரு முன்னுதாரணமான பின்பற்றத்தக்க சிறந்த சமூக அமைப்பு என்கிற புகழ்பாடல்கள் எதுவும் மார்க்சிய மூல ஆசிரியர்களின் நுால்களில் கிடையாது. அது வரலாற்றுரீதியில் வளர்ச்சியடையாத மிக பிற்போக்கான சமூகங்கள், நாகரீகம் வளர்ச்சியடையாத விலங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட காலமாகவே கருதப்படுகிறது. தனியுடமையை ஒழிப்பதும் உற்பத்திச் சாதானங்கள் அனைத்தையும் பொதுவுடமையாக்குவதும் மனித சமூகத்தின் தடையற்றதும் சமத்துவமானதுமான வளர்ச்சிக்கு முன்நிபந்தனையே தவிர, அதுவே அனைத்தும் என்று புரிந்து கொள்ளக்கூடாது. உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி நிலை, அவற்றை கையாளும் மனிதர்களின் வளர்ச்சி நிலை, அச்சமூகத்தின் கருத்தியல், தத்துவார்த்த, கலாச்சார வளர்ச்சி நிலை என பலவும் அடிப்படையாகிறது. வரலாற்று விசயங்களை அக்காலகட்டத்தின் சமூக வளர்ச்சியோடு இணைத்தே புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அக்காலகட்டத்தின் அக புற அம்சங்களை நீக்கிவிட்டு கையாள்வது ஏற்புடைய ஆய்வு முறையாக இருக்க முடியாது. பண்டைய பெருமை பேசுவது எவ்வளவு தவறானதோ அதே அளவு தவறானது அவற்றை கொச்சைப்படுத்திப் பேசுவது. சரியான கோணத்தில் வரலாற்றை புரிந்துகொள்ளவும் அவற்றை ஆய்வு செய்யவும் அவற்றிலிருந்து சமகாலத்திற்கான படிப்பினைகளை பெற விரும்புபவர்களும் இத்தகைய தவறான அணுகுமுறைகளை கையாள மாட்டார்கள். தோழர் கோ. கேசவனின் ஆய்வுகள் இந்நோக்கில் பண்டைய வரலாற்றை பார்க்கும் நோக்கம் கொண்டது கிடையாது. குறிப்பாக முச்சங்கங்கள் குறித்தெல்லாம் வரலாற்று ஆதாரங்கள் குறைவு, என்கிற கருத்தை பல வரலாற்று ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அத்தகைய ஆய்வுகளை நாம் வெறுமனே கொச்சைப்படுத்தும், இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டவை என எளிய சூத்திரங்களால் ஒதுக்கித் தள்ள முடியாது.}


 இலக்கியம் என்பதைக் குறிப்பிட்ட தன்மையிலும், சமூகம் என்பதைப் பொது தன்மையிலும் காண வேண்டும். எனவே, இலக்கியத்தை விமர்சிக்கின்ரபொழுது, இந்த இரண்டின் இணைவு நிலையைச் சுட்டிக் காட்ட வேண்டும். இப்படிக்க் தான் இலக்கியத்தை விமர்சிக்க விரும்புகிறேன். . இப்படித்தான் பார்க்க வேண்டிமா எனக் கேட்டால், இல்லை என்பதே என் பதிலாகும். இது ஒர் அணுகுமுறை. ஆனால், ஏனைய அணுகுமுறைகளைக் காட்டிலும் உண்மைக்குப் பக்கத்தில் நம்மை நிறுத்தும் அணுகுமுறை என இதைச் சொல்லலாம். மார்க்சிய-லெனினியத்தை சமூகத் தத்துவமாக ஏற்றுக் கொண்டவன் என்ற முறையில் மேற்கண்டவாறே இலக்கியத்தை விமர்சிக்க விரும்புகிறேன்...No comments:

Post a Comment